Getty Images
கட்டு வரியன் பாம்புக்கு வட இந்தியாவின் சில கிராமங்களில் 'மூச்சை விழுங்கும் பாம்பு' என்ற பெயருண்டு. அதன் கடிக்கு ஆளான பலரும் உறக்கத்திலேயே இறந்துவிடுவதுதான் இப்படி அழைக்கப்படுவதற்குக் காரணம்.
அதேவேளையில், கட்டு வரியன் கடித்துவிட்டாலே மரணம்தான் என்று அச்சப்படத் தேவையில் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில், புதுக்கோட்டையில் அந்தப் பாம்பிடம் கடிபட்ட ஆறு வயது சிறுமி ஒருவர் ஒரு வாரம் கொடுக்கப்பட்ட தொடர் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்திருப்பது அதற்குச் சான்றாக விளங்குகிறது.
இருப்பினும், கட்டு வரியன் பாம்பு கடித்தால் பலரும் தூக்கத்திலேயே இறந்துவிடுவது ஏன்? அதன் நஞ்சு மனித உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
இந்தத் தகவல்களை விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் பாம்புகள் மற்றும் அதன் நஞ்சு தொடர்பாக ஆராய்ந்து வரும் வல்லுநர்களைத் தொடர்புகொண்டது.
வயிற்று வலியில் துடித்த ஆறு வயது சிறுமிபுதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே அமைந்துள்ளது குலவைப்பட்டி கிராமம். அங்கு வாழும் பழனி, பாப்பாத்தி தம்பதியின் ஆறு வயது மகள் ஸ்ரீமதி, கடந்த அக்டோபர் 15-ஆம் தேதியன்று இரவு திடீர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார்.
சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றிய தெளிவான தகவல்கள் ஏதும் பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்காத நிலையில், வயிற்று வலியில் துடித்த மகளை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
Dr A. Thanigaivel
இரு வேறு தனியார் மருத்துவமனைகளில் வெவ்வேறு சிகிச்சைகளைப் பெற்று, முன்னேற்றம் இல்லாத நிலையில், இரண்டு நாட்கள் கழித்தே சிறுமி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கண்களைத் திறக்க முடியாத நிலையில் சிறுமியைக் கொண்டு வந்ததாகவும் மிகத் தாமதமாக வந்ததால் சிகிச்சை அளிப்பதில் பல சிரமங்கள் இருந்ததாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார் குழந்தைகள் நல மருத்துவர் அரவிந்த்.
"சிறுமி கடும் வயிற்று வலியால் சிரமப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர். அதோடு, கண்களைத் திறக்க முடியாத நிலையில், இமைகளின் நரம்பு பாதிக்கப்பட்டு இருந்தது. அவர் சுவாசிக்கவும் சிரமப்பட்டார். இவையனைத்துமே கட்டு வரியன் பாம்பு கடித்தால் ஏற்படக்கூடிய அறிகுறிகள்.
இதை உணர்ந்தவுடன், உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு உறுதி செய்தோம். பின்னர் பாம்புக்கடிக்கு கொடுக்கப்படும் நஞ்சுமுறி மருந்தை சிறுமிக்கு கொடுத்து சிகிச்சையளிக்கத் தொடங்கினோம்," என்று தெரிவித்தார்.
கட்டு வரியன் கடித்தும் அதிக நேரம் உயிர் பிழைப்பது சாத்தியமா?பாம்பு கடிக்கும்போது எந்த அளவிலான நஞ்சை மனித உடலுக்குள் செலுத்துகிறது என்பதைப் பொறுத்தே இது மாறுபடும் என்கிறார் யுனிவெர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் மனோஜ்.
"இந்தக் குழந்தையைப் பொறுத்தவரை எப்போது பாம்பு கடித்தது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் கடிக்கும்போது சிறிய அளவிலான நஞ்சை மட்டுமே பாம்பு சிறுமியின் உடலில் செலுத்தியிருக்கலாம். இது அனைவருக்கும் அமையாது, நல்வாய்ப்பாக இந்தச் சிறுமிக்கு அமைந்துவிட்டது," என்று தெரிவித்தார் அவர்.
Dr.M.P.Koteesvar யுனிவெர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் மனோஜ்
இதுபோல கட்டு வரியன் கடித்து ஒரு நாள், இரண்டு நாட்கள் கழித்தும்கூட சிகிச்சைக்காக மக்கள் மருத்துவமனையை நாடுவதைத் தனது அனுபவத்திலும் சில முறை கண்டிருப்பதாக முனைவர் மனோஜ் தெரிவித்தார்.
"இதற்குக் காரணம், நாகப் பாம்பு போல இதன் நஞ்சு உடலுக்குள் சென்றவுடன் வேலையைக் காட்டுவதில்லை. ஒருவேளை நஞ்சின் அளவு குறைவாக இருந்தால், அதன் வீரியம் தெரியத் தொடங்குவதற்குச் சில மணிநேரம் முதல் ஒரு நாள் வரைகூட ஆகலாம்.
உடல் தாங்கக்கூடிய சிறிய அளவிலான நஞ்சை மட்டுமே பாம்பு உட்செலுத்தியிருந்தாலும், அதன் அறிகுறிகளை ஒருவர் அனுபவிப்பார். அதில் மாற்றமில்லை. ஆனால் அதற்கு எடுக்கும் நேரம் அதிகம். ஒருவேளை இப்படிப்பட்ட சூழலை புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்ட சிறுமி எதிர்கொண்டிருக்க வாய்ப்புள்ளது." என்று அவர் விளக்கினார்.
நஞ்சின் அளவு குறைவாக இருந்தாலும், அதற்கான விளைவுகளை உடல் அனுபவிக்கவே செய்யும் என்பதைக் குறிப்பிட்ட அவர் அதற்கு சிகிச்சை அளிக்கும் வரை அந்த பாதிப்புகள் நீங்காது என்றார். அதுவே, இரண்டு நாட்களுக்கு மேல் பிழைத்திருக்க முடிந்தாலும், குழந்தை பல்வேறு பாதிப்புகளை அனுபவித்தமைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் மனோஜ் குறிப்பிட்டார்.
இரவில் கடிக்கும் கட்டு வரியன் பாம்புகட்டு வரியன் கடித்த பிறகும் இரு நாட்களுக்கு மேல் உயிர் பிழைத்திருந்த சிறுமி, பின்னர் ஒரு வார சிகிச்சையைத் தொடர்ந்து முற்றிலுமாகக் குணமடைந்தார். இதுபோல, கடிபட்டதன் விளைவுகளை ஒருவர் அனுபவிக்கச் சிறிது நேரம் எடுக்கலாம் என்றார் மனோஜ்.
ஆனால், 'இந்தியாவில் நிகழும் பாம்புக்கடி மரணங்களில் கணிசமான இறப்புகளுக்கு கட்டு வரியனும் காரணமாக இருப்பது ஏன்?' என்ற கேள்வி எழுகிறது.
Getty Images
அதுகுறித்துக் கேட்டபோது, "பாம்பின் நஞ்சு குறைவான அளவில் செலுத்தப்பட்டால் மட்டுமே இப்படியான நல்வாய்ப்புகள் கிடைக்கும்" எனக் குறிப்பிட்ட அவர், மற்றபடி கட்டு வரியனின் நஞ்சு நுரையீரலில் வீக்கத்தை ஏற்படுத்துவதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதாகக் கூறினார்.
ஊர்வனவியலாளர் ரமேஸ்வரனின் கூற்றுப்படி, கட்டு வரியன் ஓர் இரவாடிப் பாம்பு, இரவில் அதிக சுறுசுறுப்புடன் இயங்கக்கூடியது. குறிப்பாக, நள்ளிரவில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் அது சுறுசுறுப்பாக இயங்கும்.
அதோடு, "வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவை காணப்படுகின்றன. இரவில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது வீடுகளுக்குள் வருவதால் மக்கள் எளிதில் கவனிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு. அது மட்டுமின்றி, கட்டு வரியன்கள் பிற நச்சுப் பாம்புகளைப் போல சீண்டப்படும்போது சத்தமிடுவது, எச்சரிப்பது போன்ற செயல்களைச் செய்யாது. எனவே அதன் இருப்பு கவனிக்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது.
அவை வருவதை, செல்வதைக்கூட யாரும் கவனித்துவிடாதபடி கூச்ச சுபாவம் மிகுந்த நடத்தைகளைக் கொண்டவை. இந்தக் காரணத்தால் கட்டு வரியன் இருப்பதையே பல நேரங்களில் மக்கள் கவனிக்கத் தவறும் சூழ்நிலை ஏற்படலாம்," என்று விவரித்தார் ரமேஸ்வரன்.
