விஜய்யிடம் விசாரணை? பனையூர் செல்லும் சிபிஐ அதிகாரிகள்
TV9 Tamil News November 03, 2025 06:48 PM

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. கடந்த சில நாட்களாக கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த இடத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கரூரில் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரித்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை நடத்தினர். . இந்த நிலையில் நவம்பர் 3, 2025 அன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்துக்கு சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பனையூரில் சிபிஐ விசாரணை

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையானது ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தொகி தலைமையில்  அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட குழுவின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. இந்த குழு சிபிஐ விசாரணை குறித்து ஒவ்வொரு மாதமும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க : திமுகவை எதிர்த்து செங்கோட்டையன் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை: இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

அதன் ஒரு பகுதயாக பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்திலும் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளதாம்.  மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விஜய்யிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சிபிஐ பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளதை நமக்கு உணர்த்துகிறது.

தொண்டர் குழுவை நியமித்த தவெக

கரூரில் நடந்தது போல இனி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது என்பதற்காக தவெக புதிய முடிவெடுத்துள்ளது. அதன் படி, ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு ஆண், ஒரு பெண் என தொண்டர் குழுவை தவெக நியமித்துள்ளது. இதன் படி இனி தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புகளின் போது இவர்கள் கள நிலவரம் குறித்து அவருக்கு அறிவுறுத்துவார்கள். மேலும் தொண்டர்களை அவர்கள் கட்டுப்படுத்தி அவர்களை வழி நடத்துவார்கள். இதற்கான ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 2, 2025 அன்று பனையூரில் நடைபெற்றது.

இதையும் படிக்க : கரையானை போல் இபிஎஸ் அதிமுகவை அரித்துக்கொண்டிருக்கிறார்: சேகர் பாபு விளாசல்!

கரூர் சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களை கரூர் வரவழைத்து சந்தித்த விஜய், பின்னர் மீண்டும் கட்சி பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்.  அவரிடம் இருந்து அறிக்கைகள் வெளிவரத் தொடங்கியிருப்பதால் அவரது கட்சித் தொண்டர்கள் தற்போது உற்சாகத்தில் இருக்கின்றனர். விரைவில் அடுத்தகட்ட பரப்புரை குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.