இந்தியாவில் காவல்துறை, அதிகார மட்டத்தில் 'சாதி' எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது?
BBC Tamil November 03, 2025 08:48 PM
Getty Images 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 16.6% பேர் பட்டியல் பிரிவைச் (Scheduled Caste) சேர்ந்தவர்கள்.

இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு மற்றும் சுரண்டலின் வரலாறு பல நூற்றாண்டுகள் பழமையானது. சமத்துவம் மற்றும் மரியாதைக்கு அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்தபோது, சாதியின் சுவர்கள் உடைக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்தது.

பல தலைமுறைகளாக அடைக்கப்பட்டிருந்த கதவுகளை இட ஒதுக்கீடு திறந்துவிட்டது. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகார வர்க்கம், நீதித்துறை மற்றும் காவல்துறை போன்ற நிறுவனங்களின் உயர் பதவிகளை அடைந்தனர்.

பல நேரங்களில் உயர் பதவிகளை அடைந்த பிறகும், தலித் அதிகாரிகளுக்கான பயணம் எளிதானதாக இருப்பதில்லை. ஹரியாணாவில் மூத்த தலித் ஐபிஎஸ் அதிகாரி பூரன் குமார் தற்கொலை செய்து கொண்டது, இந்த வலியை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.

அவர் தனது தற்கொலைக் குறிப்பில் சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு முன், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நோக்கி காலணி வீசப்பட்ட சம்பவமும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்திய அதிகாரத்துவத்தில் கொள்கை மற்றும் நீதிக்கான முடிவுகள் எடுக்கப்படும் இடங்கள் இன்னமும் சாதியிலிருந்து விடுபடவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

அமைச்சகங்கள் முதல் மாவட்ட அலுவலகங்கள் வரை, காவல் நிலையங்கள் முதல் தலைமை செயலகத்தின் உயர் பதவிகள் வரை, சாதி இன்னும் தொடர்ந்து வருகிறதா?

இதே கேள்வியின் உண்மையான ஆழத்தை அறிய, இந்த நிறுவனங்களில் பணியாற்றியதன் மூலம் இந்த அமைப்பின் உண்மையான அடுக்குகளைத் தங்கள் அனுபவங்கள் மூலம் உணர்ந்த பல தலித் அதிகாரிகளுடன் பிபிசி பேசியது.

தற்கொலை என்பது ஒரு தீவிரமான உளவியல் மற்றும் சமூகப் பிரச்னையாகும். நீங்களும் மன அழுத்தத்தில் இருந்தால், இந்திய அரசின் ஜீவன்சாதி ஹெல்ப்லைன் 18002333330 மூலம் உதவி பெறலாம் அல்லது தமிழக அரசின் 104 என்ற உதவி எண் மூலம் உதவி பெறலாம். நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் பேசுவது அவசியம்.

'பதவி உயர்வு மற்றும் பதவி நியமனத்தில் பாகுபாடு' BBC எஸ். ஆர். தாராபுரி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அவர் 32 ஆண்டுகள் காவல்துறை சேவையில் பணியாற்றினார்.

இந்தியாவின் அதிகாரத்துவத்தில் சாதி என்பது கோப்புகளில் பதிவுசெய்யப்பட்ட ஒரு அடையாளமாக மட்டும் இல்லை. அது இன்றும் பல அதிகாரிகளின் வளர்ச்சிப் பாதையைத் தீர்மானிக்கிறது.

திறமை மற்றும் நேர்மை இருந்தபோதிலும், பதவி அல்லது பதவி நியமனம் (Posting) என்று வரும்போது, தகுதியை விடச் சாதியே முக்கியப் பங்காற்றுகிறது என்று பல ஓய்வுபெற்ற தலித் அதிகாரிகள் கூறுகின்றனர்.

