கிரெடிட் கார்டு கடன்கள் அதிகரிப்பு, பணக்கார ஏழைகளாகும் மக்கள், கவலைக்குள்ளாகும் நாட்டின் எதிர்காலம்!
Vikatan November 01, 2025 11:48 AM

தொழில்துறை நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் இந்த தீபாவளிப் பண்டிகை அமோகமாகக் கடந்திருக்கிறது. காரணம், பண்டிகைக் கால உற்சாகத்தில் இந்திய மக்கள் கணக்குப் பார்க்காமல் செலவு செய்துள்ளனர், பொருள்களை வாங்கிக் குவித்துள்ளனர். இது பொருளாதார பார்வையில் வரவேற்கக்கூடியதாக இருந்தாலும், அந்தச் செலவுகளை பெரும்பாலும் கிரெடிட் கார்டுகளின் மூலம் கடனில்தான் செய்துள்ளனர் என்பது, கவலைக்குரியதாக உள்ளது.

பண்டிகைக் காலச் செலவுகள் குறித்து `பைசாபஜார்’ நடத்திய சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 42%-க்கும் மேற்பட்டவர்கள், கிரெடிட் கார்டுகளில் ரூ.50,000-க்கும் அதிகமாகச் செலவிட்டதாகக் கூறியுள்ளனர். 22% பேர் ரூ.50,000- ரூ.1 லட்சம் வரையிலும், 20% பேர் ரூ.1 லட்சத்துக்கு அதிகமாகவும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் செய்துள்ள செலவுகளில், வீட்டு உபயோகப் பொருள்கள் 25%, மொபைல்கள், கேட்ஜெட்டுகள் மற்றும் ஆக்சஸரிகள் 23%, ஆடைகள் 22%, அலங்காரப் பொருள்கள் 18%, தங்கம் மற்றும் நகைகள் 12% மற்றும் இதர பொருள்கள் 12% ஆக உள்ளன. மேலும், கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படும் அதிரடி தள்ளுபடிகளும் சலுகைகளும், தாங்கள் அதைப் பயன்படுத்த முக்கியக் காரணமாக இருப்பதாக 91% பேர் கூறியிருக்கிறார்கள். ஆக, மக்கள் ஆசைக்காகவும் ஆடம்பரத்துக்காகவும்தான் அதிகமான செலவுகளைச் செய்கிறார்கள் என்பதையும், அதிரடியான தள்ளுபடிகளும் சலுகைகளும் அவர்களைக் கடனில் பொருள்களை வாங்கத் தூண்டுவதையும் பார்க்க முடிகிறது.

‘தீபாவளிப் பரிசு’ என்றபடி ஜி.எஸ்.டி வரி குறைப்பை பிரதமர் மோடி அறிவித்தபோதே, ‘கடனில் பொருள்களை வாங்கிச் சிக்கிக்கொள்ளாதீர்கள்’ என்று பொருளாதார நிபுணர்கள் பலரும் எச்சரித்தார்கள். ஆனாலும், பெரும்பாலான மக்கள் அதைத்தான் செய்துள்ளனர்.

ஏற்கெனவே, நடுத்தர, ஏழை எளிய மக்கள் பலரும் இ.எம்.ஐ-யில் பொருள்களை வாங்கிக் குவித்து, தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியைக் கடன் கட்டுவதற்குத்தான் செலவிடுகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இதனால், அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட பணமில்லாத நிலைக்கு ஆளாகி, பலரும் பணக்கார ஏழைகளாகத்தான் வாழ்கிறார்கள். இப்படியே போனால், அதிகமான கடனால் திவாலாகும் நிலைக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

இன்னொரு பக்கம், அரசுக்கோ, தொழில்துறைக்கோ, வங்கிகளுக்கோ இதைப்பற்றி எல்லாம் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. நுகர்வு அதிகரிக்க வேண்டும், பொருளாதாரம் வேகமாக வளர வேண்டும் என்பதே அவர்களுக்கு நோக்கமாக இருக்கிறது. குறுகியகால தரவுகளைச் சொல்லி கைத்தட்டல் வாங்க நினைக்கும் அவர்கள், தொலைநோக்கில் மக்களின் முன்னேற்றம் பற்றியோ, நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படுவதில்லை.

நாம்தான் விழிப்பாக இருக்க வேண்டும்!

- ஆசிரியர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.