BBC ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன்
கட்டு வரியனை பொறுத்தவரை, "மரக்கட்டை குவியல்கள், சிலிண்டர் சந்துகள் போன்ற மறைவிடங்களை அதிகம் நாடுகின்றன. மழை மற்றும் குளிர்காலங்களில் கதகதப்பான இடம் தேடி வீடுகளுக்குள் புகுவதும் நடக்கின்றன.
அதோடு, அதன் உடலமைப்பும் வீடுகளுக்குள் யார் கண்ணிலும் படாமல் எளிதில் வந்து செல்லும் சாதகத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. கூடுதலாக இரவு நேரத்தில் அதிகம் இயங்குகின்றன. இதுவே இரவில் கட்டு வரியனால் பாம்புக்கடி விபத்துகள் அதிகம் ஏற்படக் காரணம். எனவே அவை குறித்த எச்சரிக்கை உணர்வு மிக அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்," என்றார் ரமேஸ்வரன்.
உடலில் கட்டு வரியன் பாம்பு கடித்த இடத்தை கண்டுபிடிக்க முடியாதா?நாகம், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் ஆகிய நச்சுப் பாம்புகளைப் பொறுத்தவரை கடித்த இடத்தில் அதைக் காட்டக்கூடிய காயங்கள் தென்படும். ஆனால் கட்டு வரியனில் அப்படி எதுவும் தெரியாது என்கிறார் முனைவர் மனோஜ்.
பொதுவாக பாம்பு கடித்துவிட்டால், கடித்த இடத்தில் கடுமையான வலி, நச்சுப் பற்கள் பதிவது, வீக்கமடைவது, சிவப்பு அல்லது கருமை நிறத்திற்கு மாறுவது, தீப்புண் போன்ற கொப்புளங்கள் வருவது எனப் பல்வேறு வடிவங்களிலான காயங்களைக் காண முடியும்.
ஆனால், "கட்டு வரியன் கடித்த இடத்தில் எவ்வித தடயங்களையும் காண முடியாது. இதனால், நோயாளி பாம்பு கடித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளைத்தான் அனுபவிக்கிறார் என்பதை உறுதி செய்வதே மருத்துவர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும்," என்று மனோஜ் விளக்கினார்.
அவரது கூற்றுப்படி, நாகப் பாம்புகளின் நச்சுப் பற்கள் சராசரியாக 8 முதல் 10 மில்லிமீட்டர் வரை இருக்கும். "கண்ணாடி விரியனின் நச்சுப்பல் அதைவிடப் பெரியது, சுமார் ஒன்றரை இன்ச் வரைகூட இருக்கும். எனவே அவை கடித்த இடத்தை எளிதில் கண்டறிய முடியும்.
சுருட்டை விரியன் விஷயத்தில்கூட பற்கள் சிறிதாக இருந்தாலும் கடித்த இடத்தில் கொப்புளங்கள் போன்ற காயங்கள் ஏற்படும். அதை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் வெறும் 4 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவைக் கொண்ட நச்சுப் பற்களை உடைய கட்டு வரியன் கடித்த இடத்தில் இப்படி எவ்வித தடயமும் இருக்காது."
இதோடு, வழக்கமாக பாம்புக்கடியை உறுதி செய்யப் பயன்படுத்தப்படும் வெள்ளை ரத்த அணுக்கள் பரிசோதனையில்கூட, நாகம் மற்றும் கட்டு வரியனின் நஞ்சு ரத்தத்தில் இருப்பதைக் கண்டுபிடிப்பது சிரமம் எனவும் மனோஜ் தெரிவித்தார்.
இந்த சவால்கள், ஒருவர் உடல்நல பாதிப்புகளோடு மருத்துவமனைக்கு வரும்போது "உடலில் பாம்புக்கடி பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆராய்வதை சிக்கலாக்குகிறது."
அதனால், "நோயாளிக்கு இருக்கும் பாதிப்புகள் கட்டு வரியன் கடியின் அறிகுறிகளை ஒத்திருந்தால் உடனே தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, உரிய பரிசோதனைகளைச் செய்த பிறகு சிகிச்சைகளைத் தொடங்க வேண்டும் என்பது நடைமுறை," என்று விளக்கினார் பாம்பின் நஞ்சு மற்றும் பாம்புக்கடி குறித்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ந்து வரும் முனைவர் மனோஜ்.
