தென்னிந்திய சினிமாவின் பிரபல ஜோடியாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, நீண்ட நாட்களாக காதலில் இருப்பதாகவே பேச்சுகள் நிலவி வந்தன. தற்போது இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி, ரசிகர்களிடையே கொண்டாட்ட சூழல் நிலவுகிறது. மேலும், இந்த பிரபல ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி 2026-ல் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
‘நேஷனல் கிரஷ்’ என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா, தன்னுடைய தொழில்வாழ்க்கை மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையாலும் எப்போதும் செய்திகள் தலைப்பில் இருப்பவர். சமீபத்தில் ஒரு பேட்டியில், குழந்தைகள் குறித்து ராஷ்மிகா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அந்த பேட்டியில் ராஷ்மிகா கூறியதாவது:“நான் இன்னும் அம்மாவாகவில்லை, ஆனால் எதிர்காலத்தில் நான் அம்மாவாகும் நாள் வந்தால் என் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு காட்டுவேன். அவர்கள் பிறப்பதற்கு முன்பே அவர்களை நேசிக்கிறேன். என் குழந்தைகளுக்காக எதையும் செய்ய தயாராக உள்ளேன். அவர்களுக்காக போருக்குச் செல்ல வேண்டிய நிலை வந்தாலும் நான் தயங்க மாட்டேன். அதற்காக தேவையான உடற்தகுதியை இப்போதே பராமரித்து வருகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திருமணம் குறித்தும் ராஷ்மிகா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.“30 வயது ஆன பிறகு தான் நான் திருமணம் செய்வேன். இருபது முதல் முப்பது வயது வரை வாழ்க்கையில் கடினமாக உழைத்து, பணம் சம்பாதிக்கவும், தன்னுடைய பாதையை உறுதிப்படுத்தவும் வேண்டும். 30 முதல் 40 வயது வரை வேலை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு சமநிலையை பேணுவது முக்கியம். அதற்காகத்தான் நான் திட்டமிட்டு வருகிறேன்,” என தெரிவித்துள்ளார்.
தற்போது ராஷ்மிகாவுக்கு 29 வயது. எனவே, அவர் குறிப்பிட்டதுபோல், அடுத்த ஆண்டு 30 வயது ஆகும் 2026-இல் திருமணம் நடைபெறும் வாய்ப்பு உறுதியாக உள்ளது என ரசிகர்கள் கருதுகின்றனர்.
மேலும், நாற்பது வயதுக்குப் பிறகு வாழ்க்கை பற்றி இன்னும் யோசிக்கவில்லை என்றும், “ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு சரியான நேரம் இருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.
ராஷ்மிகா தற்போது ‘புஷ்பா 2’, ‘சிக்ரெட் ஸ்பை’ உள்ளிட்ட படங்களில் பிசியாக உள்ளார், அதே சமயம் விஜய் தேவரகொண்டா தனது புதிய ரொமான்டிக் காமெடி படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் திரையில் இணைந்த ‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே சூப்பர்ஹிட் ஆனது. இப்போது அந்த திரை ஜோடி, உண்மையான வாழ்க்கை ஜோடியாக மாறப்போகிறார்கள் என்ற செய்தி, ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சியாக மாறியுள்ளது.