ஒருநாள் போட்டிகளில் கோலியை சிறந்த வீரராக்கிய மூன்று 'ஆயுதங்கள்'
BBC Tamil November 05, 2025 12:48 PM
Getty Images

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள். 2008-ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர், சர்வதேச அரங்கில் மிக முக்கிய கிரிக்கெட்டராக உருவெடுத்திருக்கிறார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான போட்டிகளிலும் இந்தியாவுக்காக ஜொலித்த அவர், அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபார்மட்டாகக் கருதப்படும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறார்.

கோலி எதனால் ஒருநாள் ஃபார்மட்டில் சிறந்து விளங்கினார், அவரிடம் இன்னும் என்ன எதிர்பார்க்கலாம் என்று கேட்க, கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீயை அணுகினோம்.

விராட் கோலி என்று சொன்னதுமே, "அவர் தான் மிகச் சிறந்த ஒருநாள் வீரர்" யோசிக்காமல் சொல்லிவிட்டார். அதற்கான காரணங்களை விளக்கும் நானீ, கோலியை சிறந்து விளங்க வைத்த மூன்று ஆயுதங்களையும் குறிப்பிட்டுச் சொல்கிறார். அதுமட்டுமல்லாமல், அந்த ஆயுதங்களில் ஒன்றை இழந்ததுதான் கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் கோலியின் சரிவுக்குக் காரணமாகவும் சொல்கிறார் அவர்.

நினைத்துப் பார்க்க முடியாத எண்கள்

"விவியன் ரிச்சர்ட்ஸ், பிரயன் லாரா, சச்சின் டெண்டுல்கர், ஏ.பி.டிவில்லியர்ஸ் என அனைவரின் ஆட்டத்தையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அவர்கள் தேசத்தின் வெற்றிகளில் விராட் கோலி அளவுக்கு தாக்கம் ஏற்படுத்திய வீரர் வேறு யாரும் இல்லை" என்கிறார் நானீ.

"சுமார் பதினான்காயிரம் ரன்கள் அடித்திருக்கிறார். ஆனால், சராசரியோ 57, ஸ்டிரைக் ரேட் 93 என ஒவ்வொரு எண்களுமே பிரமிப்பாக இருக்கும். சுமார் 300 போட்டிகளில் விளையாடிவிட்டு இப்படி பிரமிக்க வைக்கும் புள்ளிவிவரங்களை கொண்டிருப்பது சாதாரண விஷயமல்ல" என்றும் அவர் சொன்னார்.

Getty Images 2008-ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகம் பெற்ற கோலி, இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார்

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் விராட் கோலி. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சங்கக்காராவை முந்தி இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய அவர், இதுவரை 14255 ரன்கள் எடுத்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 18426 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

2008-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆன விராட், இதுவரை 305 போட்டிகளில் ஆடியிருக்கிறார். 57.71 என்ற பெரிய சராசரியை வைத்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்தவர்கள் மொத்தம் 15 பேர். அவர்களுள் 50+ சராசரி வைத்திருப்பது இருவர் மட்டும்தான்: விராட் கோலி & மஹேந்திர சிங் தோனி.

"சிறந்த மேட்ச் வின்னர் & ஃபினிஷர்"

மற்ற எல்லாரையும் விடவுமே விராட் கோலி நிறைய போட்டிகளை இந்திய அணிக்காக முடித்துக் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார் நானீ. "என்னைப் பொறுத்தவரை அவர்தான் மிகச் சிறந்த மேட்ச் வின்னர், ஃபினிஷர். ஐந்தாவது, ஆறாவது பேட்டர்களாக வந்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்த வீரர்களைப் பார்த்திருக்கிறோம் - எம்.எஸ்.தோனி, மைக்கேல் பெவன் போல. ஆனால், மிகவும் முக்கியமான நம்பர் 3 இடத்தில் வந்து கோலியைப் போல் போட்டியை முடித்துக் கொடுத்தவர்கள் யாரும் இல்லை" என்றார் அவர்.

பேட்டிங் வரிசையில் நம்பர் 3 இடத்தில் வரும்போது புதிய பந்தையும் சமாளிக்க வேண்டும், சுழற்பந்துவீச்சையும் சமாளிக்க வேண்டும் என்றும் அதை விராட் கோலி மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் என்றும் நானீ தெரிவித்தார்.

Getty Images கோலியின் 51 சதங்களில் 28 சேஸ் செய்யும்போது அடிக்கப்பட்டவை

வழக்கமாக சேஸிங்கை அதிகம் விரும்புபவர் கோலி. தனக்கு இலக்கு தெரியும்போது தன்னால் இன்னும் தெளிவாக தன் இன்னிங்ஸை திட்டமிட முடியும் என்று அவரே சொல்லியிருக்கிறார். அது எண்களிலுமே நன்கு பிரதிபலிக்கிறது.

முதலில் பேட்டிங் செய்யும் போது 50.55 என்ற சராசரி வைத்திருக்கும் அவர், சேஸிங்கில் 64.58 என்ற சராசரியை வைத்திருக்கிறார். ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸ்களில் மட்டும் இவர் 8,138 ரன்கள் எடுத்திருக்கிறார். இவருடைய சதங்களிலும் 28 சதங்கள் இலக்கைத் துரத்தும்போது வந்தவையே.

கோலி இப்படி போட்டிகளை சிறப்பாக முடித்துக் கொடுப்பதற்குக் காரணமாக மூன்று ஆயுதங்களைக் குறிப்பிடுகிறார் நானீ: ஆக்ரோஷம், தன்னம்பிக்கை, திட்டமிடல்.

ஆயுதம் 1: ஆக்ரோஷம்

கிரிக்கெட் வரலாற்றில் விவியன் ரிச்சர்ட்ஸ் போல் பௌலர்களை மிரட்டிய பேட்டர் யாருமில்லை என்று சொல்லும் நானீ, அவருக்குப் பின் அதே அளவு பௌலர்களை பயமுறுத்திய வீரர்களாக சேவாக்கையும், கோலியையுமே குறிப்பிடுகிறார். "கோலியிடம் தன்னுடைய சாயலைப் பார்ப்பதாக ரிச்சர்ட்ஸே ஒருமுறை சொல்லியிருக்கிறார்" என்கிறார் நானீ.

இங்கே நானீ குறிப்பிடுவது ஆக்ரோஷம் மட்டுமே அல்ல, கோலி ஆட்டத்தை அணுகும் விதம்.

"கிறிஸ் கெய்ல், சனத் ஜெயசூர்யா, ரோஹித் ஷர்மா போன்ற வீரர்களை விடவெல்லாம் கோலியின் ஸ்டிரைக் ரேட் அதிகம் என்பது அவ்வளவாக யாராலும் நம்ப முடியாதது. கெய்ல் போல் பெரிய சிக்ஸர்களை கோலி அடிக்கமாட்டார். கெய்ல் ஒரு ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு சிங்கிள், நான்கு டாட் பால்கள் ஆடுகிறாரென்றால், கோலி இரண்டு டபுள், இரண்டு சிங்கிள், ஒரு ஃபோர் என்று அடிப்பார். அந்த ஃபோரும் கூட அடித்ததே தெரியாமல் எல்லைக்குப் போகும் பௌண்டரியாக இருக்கும். ஆனால், கெய்லை விடவும் அதிக ரன்கள் வந்திருக்கும்" என்கிறார் நானீ.

Getty Images கோலியின் ஆக்ரோஷம் அவருக்கு மிக முக்கிய ஆயுதம் என்கிறார் நானீ

இதுவரை 293 முறை பேட்டிங் செய்திருக்கும் கோலி, 93.26 என்ற ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார். டாப் 20 ரன் ஸ்கோரர்களில் கோலியை விட சிறந்த ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் ஒரே வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் மட்டுமே.

"கோலி ஹிட்டர் இல்லை. ஆனால், அக்ரஸிவான பேட்டர்" என்று வலியுறுத்தி கூறுகிறார் நானீ.

மேலும், "அவருடைய அந்த ஆக்ரோஷம் என்பது பெரும்பாலும் உடல்மொழியில் வெளிப்பட்டதும், தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் சேர்ந்து ஓடவைத்ததும் தான். ஒரு ரன் எடுக்க வேண்டிய இடத்தில், அதை இரண்டாக்குவார்; இரண்டை மூன்றாக்குவார், ஒவ்வொரு பந்திலும் ஃபீல்டர்களை, எதிர் முனையில் இருக்கும் பேட்டரை உழைக்க வைத்துக்கொண்டே இருப்பார். யாரையும் செட்டில் ஆகவே விடமாட்டார். அனைவரும் அவரது திட்டத்துக்கேற்ப அங்கே இயங்கிக் கொண்டிருப்பார்கள்" என்றும் அவர் கூறினார்.

விக்கெட்டுகளுக்கு இடையே கோலி ஓடுவதே உச்சபட்ச ஆக்ரோஷம் தான் என்கிறார் நானீ.

Getty Images ஆயுதம் 2: தன்னம்பிக்கை

"இலக்கு என்னவாக வேண்டுமானால் இருக்கட்டுமே... 220, 280, 350 என எதுவாக இருந்தாலும் அவர் தன்னால் முடியும் என்றுதான் முதலில் நினைப்பார். எவ்வளவு சிக்கலான சூழலாகக் கூட இருக்கட்டும், கோலி சொல்வது ஒன்றுதான்: 'நான் அடிச்சுக் கொடுத்திட்றேன்'. அந்த எண்ணம் தான் அவரை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறது" என்கிறார் நானீ.

"எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் தன்னால் வென்று கொடுக்க முடியும் என்று நம்புவார். அந்த நம்பிக்கையே அவரை வெகுதூரம் எடுத்துச் செல்லும்" என்றார் நானீ. அந்த நம்பிக்கை தான் கோலி களத்தில் இருக்கும் வரை எதிரணிகள் வெற்றி பெற்றுவிடாது என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்குக் கொடுத்ததும் என்றும் அவர் சொன்னார்.

Getty Images ஆயுதம் 3: திட்டமிடல்

முதலிரு ஆயுதங்களை வலிமையாக்குவது கோலியின் திட்டமிடல் என்கிறார் நானீ. "கோலி உறுதியாக ஒரு சேஸுக்குள் நுழைவதற்குக் காரணம், அவரது திட்டமிடல் மீது இருக்கும் நம்பிக்கை. இலக்கு என்ன, எதிராளிகள் யார், ஆட்ட சூழ்நிலை என்ன என்று அனைத்தையும் கணக்கிடுவார். எந்த பௌலரை டார்கெட் செய்யவேண்டும், எந்தப் பந்தை டார்கெட் செய்யவேண்டும் என எல்லாமே முடிவு செய்யப்பட்டிருக்கும். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. யார் சரியான பௌலர் என்ற கேள்வியை, 'தனக்கு' யார் சரியான பௌலர் என்றுதான் கோலி யோசிப்பார். தன்னுடைய ஆட்டத்தையும், சுற்றியிருக்கும் அனைத்தையும் ஒன்றிணைத்ததாக இருக்கும் அவர் திட்டம். 'Ahead of the Game' என்பார்களே... இப்படித் திட்டமிடுவதால் கோலி எப்போதும் ஒரு படி முன்னரே இருக்கிறார்" என்று கூறுகிறார்.

"ஒருநாள் போட்டிகள் பற்றிப் பேசினாலும், ஒரு டி20 ஆட்டத்தை உதாரணமாகச் சொல்கிறேன். 2022-இல் பாகிஸ்தானுக்கு எதிராக மெல்போர்னில் ஆடிய டி20 உலகக் கோப்பை ஆட்டம். ஹாரிஸ் ராஃப் மற்ற பேட்டர்களுக்கு சவாலான பௌலராகத் தெரிந்திருப்பார். ஆனால், அன்று கோலி டார்கெட் செய்தது அவரைத்தான். அங்கு வேகத்தை சாதகமாகப் பயன்படுத்துவது என்று முடிவு செய்த அவர் இரண்டு சிக்ஸர்களை சிறப்பாக அடித்திருப்பார்."

Getty Images தவறிய ஆயுதமும் அதனால் ஏற்பட்ட சரிவும்

ஒருநாள் போட்டிகளில் 2019 வரை தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கோலி. ஆண்டு வாரியாக அவரது சராசரியைப் பார்க்கும் போது நல்ல முன்னேற்றம் தெரியும். இடையே 2015-ஆம் ஆண்டு மட்டும் ஒருநாள் போட்டிகள் அவருக்கு சிறப்பாக அமையவில்லை.

2018-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அவருக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு 14 போட்டிகளில் 133.55 என்ற சராசரியில் 1202 ரன்கள் குவித்தார் கோலி. இந்த ஆண்டு வெளிநாட்டில் விளையாடிய 9 போட்டிகளில் 3 சதங்களும் 3 அரைசதங்களும் அடித்திருந்தார் அவர்.

ஆனால், விரைவிலேயே அவரது சரிவும் நடந்தது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகம் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, கோலியால் அதே பழைய ஃபார்முக்குத் திரும்ப முடியவில்லை. 2020க்குப் பிறகு ஒரேயொரு ஆண்டு (2023) மட்டுமே அவர் சராசரி ஐம்பதுக்கும் அதிகமாக இருந்தது. 2022 மற்றும் 2024ல் அது முப்பதுக்கும் குறைவாகவே இருந்தது. இந்த எண்கள் மோசமான ஃபார்மைக் குறிப்பதாக இல்லையென்றாலும், கோலியின் உச்சத்திலிருந்த காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த செயல்பாடு சரிவாகவே கருதப்படுகிறது.

கோலியின் ஆக்ரோஷம் குறைந்தது இந்த சரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார் நானீ. ஆனால், அது ஒவ்வொருவரின் வாழ்விலும் காலப்போக்கில் நடக்கும் விஷயம்தான் என்கிறார் அவர்.

Getty Images கொரோனாவுக்குப் பின் கோலியின் ஃபார்மில் சிறு சரிவு ஏற்பட்டது

"நாம் கல்யாணத்துக்கு முன் துணிச்சலாக பல விஷயங்கள் செய்வோம். ஹெல்மெட் போடாமலயே பேட்டிங் செய்வது, வேகமாக பைக் ஓட்டி வித்தை காட்டுவது என்று நானே நிறைய செய்திருக்கிறேன். ஆனால், குடும்பம், குழந்தை என்று வரும்போது அந்த குணம் மாறுவது இயல்பு தான். ஒரு 'மெச்சூரிட்டி' வரும். ஆக்ரோஷம் குறையும். தோனி போன்ற ஒரு வீரருக்கு அது தாக்கம் ஏற்படுத்தாது. ஏனெனில், அவர் களத்தில் எப்போதும் கூலாகவே இருந்திருக்கிறார். ஆனால், கோலிக்கு எரிபொருளாய் இருந்ததே அந்த ஆக்ரோஷம் தான். கொரோனாவுக்குப் பிறகான காலகட்டத்தில் அது கொஞ்சம் குறைந்துவிட்டது. அது அவரது ஆட்டத்திலும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று தன் பார்வையை முன்வைத்தார் நானீ

மேலும் அதுபற்றிப் பேசிய அவர், "இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கூட அதைப் பார்க்க முடிந்தது. நான் வர்ணனை செய்து கொண்டிருந்த போது, கோலியைத் தொடரும் கேமராவை தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அமைதியாய் அங்குமிங்கும் மாறிமாறி நடந்துகொண்டிருந்தார். முன்பெல்லாம் ஃபீல்டை மாற்றுவது, உற்சாகமாகப் பேசுவது என்று தீயாய் இருப்பார். 'Live wire' என்று சொல்வோம். ஆனால், அந்த சமயத்தில் அவர் அப்படியில்லை" என்றார்.

வருத்தங்களும் விமர்சனங்களும்

குவித்த ரன்களில் ஏற்பட்ட சரிவைத் தாண்டி, ஒரு கேப்டனாக கோலியால் கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்ற குறையும் இருக்கிறது. 2019 உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணியாகக் கருதப்பட்டிருந்த இந்தியா, அரையிறுதியில் தோற்று வெளியேறியது. 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலும் யாரும் எதிர்பாராத விதமாக தோற்று சாம்பியனாகும் வாய்ப்பை இழந்தது. இது கோலியின் கிரிக்கெட் கரியரில் ஒரு முழுமை பெறாத பக்கமாகவே இருக்கிறது.

அதேபோல் கோலியின் ஒருநாள் கரியரின் மீது இருக்கும் பெரிய விமர்சனம் மிகப் பெரிய தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் அவர் பெரிய பங்களிப்பைக் கொடுப்பதில்லை என்பது.

2011, 2015, 2019 உலகக் கோப்பைகளின் 7 நாக் அவுட் போட்டிகளில் அவர் மொத்தம் அடித்ததே 107 ரன்கள் தான். அதிகபட்சம் 35 தான். இது ஒவ்வொரு உலகக் கோப்பையின் போதும் இந்தியா வெளியேறிய பிறகு அவர் மீது பெரும் விமர்சனங்கள் வர வழிவகுத்தது.

Getty Images

ஆனால், 2023 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் கோலி தன் சிறந்த செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 117 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 54 ரன்களும் எடுத்தார் அவர். இருந்தாலும், இந்த இறுதிப் போட்டியிலும்கூட கோலியின் அணுகுமுறை கேள்விக்குள்ளானது. மிடில் ஓவர்களில் அவரும் ராகுலும் வேகமாக ஆடவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

இனி என்ன எதிர்பார்க்கலாம்?

இதுவரை கோலியின் ஒருநாள் கரியர் மேடுகளும், ஆங்காங்கே ஒருசில பள்ளங்களும் நிறைந்ததாக இருந்திருக்கிறது. இனி அது எப்படியிருக்கும் என்றும் நானீயிடம் கேட்டோம். அதற்கு, நிச்சயம் கோலி 2027 உலகக் கோப்பை வரை விளையாடுவார் என்று கூறினார் அவர்.

Getty Images

"ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு கோலி, ரோஹித் இருவரின் உடல்மொழியையும் பார்க்கும்போது அவர்கள் நிச்சயம் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்றே தோன்றுகிறது. டி20, டெஸ்ட் என இரண்டு ஃபார்மட்களிலும் ஓய்வு பெற்றுவிட்டதால், நிச்சயம் இந்த ஃபார்மட்டில் பெரிய தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள். கோலியின் ஆக்ரோஷம் குறைந்திருந்தாலும், வெற்றி பெறவேண்டும் என்ற வேட்கை இன்னும் குறையவில்லை." என்கிறார் நானீ.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.