கேரளா மாநிலம் வர்க்கலா அருகே திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில், குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், இளம்பெண் ஒருவரை உதைத்து ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பையட்டைச் சேர்ந்த 19 வயதான ஸ்ரீகுட்டி (சோனு), தனது தோழி அர்ச்சனாவுடன் கல்வி தொடர்பாக அலுவாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு 8:45 மணியளவில் வர்க்கலாவில் ரயில் புறப்பட்டபோது, கழிவறையில் இருந்து திரும்பிய இருவரையும் பார்த்த சுரேஷ்குமார் (50) என்ற நபர், எந்தவித முன்விரோதமும் இன்றி திடீரென ஸ்ரீகுட்டியை முதுகில் உதைத்து ரயிலில் இருந்து வெளியே தள்ளியுள்ளார்.

தண்டவாளத்தில் விழுந்த ஸ்ரீகுட்டிக்கு தலையிலும் கையிலும் பலத்த காயங்கள் மற்றும் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஸ்ரீகுட்டியைத் தள்ளிய பிறகு, ரயிலின் கைப்பிடியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டதால் கடுமையான தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பிய அர்ச்சனாவையும் அந்த குடிபோதை ஆசாமி தாக்க முயன்றுள்ளார். “அவன் சோனுவை உதைத்துத் தள்ளிய அதிர்ச்சியில் நான் உறைந்து போனேன். அதன்பின் என்னையும் உதைத்தான். நான் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு கத்தினேன், மற்ற பயணிகள்தான் என்னைக் காப்பாற்றினர்” என்று அர்ச்சனா பயத்துடன் விவரித்தார்.
இந்தச் சம்பவம் நடந்த உடனேயே சக பயணிகள் அவசரச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதுடன், அந்த ஆசாமியை பிடித்து வைத்தனர். தகவல் அறிந்து விரைந்த ரயில்வே போலீஸார், ஆக்ரோஷமாக இருந்த சுரேஷ்குமாரைக் கைது செய்து காவலில் எடுத்தனர். இந்தக் கொடூரச் சம்பவம் ரயில் பயணத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.