தஞ்சை கூலி தொழிலாளி மனைவிக்கு ரூ.60.41 லட்சம் வரி நிலுவை.. நோட்டீஸை பார்த்து அதிர்ந்த குடும்பத்தினர்..!
Webdunia Tamil October 30, 2025 08:48 PM

தஞ்சாவூரை சேர்ந்த கூலி தொழிலாளி உதயராஜின் மனைவி சுகன்யாவுக்கு, திண்டுக்கல் வணிக வரி துறையிடமிருந்து ரூ. 60.41 லட்சம் ஜி.எஸ்.டி. வரி நிலுவை தொகையை கட்ட சொல்லி நோட்டீஸ் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல்லில் இயங்கி வந்ததாக கூறப்படும் 'எஸ்.ஜி. டிரேடர்ஸ்' என்ற நிறுவனத்தின் மூலம், சுகன்யாவின் ஆதார் மற்றும் பான் அட்டைகள் மோசடியாக பயன்படுத்தப்பட்டு, ரூ. 1.67 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளதும், அதற்கான வரி செலுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த சுகன்யா, திண்டுக்கல் வணிக வரித் துறை அலுவலகத்தில் புகார் அளித்து, தனக்கும் அந்த நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கினார். விசாரணையில், சுகன்யாவின் ஆவணங்கள் மோசடியாக பயன்படுத்தப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

எஸ்.ஜி. டிரேடர்ஸ் நிறுவனம் ரூ. 1.67 கோடிக்கு ஆந்திர மாநிலத்திற்கு பழைய இரும்பு பொருட்களை விற்று வரி ஏய்ப்பு செய்துள்ள நிலையில், இது தொடர்பாக இணைய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கச் சுகன்யாவுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.