உத்தரப்பிரதேச பணி தொகுப்பைச் (காடர்) சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) எஸ்.ஆர். தாராபுரி கூறுகையில், "காவல்துறை அமைப்பு நமது சமூகத்தின் துல்லியமான பிரதிபலிப்பு. சமூகத்தில் நிலவும் சாதி மற்றும் மதப் பாகுபாடு காவல்துறையிலும் காணப்படுகிறது." என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "பதவி நியமனத்தின்போது, குறைவான பிரச்னைகள் உள்ள மாவட்டங்களும், நல்ல காவல் நிலையங்களும் வழங்கப்படுவதில்லை. கண் துடைப்புக்காக தலித்துகள் காவல் நிலைய அதிகாரியாக (SHO) நியமிக்கப்படுகிறார்கள், ஆனால் அவை கடினமான சூழல்களை கொண்ட காவல் நிலையங்களாக இருக்கும். தலித் அதிகாரிகளின் ஆண்டு அறிக்கைகள் (Annual Reports) தயாரிப்பிலும் பாகுபாடு காணப்படுகிறது." என தெரிவித்தார்.

நிர்வாக சேவையிலும் சில அதிகாரிகள் இதே போன்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பி.எல். நாவல் ராஜஸ்தான் நிர்வாக சேவையிலிருந்து பதவி உயர்வு பெற்று குடிமைப் பணிக்கு வந்தார். அவர் ராஜஸ்தானில் பல முக்கியமான பதவிகளில் பணியாற்றினார்.

1977 ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கன்னையா லால் பைர்வாவும் இதையே கூறுகிறார்.

"தலித் அதிகாரிகளின் பதவி நியமனம் அல்லது பணி நிலைமை என்று வரும்போது, சாதியப் பாகுபாடு தெளிவாகத் தெரிகிறது. எங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் சாதியக் காரணங்களால் கிடைக்கவில்லை என்பதையும் நாங்கள் உணர்ந்தோம்."

பிரச்னை பதவி உயர்வு அல்லது பதவி நியமனம் ஆகியவற்றுடன் மட்டும் நின்றுவிடவில்லை. வெளிநாட்டில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளிலும் இந்த சமத்துவமின்மை காணப்படுகிறது.

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு Getty Images பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுக்கான உரிமை இந்திய அரசியலமைப்பின் 16(4A) பிரிவிலிருந்து வருகிறது.

பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் 'உள்நாட்டு நிதியுதவி பயிற்சித் திட்டத்தின்' (Domestic Funding Programme Training) கீழ் 2018 முதல் 2020 வரை 657 அதிகாரிகள் பயிற்சி பெற வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இதில், தாழ்த்தப்பட்ட (எஸ்சி) மற்றும் பழங்குடியின (எஸ்டி) அதிகாரிகள் 14% மட்டுமே இருந்தனர். ஆனால், விதிமுறைகளில் இட ஒதுக்கீட்டுக்கு என எந்தவொரு விதிகளும் இல்லை.

இருப்பினும், மத்திய அரசு தாழ்த்தப்பட்ட (15%) மற்றும் பழங்குடியின (7.5%) பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குகிறது.

இந்த உரிமை இந்திய அரசியலமைப்பின் பிரிவு 16(4A)-வின் கீழ் வருகிறது.

அதாவது, அரசுத் துறைகளில் ஒரு ஊழியருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்காக ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பதவிகள் ஒதுக்கப்படலாம்.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்குப் பிறகு 2017 மற்றும் 2022-இல் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்தப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அந்த உத்தரவுகள் கூறுகின்றன.

அதே நேரத்தில், ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட) பிரிவுக்குப் மத்திய அரசுப் பணி பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இந்த இட ஒதுக்கீடு குரூப் ஏ, பி, சி மற்றும் டி பிரிவுகளில் பொருந்தும். ஆனால், ஒவ்வொரு துறையும் உயர் பதவிகளில் தலித்துகள் அல்லது பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்.

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இருந்தபோதிலும் தலித்துகள் உயர் பதவிகளை அடைய முடியவில்லை என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் நரேந்திர குமார் கூறுகிறார்.

"பல சமயங்களில் தலித் அதிகாரிகளுக்கு எதிராகச் சிறிய விசாரணைகள் தொடங்கப்படுகின்றன, அதன் அடிப்படையில் பதவி உயர்வு நிறுத்தப்படுகிறது," என்று அவர் கூறுகிறார்.

"அமைப்பில் உள்ள அதிகாரிகள் நேர்மையாக வேலை செய்தால், இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதன் பலன் கிடைக்கும். பல சமயங்களில் அமைப்பில் ஒரு தலித் அதிகாரியே உயர் பதவியில் இருக்கும்போது, பதவி உயர்வில் தடைகள் குறித்த புகார்கள் வருவதில்லை" என்கிறார் நரேந்திர குமார்.

