
நவம்பர், டிசம்பர் மாதங்களில் வங்கக்கடலில் வலுவான புயல் உருவாக வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வடக்கிழக்கு பருவமழை வழக்கத்தை விட முன்பாக தொடங்கிய நிலையில் வங்கக்கடலில் இரண்டு முறை காற்றழுத்த தாழ்வு உருவாகி அதில் ஒன்று மோன்தா புயலாக மாறி கரையைக் கடந்தது. அதை தொடர்ந்து மழைப்பொழிவில் சற்று இடைவெளி ஏற்பட்டுள்ளது.
ஆனால் நவம்பர் 10க்கு பிறகு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாக வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் கணிதுள்ளார்.
அவரது கணிப்பின்படி, தற்போது வங்கக்கடலில் புயல் உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் உருவாவதற்கும், கடல் சார்ந்த அலைவுகளை ஏற்படுத்துவதற்கும் சாதகமான கடல் வெப்பநிலை உள்ளது. கிழக்கிந்திய பெருங்கடலில் சுமத்ரா தீவுகள் அருகே கடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம் நேர் எதிராக சோமாலியா கடல்பகுதியில் கடல் மேற்பரப்பு குளிர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த இருமுனை எதிர்மறை நிகழ்வால் கடந்த 2019ல் அரபிக்கடலில் அடுத்தடுத்து சூப்பர் புயல், அதி தீவிர புயல், மிக தீவிர புயல் மற்றும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகின. தற்போது அதே நிலையில் மீண்டும் உருவாகியுள்ளதால் வங்கக்கடலில் வலுவான புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் ஹேமசந்தர் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K