சென்னையில் ரூ. 2.88 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
Dinamaalai November 05, 2025 01:48 AM

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், மலேசியாவில் இருந்து கடத்தி கொண்டு வந்த ரூ.2.88 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்டதால் அவரை விசாரித்தனர். அவர் கூறிய பதில்கள் முரணாக இருந்ததால் தனி அறைக்குள் அழைத்து சென்று சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 2½ கிலோ தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடியே 88 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. விசாரணையில், அந்த இளம்பெண் தங்கக் கடத்தல் கும்பலின் வழிகாட்டுதலின்படி “குருவி” ஆக செயல்பட்டதாகவும், இது அவரின் முதல் முயற்சியாக இருந்ததாகவும் தெரியவந்தது.

மேலும், அவருடன் மலேசியாவுக்கு சென்ற 2 பெண்கள் உள்பட 4 பேர் இதற்கு முன் பல முறை தங்கம் கடத்தியது உறுதி செய்யப்பட்டது. தங்களை சந்தேகிக்காமல் இருக்க, இம்முறை கடத்தல் தங்கத்தை அந்த இளம்பெண்ணிடம் ஒப்படைத்து, மற்றவர்கள் தனித்தனியாக திரும்பி வந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இதையடுத்து 3 பெண்கள் உட்பட மொத்தம் 5 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை மலேசியாவுக்கு அனுப்பிய பின்னணி கும்பல் யார் என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.