உயர் பதவிகளை அடைவதற்கான போராட்டம் BBC கன்னையா லால் பைர்வா 1977-ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. அவர் ராஜஸ்தான் காவல்துறையில் சுமார் 35 ஆண்டுகள் முக்கியப் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

இந்தியாவின் அதிகாரத்துவத்தின் ஆரம்ப மட்டத்தில் தலித் மற்றும் பழங்குடி அதிகாரிகளின் இருப்பு காணப்பட்டாலும், உயர் பதவிகளில் அவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தே காணப்படுகிறது.

பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின்படி, 2018 முதல் 2022 வரை குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் ஆனவர்களின் எண்ணிக்கை மொத்தம் 1,653 ஆகும்.

இவர்களில் சுமார் 24% தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் உயர் பதவிகளை அடையும்போது, இந்த விகிதம் வெகுவாக வீழ்ச்சியடைகிறது.

நாடாளுமன்ற பாஜக உறுப்பினர் கிரிட் பிரேம்ஜி பாய் சோலங்கி தலைமையிலான 30 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலன்) ஜூலை 31, 2023 அன்று சமர்ப்பித்த அறிக்கையில், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கொள்கை முடிவுகள் மற்றும் தீர்மானங்களில் பங்கேற்பதில் இருந்து தடுக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளது.

அந்த அறிக்கையின்படி, இயக்குநர் மற்றும் அதற்கு மேற்பட்ட மொத்தம் 928 பதவிகளில், 12.93% (120 அதிகாரிகள்) மட்டுமே எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.

செயலாளர் (Secretary) மட்டத்தில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 4.6% ஆக இருந்தது. அதாவது 87 செயலாளர்களில் நான்கு பேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.

இந்த எண்ணிக்கை, இட ஒதுக்கீட்டால் கிடைத்த வாய்ப்பு, உயர் பதவிகளை அடையும் பயணத்தில் மங்கிப் போகிறது என்பதைக் காட்டுகிறது.

பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் புள்ளிவிவரங்களும் இதையே காட்டுகின்றன. 2020 ஜனவரி 1 நிலவரப்படி, மத்திய அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவினரின் பிரதிநிதித்துவம் குரூப் ஏ-யில் 13.17%, குரூப் பி-யில் 17.03% மற்றும் குரூப் சி-யில் (துப்புரவுப் பணியாளர்கள் உட்பட) 36.9% ஆக இருந்தது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப் பேராசிரியர் அதிதி நாராயணி பாஸ்வான் கூறுகையில், "தலித்துகளுக்கு ஆரம்ப மட்டத்தில் இட ஒதுக்கீடு கிடைக்கிறது, ஆனால் செயலாளர் அல்லது உயர் பதவிகளில் அவர்களின் இருப்பு கிட்டத்தட்ட இல்லை. நுழைவுப் புள்ளிக்கும் சாதனைப் புள்ளிக்கும் இடையிலான இடைவெளிதான் உண்மையான சமத்துவமின்மை," என்று கூறினார்.

"அரசியலமைப்புச் சட்டம் வாய்ப்பளித்தது, ஆனால் உயர் பதவிகளை அடைவதற்கான பாதை இன்றும் தலித் அதிகாரிகளுக்கு மிகவும் கடினமானது," என்று அவர் மேலும் கூறுகிறார்.

இருப்பினும், உத்தரப்பிரதேசத்தின் முதல் தலித் டிஜிபி மற்றும் தற்போதைய நாடாளுமன்ற பாஜக உறுப்பினர் பிரிஜ் லால் இந்தக் குறைவை பாகுபாட்டுடன் மட்டும் தொடர்புப்படுத்தவில்லை. வயது மற்றும் சமூகப் பின்னணியும் இதில் பங்கு வகிக்கிறது என்று அவர் நம்புகிறார்.

"பெரும்பாலான தலித் இளைஞர்கள் அதிக வயதில் வருகிறார்கள். நான் அதற்கு விதிவிலக்காக இருந்தேன். எம்எஸ்சி படிக்கும்போதே நான் ஐபிஎஸ் ஆனேன். 22 வயதில் வந்தேன். எனக்கு 38 ஆண்டுகள் சேவை மீதமிருந்தது."

