விஜய்யுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி?.. உண்மையை போட்டுடைத்த அமித்ஷா!!
TV9 Tamil News October 30, 2025 08:48 PM

விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பது குறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேட்டி ஒன்றில் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.  அவர் என்ன கூறினார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில், விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தின் தேர்தல் களத்தையே மாற்றியுள்ளது என்றே கூறலாம். அந்தளவுக்கு பெரும் கட்சிகள் அனைத்தும் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக தலைவர்கள் அனைவரும் வெளிப்படையாகவே விஜய் தங்களது கூட்டணிக்கு வர வேண்டும் என தினமும் அழைப்பு விடுத்து வருகின்றனர். அதேசமயம் பாஜக தரப்பில் நேரடி அழைப்பு விடுக்கப்படவில்லை என்றாலும், மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவித்தன. இன்னொரு பக்கம், காங்கிரஸ் தரப்பிலும் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

விஜய்க்கு ஆதரவாக பாஜக, அதிமுக:

குறிப்பாக கரூர் துயரச் சம்பவ விவகாரத்தில் அதிமுகவும், பாஜகவும் விஜய்க்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டன. விஜய் மீது எந்த தவறும் இல்லை என தமிழக அரசை மட்டுமே குற்றஞ்சாட்டி வந்தன. இவ்விவகாரத்தில் ராகுல் காந்தியே விஜய்யை அழைத்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, தனக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு காணொளி மூலம் விஜய்யும் நன்றியை வெளிப்படுத்தியிருந்தார். எனினும், தற்போது வரை விஜய் தரப்பில் இருந்து தங்களது கூட்டணி வியூகம் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருக்கிறது. அதேசமயம், ஆதவ் அர்ஜூனா தலைமையிலான குழு அனைத்து தரப்பிலும் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Also read: SIR – தமிழகத்தில் நவ. 2 நடக்கும் அனைத்து கட்சி கூட்டம்.. த.வெ.கவிற்கு அழைப்பு..

பெரும் கட்சிகள் எப்படி விஜய்யுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறதோ, அதேபோல் சிறிய கட்சிகள் பலவும் தவெகவுடன் கூட்டணி அமைத்துவிட வேண்டும் என விரும்பி வருவதாக தெரிகிறது. இதற்கு முக்கிய காரணமாக, இதுவரை எந்த கட்சியும் எடுக்காத முயற்சியாக, விஜய்யும் தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டார். தமிழகத்தில் அதிமுகவும் சரி, திமுகவும் சரி தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு சொற்ப தொகுதிகளை ஒதுக்கிக்கொள்வதுடன் நிறுத்திக் கொள்ளும், ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை யாரும் பங்கு அளித்தது கிடையாது. இந்த விஷயத்தை தெளிவாக புரிந்துக்கொண்ட விஜய், தொடக்கத்திலேயே கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பை வெளியிட்டு தனது அரசியல் வருகையை பதிவு செய்தார்.

விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய பாஜக:

தமிழகத்தில் ஏற்கெனவே, அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள போதும், தங்களது கூட்டணியில் விஜய் இடம்பெற வேண்டுமென துடித்து வருகின்றன. இரு கட்சித் தலைவர்களும் விஜய்க்கு எதிராக சிறு கருத்துக்கூட தெரிவிக்காமல் இருந்து வருகின்றன. அந்த வகையில், இந்த விவகாரத்தில் தமிழக தலைவர்கள் நிலைப்பாடு போலவே, பாஜகவின் தேசிய தலைவர்களும் உள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அளித்த நேர்காணலில், இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில், பாஜக விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. அது உண்மையா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித்ஷா, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவுப்படுத்த விரும்புகிறோம், எந்த முடிவெடுத்தாலும் NDA கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

பேச்சுவார்த்தை நடப்பதை மறுக்காத அமித்ஷா:

அப்படியெனில், விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடப்பதை மறுக்கவில்லை? என நெறியாளர் கேட்கிறார். அதற்கு அமித்ஷா, விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பதையும் நான் கூறவில்லை, என்ன செய்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, நெறியாளர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சியும் பேச்சு நடத்துகிறதே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமித்ஷா, அனைவரும் பேச முயற்சிப்பதில் என்ன தவறு என்று பதிலளித்துள்ளார்.

Also read: நவ. 5 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்.. தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை..

பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா விஜய்யுடன் கூட்டணி அமைக்க விரும்பவுதை இவ்வாறு வெளிப்படையாக அறிவித்தது தமிழக அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது. இதன் மூலம் தவெக உடனான கூட்டணியை இறுதி செய்ய அரசியல் கட்சிகள் இன்னும் வேகம் காட்டும் எனத் தெரிகிறது. அவ்வாறு கூட்டணி இறுதியாகும் பட்சத்தில், தமிழகத்தில் மூன்றாவது பலமான கூட்டணி உருவாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.