திருப்பூரில் குடும்பத்தகராரில் மனைவியை கொலை செய்துவிட்டு குழந்தையுடன் கணவன் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து ஈட்டிவீராம்பாளையம் கிராமம் ராக்கியாபட்டி பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் மணிகண்டன் (38). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி அஜிதா (30). இவர்களுக்கு திருமணமாகி கிருத்திகா என்கிற எட்டு வயது மகளும் கிருத்திக் என்கிற இரண்டு வயது மகனும் உள்ளனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு அதே பகுதியில் உள்ள அஜிதாவின் பெற்றோர் வீட்டில் மகள் கிருத்திகா தங்கி விட்டதால் மணிகண்டன், அஜிதா மற்றும் கிருத்திக் என மூவரும் இருந்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வழக்கம் போல வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆத்திரமடைந்த மணிகண்டன் அஜித்தாவை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இரண்டு வயது மகன் கிருத்திக்குடன் தப்பி ஓடி விட்டார். இன்று காலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாநல்லூர் போலீசார் அஜித்தாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் மணிகண்டனின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்பட்டி என தெரியவந்தது. இதையடுத்து கொலை செய்துவிட்டு குழந்தையுடன் தலைமறைவான மணிகண்டனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.