"எனது பேட்ச்சில் பலர் ஐஜி ஆகி ஓய்வு பெற்றனர், ஏனெனில் அவர்களுக்கு வயது அதிகமாக இருந்தது. தலித் அதிகாரிகள் பல இடங்களில் உயர் பதவிகளை அடைய முடியாததற்கு பல காரணிகள் உள்ளன," என்று அவர் கூறுகிறார்.

காவல்துறை அமைப்பில் சாதியக் கோடுகள் BBC காவல்துறையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது.

நாட்டின் காவல்துறை அமைப்பிலும் சாதியத்தின் ஆழமான கோடுகள் தெளிவாகக் காணப்படுகின்றன. காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்தின் (Bureau of Police Research & Development) 2024 அறிக்கை 'காவல்துறை அமைப்பின் தரவுகள்' படி, நாட்டில் காவலர் முதல் துணை கண்காணிப்பாளர் (Deputy SP) வரை மொத்தம் 20,54,969 பேர் உள்ளனர்.

இவர்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பங்கு 16.08% ஆகவும், பழங்குடியினரின் பங்கு 11.28% ஆகவும் உள்ளது.

ஆனால் உயர்பதவிகளில், தலித்துகளின் இருப்பு மிகக் குறைவாகிவிடுகிறது. காவல் ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ள பதவிகளில் அதாவது உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP), துணை காவல் கண்காணிப்பாளர் (DySP) மற்றும் உதவி கமாண்டன்ட் போன்ற பதவிகளில் நாடு முழுவதும் 1,677 தலித் அதிகாரிகள் மட்டுமே உள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் டிஜிபி எஸ்.ஆர். தாராபுரி ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார்: "காவலர் ஆள் சேர்ப்பின்போது, பல தலித் விண்ணப்பதாரர்கள் தங்கள் மார்பளவு சரியாக இருந்தும், அதிகாரிகள் வேண்டுமென்றே குறைவாகப் பதிவு செய்ததாகப் புகார் அளித்தனர். நான் சொந்தமாக அளந்து பார்த்தபோது, மார்பளவு சரியாக இருந்தது. நான் சரியான அளவைப் பதிவு செய்த பின்னரே அவர்கள் பணியமர்த்தப்பட்டனர்."

தாராபுரி மற்றொரு சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்: "கோரக்பூரில் எஸ்எஸ்பி-யாக இருந்தபோது, காவல்துறை உணவு விடுதியில் சில வீரர்கள் மேஜையில் அமர்ந்து சாப்பிட்டதையும், சிலர் தரையில் அமர்ந்து சாப்பிட்டதையும் நான் கவனித்தேன். விசாரித்தபோது, தரையில் அமர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று தெரிய வந்தது. அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று நான் உத்தரவிட்டேன். ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது, ஆனால் மெதுவாகச் சூழல் மாறியது."

தலித் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

இந்திய அதிகாரத்துவத்தில் தலித் அதிகாரிகளுக்கு எதிரான சாதியப் பாகுபாடு குறித்த புகார்கள் பல தசாப்தங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் நடவடிக்கை இன்றும் குறைவாகவே உள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (NCSC) மற்றும் தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை (DICCI) போன்ற நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான புகார்கள் வருகின்றன. இவற்றில், நிர்வாக மற்றும் காவல்துறை சேவைகளில் சாதியப் பாரபட்சம் இன்னும் ஆழமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

சில சமயங்களில் இந்தப் பாகுபாடு மிகவும் தீவிரமாக உள்ளதால் அதிகாரிகள் மனரீதியான துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு குறித்துப் புகார் அளிக்க வேண்டியிருந்தது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் ஆண்டு அறிக்கையின்படி (2022-23), ஆணையத்தால் ஒரே ஆண்டில் 56,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன.

இவற்றில் ஒரு பெரிய பகுதி அரசு பணியில் பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் பதவி உயர்வில் சமத்துவமின்மை ஆகியவை தொடர்பானவை. இதில் நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளின் வழக்குகளும் அடங்கும்.

பல தலித் அதிகாரிகள் தங்கள் புகார்களில், தாங்கள் 'இட ஒதுக்கீட்டால் பதவி பெற்ற அதிகாரி' என்று இழிவுபடுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர் பேராசிரியர் அதிதி நாராயணி பாஸ்வான் கூறுகையில், "சிவப்பு விளக்கு (பொருத்தப்பட்ட வாகனம்) அல்லது ரிக்ஷாவில் சென்றாலும், சாதி நம்முடன் வருகிறது. இது நம் சமூகத்தின் பெரிய உண்மை. அதை அழிக்க முயற்சிகள் நடந்தாலும், அது மறைவதில்லை."