Getty Images கட்டு வரியன் கடித்தால் தூக்கத்திலேயே இறந்துவிடுவார்களா?
இதுகுறித்து விளக்கிய ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன், "கட்டு வரியன் கடிப்பதாலேயே தூங்கும்போது இறப்பு நிகழ்வதாக அர்த்தமில்லை. அவை பல நேரங்களில் மனிதர்களை தூங்கும்போது கடித்துவிடுகிறது என்பதே அதற்குக் காரணம்," என்றார்.
குளிருக்கு கதகதப்பாக இருக்கும் வீடுகளுக்குள் புகுந்துவிடும் இவை சில நேரங்களில் மனிதர்களுக்கு நெருக்கமாகச் சுருண்டு படுத்திருப்பதாகவும், அப்போது எதேச்சையாக அவற்றை மனிதர்கள் அழுத்திவிட்டாலோ காயப்படுத்திவிட்டாலோ உடனே கடித்து விடுவதாகவும் முனைவர் மனோஜ் குறிப்பிட்டார்.
மறுபுறம், இதுபோன்ற சம்பவங்கள் பதிவாவதாக வாய்மொழித் தகவல்கள் வந்தாலும், கட்டு வரியன் மனிதர்களை இரவு நேரத்தில் நெருங்கி வருவது ஏன் என்பது குறித்துத் தெரிந்துகொள்ள விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார் ரமேஸ்வரன்.
கட்டு வரியன் பாம்பின் நஞ்சு நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது என்பதால், கடிபட்டவர்களுக்கு கடும் வயிற்று வலி, வாந்தி வருவதைப் போன்ற உணர்வு, கண்களைத் திறக்க முடியாமல் போவது, துர்நாற்றத்துடன் எச்சில் வடிதல், சுயநினைவை இழப்பது ஆகிய அறிகுறிகள் ஏற்படுவதாக மனோஜ் தெரிவித்தார்.
"நரம்பியல் மண்டலத்தை அதன் நஞ்சு தாக்குவதால், நுரையீரலில் வீக்கம் ஏற்படுகிறது, கண் இமைகளைத் திறக்க முடியாமல் கடிபட்டவர்கள் அரை மயக்க நிலைக்குச் செல்ல நேரிடுகிறது, சுயநினைவை இழக்கின்றனர். நுரையீரல் ஆக்சிஜனை உடல் முழுக்க கொண்டு செல்ல முடியாமல் போவதால் சுவாசிக்க முடியாமல் கடிபட்டவர்கள் உயிரிழக்கின்றனர்." என்று அறிகுறிகளை விளக்கினார் மனோஜ்.
இரவு நேரங்களில் தூங்கும்போது ஒருவேளை கடித்து, காலை வரை அதை யாரும் கவனிக்காத சூழல் நிலவினால் கடிபட்டவர் மரணிக்க அதிக வாய்ப்புள்ளது என்றவர், அதையே "இரவில் தூக்கத்திலேயே அதன் கடி மரணத்தை ஏற்படுத்துவதாக" கூறப்படுகிறது எனவும் விவரித்தார்.
இதனாலேயே அவற்றை வட இந்திய கிராமங்கள் பலவற்றில் "மூச்சை விழுங்கும் பாம்பு" என மக்கள் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒருவரை கட்டு வரியன் கடித்து பல மணிநேரம் கழித்தும்கூட அறிகுறிகள் தெரியத் தொடங்கும் எனத் தெரிவித்த அவர், மிக முக்கியமாக நரம்பியல் செயல்பாடுகளை அதன் நஞ்சு தடை செய்வதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுவாசம் தடைபடுவதாகக் கூறினார்.
"அதற்கு வென்டிலேட்டர் உதவியுடன் நுரையீரலில் நேரடியாக ட்யூப் செலுத்தி செயற்கை சுவாசம் வழங்குவதன் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்," என்று விளக்கினார் முனைவர் மனோஜ்.
அவரது கூற்றுப்படி, கட்டு வரியன் பாம்பின் நஞ்சு, நாகம் போன்ற பிற பாம்புகளின் நஞ்சைப் போல உடனடியாக பாதிப்புகளை ஏற்படுத்துவது குறைவுதான் என்றாலும், அவை கடித்துவிட்டதைக் கண்டுபிடிப்பதே கடினம் என்பதால், சவாலான பாம்புக்கடி சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கூடுதல் தகவல்கள்: பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு