Getty Images புனுகு பூனை
காலையில் கடைக்குப் போய் காபி குடித்தால் எவ்வளவு செலவாகும்?
பத்து அல்லது பதினைந்து ரூபாய் ஆகலாம்.
ஒரு கேப்பச்சினோ குடித்தால் நூற்றைம்பது ரூபாய் ஆகலாம்.
ஆனால் ஒரு ஸ்பெஷல் காபி உள்ளது. அதைக் குடிக்க, நம்மிடம் அதிகப் பணம் இருக்க வேண்டும்.
அந்த காபியைக் குடிக்க, நீங்கள் ரூ. 1,600 முதல் ரூ. 8,000 வரை செலவழிக்க வேண்டும்.
அது, சிவெட் காபி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கோபி லுவாக் காபி என்று மற்றொரு பெயரும் உண்டு.
இந்த காபி இவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பதற்குக் காரணம், ஆசிய பாம் சிவேட் (Asian Palm Civet) என்ற விலங்குதான்.
பொதுவாக 'புனுகு பூனை' என்று அழைக்கப்படும் இதில், பல இனங்கள் உள்ளன.
இப்போது, உலகம் முழுவதும் இப்பூனையின் மலத்திலிருந்து தயாரிக்கப்படும் காபிக்கான தேவை அதிகரித்து வருகிறது. இது மிகவும் விலை உயர்ந்ததாகவும் மாறி வருகிறது.
பூனையின் மலத்தில் கிடைக்கும் பொருளில் இருந்து தயாரிக்கப்படும் காபி என்றவுடன், கேட்பதற்கு சற்று விசித்திரமாகத் தோன்றலாம்.
ஆனால் அது உண்மைதான்.
இந்த ஆசிய புனுகுப்பூனை எப்படி காபி தயாரிக்க உதவுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
Getty Images இந்த காபி இவ்வளவு விலை உயர்வாக இருப்பதற்குக் காரணம், ஆசிய பாம் சிவேட் (Asian Palm Civet) என்ற விலங்குதான். பூனை குடும்பத்தைச் சேர்ந்தது இல்லையா ?
ஆந்திர பல்கலைக் கழகத்தின் விலங்கியல் பேராசிரியரான மஞ்சுலதா பிபிசியிடம் இதுகுறித்துப் பேசுகையில், புனுகு பூனை என்ற பெயரில் 'பூனை' என்ற சொல் இருப்பதால், அது பூனை குடும்பத்தைச் சேர்ந்தது என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் "அது விவேரிடே குடும்பத்தைச் சேர்ந்தது, அதாவது காட்டில் சுற்றித் திரியும் பாலூட்டிகள். இதுவரை, புனுகு பூனையின் 38 இனங்கள் உலகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. சிவெட் பூனை சற்று நீளமான உடலையும், கூர்மையான நகங்களையும் கொண்டுள்ளது. தலை முதல் வால் வரை அதன் நீளம் இரண்டு முதல் இரண்டரை அடி வரை இருக்கும். அதன் எடை 3 முதல் 5 கிலோ வரை இருக்கும். அதன் ஆயுட்காலம் 15 முதல் 20 ஆண்டுகள்" என்று பேராசிரியர் மஞ்சுலதா விளக்கினார்.
"இது புழுக்கள், பழங்கள் மற்றும் பூச்சிகளை உண்ணும். காடுகள் மற்றும் மலைகளில் காணப்படும் இந்த புனுகுப்பூனை திறமையாக மரம் ஏறும். புனுகுப்பூனை வாசனையை வெளியிடும் ஒரு வாசனை சுரப்பியைக் கொண்டுள்ளது. அதனால் இது வாசனை திரவியங்களை தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. இப்போது அது தடை செய்யப்பட்டதால், இதே போன்ற வாசனையுடன் கூடிய செயற்கை புனுகுப்பூனை வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன" என்கிறார் மஞ்சுலதா.
புனுகுப் பூனையில் இருந்து சேகரிக்கப்படும் எண்ணெய், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திருப்பதியில் நடைபெறும் அபிஷேக சேவையிலும், ஆண்டுதோறும் நடைபெறும் கஸ்தூரி ஜின்னே சேவையிலும் பயன்படுத்தப்படுகிறது.
திருப்பதி விலங்கியல் பூங்காவில் 5 புனுகுப் பூனைகளை பராமரித்து வருவதாக அதன் கண்காணிப்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அங்குள்ள புனுகு பூனைகளைப் பராமரிக்க விலங்கியல் பூங்கா அதிகாரிகள் அனுப்பிய ரூ.1.97 கோடி திட்டத்திற்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஒப்புதல்அளித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.
இவை இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் உட்பட தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன.
இந்தியாவில் சேஷாசலம் காடுகள், திருப்பதியைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அல்லூரி மாவட்டத்தின் காபி தோட்டங்களிலும் இதைக் காணலாம் என்று பேராசிரியர் மஞ்சுலதா கூறினார்.
சிவெட் காபி உருவான வரலாறு
Getty Images ஒரு நாள், சிவெட் பூனை மலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட காபி கொட்டைகளை காபி தூளாக அரைத்தனர். மக்கள் அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட காபியை ருசித்தனர்.
கோபி லுவாக் என்ற காபி முதன்முதலில் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த காபி, சிவெட்டுகள் எனும் விலங்கு வகையின் மூலம் தயாரிக்கப்படுகிறது என்பதால் இது சிவெட் காபி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தோனேசியாவிற்குச் செல்லும் பலரும் இந்த காபியை ருசிக்காமல் திரும்ப முடியாது.
ஆசிய பாம் சிவெட் என்ற இந்த விலங்கு உலகத்துக்கு அறிமுகமாக காரணம் டச்சு குடியேறிகள்தான் என்று பிபிசி முன்பு வெளியிட்ட ஒரு செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அந்த செய்தியின் படி, அவர்கள் 300 ஆண்டுகள் முன்பு ஜாவா, சுமத்ரா, சுலவேசி தீவுகளில் காபி மரங்களை நட்டிருக்காவிட்டால், இன்று உலகம் இந்த விலங்கைக் குறித்து இவ்வளவு கவனம் செலுத்தியிருக்காது.
அதுவரை அந்த தீவுகளில் பழங்கள், பெர்ரி வகைகள், பூச்சிகள் மற்றும் புழுக்களை உணவாகக் கொண்டு வந்த இந்த உயிரினம், காபி செடிகள் மூலம் புதிய சுவையான உணவைக் கண்டுபிடித்தது.
இந்த புனுகுப்பூனைகள் காபி செடிகளில் வளரும் வட்ட வடிவ காபி செர்ரிகளை ருசித்தன. அவற்றுக்கு அந்தச் சுவை பிடித்திருந்தது.
ஆனால், அவை காபி செர்ரியின் சதையை மட்டும் சாப்பிட்டுவிட்டு விதைகளை அப்புறப்படுத்திவிட்டன.
காபி செர்ரிகளில் உள்ள விதைகள் புனுகுப்பூனையின் செரிமானப் பாதையிலிருந்து வெளியேறுவதைப் புரிந்துகொண்ட தோட்ட உரிமையாளர்கள், விதைகளைப் புனுகுப்பூனையின் மலத்திலிருந்து பிரிக்குமாறு தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
"கழிவுகளைப் பயன்படுத்துவோம்" என்ற எண்ணம், சிவெட் மலத்திலிருந்து விலையுயர்ந்த காபியை உருவாக்க வழிவகுத்தது.
ஒரு நாள், சிவெட் பூனை மலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட காபி கொட்டைகளை காபி தூளாக அரைத்தனர். அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட காபியை மக்கள் ருசித்தனர்.
இந்த காபியில் இருந்து வந்த மண் வாசனை மற்றும் அரிதான சாக்லேட் போன்ற சுவையை மக்கள் விரும்பினர்.
இப்படித்தான், கோபி லுவாக் என்ற காபி பிறந்தது.
சுவைக்கு என்ன காரணம்?
Getty Images காட்டுப் புனுகுப் பூனைகள், பொதுவாக மிகவும் பழுத்த, சிறந்த சுவை கொண்ட காபி செர்ரிகளைத் தேர்ந்தெடுப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
காபி செர்ரிகளில் உள்ள விதைகள் சிவெட்டுகளின் செரிமானப் பாதை வழியாகச் செல்லும் போது, அவற்றின் செரிமான நொதிகள் காபி கொட்டைகளில் உள்ள புரத அமைப்பை உடைத்து , அவற்றின் அமிலத்தன்மையை நீக்குகின்றன.
இது காபிக்கு அதன் தனித்துவமான சுவையையும் நறுமணத்தையும் தருகிறது.
காட்டுப் புனுகுப் பூனைகள், பொதுவாக மிகவும் பழுத்த, சிறந்த சுவை கொண்ட காபி செர்ரிகளைத் தேர்ந்தெடுப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இயற்கையாக நடைபெறும் இந்தத் தேர்வுதான் காபியின் சுவையை மேம்படுத்துகிறது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் காடுகளில் சிவெட்டுகள் இன்னும் வாழ்ந்து வருகின்றன. இந்த காபி இப்போது உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதன் அரிதான தன்மையின் காரணமாக, கோபி லுவாக் உலகின் மிக விலையுயர்ந்த காபிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
இப்போது உலகில் நீங்கள் எங்கு சென்றாலும் ஒரு கப் வைல்ட் சிவெட் காபியின் விலை சுமார் ரூ. 1,600 முதல் ரூ. 8,300 வரை விற்கப்படுவதைக் காண முடியும்.
'தி பக்கெட் லிஸ்ட்' திரைப்படத்தில் இடம்பெற்ற பிறகு இந்தக் காபிக்கான தேவை பெருமளவு அதிகரித்துள்ளது என்று தி கார்டியன் என்ற ஆங்கில செய்தித்தாள் முன்பு குறிப்பிட்டிருந்தது.
சிவெட் காபி எங்கெல்லாம் கிடைக்கும்?
Getty Images சிவெட் காபி தயாரிக்க, காட்டு சிவெட் பூனைகள் பிடிக்கப்பட்டு, நெரிசலான கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன.
தென்கிழக்கு ஆசியா முழுவதும் சிவெட் காபி இப்போது உற்பத்தி செய்யப்படுகிறது.
சிவெட் காபி இப்போது அதன் பிறப்பிடமான இந்தோனேசியாவில் மட்டுமல்லாமல், சிங்கப்பூர், வியட்நாம், கம்போடியா, லாவோஸ், இந்தியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட, அந்த பூனைகளின் இயற்கை வாழ்விடங்களிலும் உற்பத்தி செய்யப்படுகிறது .
சிவெட் காபி தயாரிக்க, காட்டு சிவெட் பூனைகள் பிடிக்கப்பட்டு, நெரிசலான கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன.
அவற்றுக்கு காபி செர்ரிகளும் உணவாக அளிக்கப்படுகின்றன. இதனால் அவை நோய்வாய்ப்படுவதால் அவற்றின் ஆயுட்காலம் குறைகிறது.
அழியும் அபாயத்தில் இருக்கும் விலங்குகளாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் குறிக்கும் சிவப்பு பட்டியலில் 'குறைவான கவலைக்குரியவை' என்ற வகையில் சிவெட் பூனைகளை பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவில் சிவெட் காபி தூள் எங்கே கிடைக்கும்?
Getty Images மைசூர் மற்றும் குடகு பகுதிகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சிவெட் காபி தூளை ஆன்லைனிலும் விற்பனை செய்கின்றன.
இந்தியாவிலும் சிவெட் காபி உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகாவில் பல நிறுவனங்கள் இதை விற்பனை செய்கின்றன.
இது தொடர்பாக, மடிகேரியில் உள்ள குடகு காபி விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை பிபிசி தொடர்பு கொண்டது.
"நாங்கள் இங்கு சிவெட் காபி பொடியையும் விற்பனை செய்கிறோம். விவசாயிகளிடமிருந்து சிவெட் மலத்தை சேகரித்து, உலர்த்தி, கழுவி, சுத்தமான காபி பொடி தயாரிக்கிறோம். தற்போது, ஒரு கிலோவை ரூ.7,500க்கு விற்பனை செய்கிறோம். ஆண்டுக்கு 50 கிலோ விற்பனை செய்கிறோம்," என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.
மைசூர் மற்றும் குடகு பகுதிகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சிவெட் காபி தூளை ஆன்லைனிலும் விற்பனை செய்கின்றன.
காபி தயாரிக்க விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றவா ?
Getty Images
சிவெட் காபி தயாரிக்கும் முறையில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டி, பிபிசி முன்பு ஒரு புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டது.
அவை கூண்டில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் சூழல் குறித்து இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட புலனாய்வை அது விவரிக்கிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வனவிலங்கு பாதுகாப்பு ஆராய்ச்சி பிரிவு மற்றும் லண்டனைத் தளமாகக் கொண்ட உலக விலங்கு பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் பாலியில் உள்ள 16 தோட்டங்களில் கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 காட்டு புனுகு பூனைகளின் நிலையை மதிப்பிட்டனர்.
அதில், அவற்றின் கூண்டுகள் சுகாதாரமற்றவை என்றும் விலங்கு நலத் தரங்களை மீறுவதாகவும் அதில் கூறப்பட்டது.
ஆனால் காடுகளில் சுதந்திரமாக சுற்றித் திரியும் புனுகுப் பூனைகளின் மலத்தை மட்டுமே சேகரித்து அதிலிருந்து காபி தூள் தயாரிப்பதாக, விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில், சிவெட் விலங்குகளின் செரிமான அமைப்பால் காபி கொட்டைகளில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை, சிவெட்டுகளுக்கு தீங்கு விளைவிக்காமல், ஆய்வகங்களில் நகலெடுப்பதற்கான வழிகளை மற்ற ஆராய்ச்சியாளர்கள் தேடுகிறார்கள்.
சுவை எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், அது ஒரு உயிரை விட மதிப்புமிக்கது அல்ல.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு