அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்வது குறித்து, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில், சட்ட வல்லுநர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் செங்கோட்டையன். இதில், கட்சியின் விதிகள் மற்றும் நீக்கல் நடைமுறைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் இணைந்து பங்கேற்றதைத் தொடர்ந்து, செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதன் பின்னர், செங்கோட்டையன் ஆதரவாளர்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த முடிவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, "1972-ஆம் ஆண்டு எம்ஜிஆர் கட்சி தொடங்கிய நாளிலிருந்து அதிமுகவில் பணியாற்றி வருகிறேன். கட்சிக்காக 53 ஆண்டுகள் உழைத்த எனக்கு இப்படி ஒரு நீக்கம் கட்சி விதிகளின்படி செல்லாது. எனது நீக்கம் சட்டரீதியாக தவறு. இதற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆலோசனை மேற்கொள்கிறேன்" என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சட்ட நிபுணர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், கட்சி நீக்கத்துக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், நவம்பர் 5-ஆம் தேதிக்கு பிறகு, ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோருடன் இணைந்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் விரிவான ஆலோசனை நடத்துவது குறித்தும் பேசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, கோடநாடு கொள்ளை–கொலை வழக்கை மீண்டும் தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் செங்கோட்டையன் தனது சட்ட ஆலோசகர்களுடன் கருத்து பரிமாறிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
செங்கோட்டையன் விரைவில் செய்தியாளர்களை சந்தித்து தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கவிருக்கிறார். நவம்பர் 5க்குப் பிறகு அதிமுக அரசியல் களத்தில் முக்கிய மாற்றங்கள் உருவாகலாம் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்து வருகின்றன.