சேலம் அருகே பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் சென்ற காரை குழுவொன்று வழிமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த 11 பேர் காயமடைந்த நிலையில், போலீசார் இரு தரப்பினர்மேலும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வடுகத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த பா.ம.க. ஒன்றிய செயலாளரின் தந்தை மறைவுக்கான துக்கவீட்டிற்கு நேற்று எம்.எல்.ஏ. அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றனர். பின்னர் அவர்கள் திரும்பியபோது, வடுகத்தம்பட்டி பாலம் அருகே திடீரென கார் வழிமறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும், பின்னால் வந்த ஆதரவாளர்களும் இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல். பின்னர் இது கைகலப்பாக மாறி கட்டை, கல் வீச்சு நடந்ததாக கூறப்படுகிறது. இதில் இளைஞர் அணி செயலாளர் விஜயகுமாருக்கு கையில் கத்திக்குத்து ஏற்பட்டதுடன், 10 பேர் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைக்கு கட்டுப்பாடு கொண்டு வந்தனர்.
சம்பவம் குறித்து எம்.எல்.ஏ. அருள், “அன்புமணி தரப்பைச் சேர்ந்தவர்கள் கொலை நோக்கத்துடன் தாக்கினர்; டிரைவர் வேகமாக இயக்கியதால் தப்பினோம்” என்றார். இதற்கு பதிலாக, அன்புமணி தரப்பும் “எம்.எல்.ஏ. தரப்பு தங்களையே தாக்க முயன்றது; கார் ஓட்டி தாக்க முயற்சி செய்தது” என்று குற்றம் சாட்டியுள்ளது.

பா.ம.க. தலைவர் ராமதாஸ் இச்சம்பவத்தை கண்டித்துள்ளார். எம்.எல்.ஏ. அருளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதேவேளை, அன்புமணி தரப்பு, அருள் எம்.எல்.ஏ.யை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
சம்பவத்துடன் தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், எம்.எல்.ஏ. அருளை தாக்கியதாக கூறப்படும் அன்புமணி ஆதரவாளர்கள் 25 பேர்மீதும், அன்புமணி ஆதரவாளர் ஜெயபிரகாஷின் புகாரின் பேரில் எதிர் தரப்பினர்மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?