தமிழகத்தில் 10, +2 பொதுத்தேர்வுக்கு கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதி... மாணவர்கள் உற்சாகம்!
Dinamaalai November 05, 2025 01:48 PM

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 பொதுத்தேர்வு அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் முக்கியமான மாற்றமாக, பிளஸ்2 கணக்கு பதிவியல் (Accountancy) தேர்வில் முதல் முறையாக சாதாரண கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். இந்த முடிவு மாணவர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. அறிவிப்பின் படி, பிளஸ்–2 தேர்வுகள் மார்ச் 2 முதல் 26 வரை; பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும். வழக்கத்திற்கு மாறாக, இந்த ஆண்டு இரண்டு தேர்வுகளும் ஒரே காலகட்டத்தில் நடத்தப்படுகின்றன.

மொத்தம் 7,513 பள்ளிகளை சேர்ந்த 8.07 லட்சம் மாணவர்கள் பிளஸ்–2 தேர்வையும், 12,485 பள்ளிகளிலிருந்து 8.70 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வையும் எழுத உள்ளனர். மேலும், பிளஸ்1 அரியர் தேர்வுகள் மார்ச் 3 முதல் 17 வரை நடைபெறும்; முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும். பிளஸ்2 முடிவு மே 8, பத்தாம் நிலை மற்றும் பிளஸ்1 அரியர் தேர்வு முடிவுகள் மே 20 அன்று அறிவிக்கப்படும்.

அரசு கல்விக் கொள்கையின்படி, இந்த கல்வியாண்டு முதல் பிளஸ்1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை; கடந்த ஆண்டு தோல்வியடைந்தவர்களுக்கு மட்டும் இது நடைமுறையில் இருக்கும். மாணவர்கள் பயப்படாமல், நம்பிக்கையுடன் தேர்வில் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் மகேஷ் கேட்டுக் கொண்டார்.

தேர்வு தேதிகள் சட்டசபை தேர்தல் அட்டவணையுடன் மோதாத வகையில், தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மாணவர்களின் கல்வி பயணத்தை ஆதரிக்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்த புதிய முடிவு, தேர்வுக்கான தயாரிப்பில் ஒரு முக்கிய மாற்றமாக கருதப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.