"ஒருவர் தலித் குடும்பத்தில் பிறந்தால், அவர் தனது கடின உழைப்பு மற்றும் தகுதியால் இங்கு வந்துள்ளார் என்பதை அவர் வாழ்நாள் முழுவதும் நிரூபிக்க வேண்டியுள்ளது."

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எல். நாவலின் அனுபவமும் இதையே சொல்கிறது.

"நான் பணியில் இருந்தபோது, எனக்குக் கீழே பணியாற்றிய ஒரு எழுத்தர் தனது செயல்பாடுகளால் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்," என அவர் தெரிவித்தார்.

"இறுதியாக நான் அவரை இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் கோபமடைந்த அவர், தொலைபேசியில் எனது சாதியை இழிவுபடுத்திப் பேசினார்."

புகார்களும் மௌனமும் PIB பணியாளர், பொதுக் குறை தீர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்திற்குப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகிக்கிறார். அதன் இணை அமைச்சராக ஜிதேந்திர சிங் உள்ளார்.

இந்தியக் குடிமைப் பணிகளில் சாதியப் பாகுபாட்டுக்கு எதிராகப் புகார் அளிக்க எந்தவொரு சுதந்திரமான மற்றும் பயனுள்ள அமைப்பு இன்றும் இல்லை.

ஒரு தலித் அதிகாரி பாகுபாடு அல்லது அவமானத்தை எதிர்கொண்டால், அவருக்கு எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (Prevention of Atrocities Act) வழக்குத் தொடர்வது மட்டுமே ஒரே சட்டப்பூர்வ வழியாகும்.

ஆனா, டெல்லி பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளரான பேராசிரியர் அதிதி நாராயணி பாஸ்வான் கூறுகையில், "இந்த நடவடிக்கையை மிகச் சிலரே எடுக்கிறார்கள். புகார் அளித்தால் வேலை பாதிக்கப்படும் என்ற பயம் உள்ளது," என்று தெரிவித்தார்.

"அமைப்பில் மௌனம் காக்கும் கலாசாரம் ஆழமாகப் பதிந்துள்ளது. இதனால் பெரும்பாலான தலித் அதிகாரிகள் அநீதியை சகித்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். யாராவது குரல் கொடுத்தால், அவர்கள் 'பிரச்னை செய்பவர்' என்று அழைக்கப்படுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

இந்த மௌனக் கலாசாரம் நாடாளுமன்ற நிலைக்குழு (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலன், 2023) அறிக்கையிலும் பிரதிபலிக்கிறது.

அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி ஊழியர்களிடமிருந்து பாகுபாடு அல்லது துன்புறுத்தல் குறித்து எத்தனை புகார்கள் கிடைத்தன என்று நாடாளுமன்றக் குழு பணியாளர் மற்றும் பயிற்சித் துறையிடம் கேட்டபோது, அந்தத் துறை "ஒன்று கூட இல்லை" என்று பதிலளித்தது.

இந்தத் துறை பிரதமர் நரேந்திர மோதியின் கீழ் வரும் பணியாளர், பொதுக் குறைதீர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் ஒரு பகுதியாகும். இது இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்துவத்தின் 'கட்டுப்பாட்டு மையம்' என்றும் அழைக்கப்படுகிறது.

இது குடிமைப் பணிகளின் ஆட்சேர்ப்பு, கொள்கை உருவாக்கம், அதிகாரிகளின் பயிற்சி, இட ஒதுக்கீடு மற்றும் குறைகள் தீர்வு போன்ற முக்கியமான பணிகளைப் பார்க்கிறது.

கடின உழைப்பு மற்றும் தகுதியால் பெறப்பட்ட ஒரு அடையாளம், இந்தியாவின் அதிகாரத்துவத்தில் உள்ள சாதிச் சுவர்களை உடைக்க உண்மையிலேயே போதுமானதா என்ற கேள்வியே இறுதியில் எழுகிறது.

உதவி: சையத் மோஜிஸ் இமாம், தாரிக் கான், மோஹர் சிங் மீனா, பிரஷாந்த் பாண்டே

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.