சூடானில் மீண்டும் மனிதாபிமானத்தைக் கலங்கவைக்கும் படுகொலை நடந்துள்ளது.
வடக்கு தர்ஃபூர் மாகாணத் தலைமையகமான எல்-ஃபேஷர் நகரை கைப்பற்றிய துணை ராணுவப் படையினர் அங்குள்ள சௌதி மகப்பேறு மருத்துவமனையில் 460 பேரைச் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டுப் போர் வெடித்துள்ள சூடானில், அரசுப் படைகள் மற்றும் துணை ராணுவப் பிரிவுகள் இடையே கடந்த 2023 முதல் கடுமையான மோதல்கள் நீடித்து வருகின்றன. இந்தப் போரில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில், எல்-ஃபேஷர் நகரம் துணை ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. இதனைத் தொடர்ந்து, அங்கு மக்கள்மீது அத்துமீறல்கள் நடைபெறுவதாக ஐ.நா. மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடுமையாக குற்றம்சாட்டின.
இந்தச் சூழ்நிலையில், அக்.28 அன்று துணை ராணுவ வீரர்கள் சௌதி மகப்பேறு மருத்துவமனைக்குள் நுழைந்து சிகிச்சை பெற்ற நோயாளிகள், அவர்களது உறவினர்கள் உள்ளிட்ட 460-க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்றதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.
இந்தத் தகவலை சூடான் மருத்துவர்கள் அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேசமயம், தாங்கள் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட துணை ராணுவத் தளபதி ஜெனரல் முகமது ஹம்தான் டகலோ, சம்பவத்திற்கான விசாரணை தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் படுகொலையின் முழு விவரங்கள் இன்னும் வெளிச்சம் பார்க்கவில்லை.