உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம் – சென்னையில் நாய், பூனை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
TV9 Tamil News November 01, 2025 11:48 AM

சென்னை மாநகராட்சியில் (Chennai Corporation) அக்டோபர் 30, 2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில், நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர்  பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களால் (Street Dogs) குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பிரச்னை குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாநகராட்சி கூட்டத்தில் திமுக – அதிமுக கவுன்சிலர்களால் சலசலப்பு

மாநகராட்சி கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர் சதீஷ்குமார் பேசுகையில், எனது தொகுதி 182வது வார்டாக மக்கள் வாக்களித்துள்ளனர், ஆனால் மாநகராட்சி ஆவணங்களில் அது 184 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நெமிலி கடல் நீர் உப்பு நீக்கத் திட்டத்தை கொண்டுவந்தார் என்று கூறினார்.

இதையும் படிக்க : இரவில் வீட்டில் உறங்கியபோது தீ விபத்து.. பெண் பலி! செல்போன் சார்ஜர் காரணமா?

இதற்கு ஆளும் கட்சியான திமுகஉறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பேசிய திமுக உறுப்பினர்கள், அந்த திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் தொடங்கினார் என்று எதிர்வாதம் செய்தனர். இதனால் கூட்டத்தில் சிறிய பரபரப்பு நிலவியது. பின்னர் சதீஷ்குமார் உட்பட அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் கட்டாயம்

அதன்பின் மாநகராட்சி கூட்டத்தில் முக்கிய தீர்மானம் ஒன்றாக, செல்லப்பிராணிகள், குறிப்பாக நாய்கள் மற்றும் பூனைகள் வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ஒரு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் நவம்பர் மாதம் 24, 2025 தேதிக்குள் உரிமம் பெறாதவர்கள் மீது ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தீர்மானித்துள்ளது. மேலும், மாநகராட்சி ஊழியர்கள் வீடு தோறும் சென்று ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையும் படிக்க : கரையை கடந்த தீவிர புயல்.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?

அதே சமயம், பூங்காக்கள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் நாய்களை கழுத்துப் பட்டை இன்றி அழைத்து வருவோர் மீது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளது.

சென்னையில் கடந்த சலி மாதங்களாக நாய்களால் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இப்போது நாய் மற்றும் பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் அனைவரும் அடுத்த நவம்பர் 24, 2025 தேதிக்குள் உரிமம் பெறுவது கட்டாயம்.
 உரிமம் பெறாதவர்கள் ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.