சமூக வலைதளங்களில் ஒரு தனித்துவமான காணொளி வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் குரங்குகளை வைத்துச் செய்த சமூக சோதனை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்பெண் தன் ஆடையிலிருந்த முட்கள் போன்ற விதைகளை அகற்ற குரங்கிடம் உதவி கேட்கும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில், தான் அணிந்திருந்த ஆடையின் மீது ஒட்டியிருந்த முள்ளுருண்டை விதைகளை அகற்ற அப்பெண் குரங்குகளை நாடிச் செல்கிறார். ஆரம்பத்தில், குரங்குகள் இவரைக் கண்டதும் தமக்கு ஏதேனும் தீங்கு நேருமோ என அஞ்சி ஓடுகின்றன.
பிறகு மற்றொரு குரங்கிடம் சென்றபோது, அந்தக் குரங்கு மனிதநேயத்துடன் செயல்பட்ட விதம் அனைவரின் மனதையும் தொட்டுள்ளது. அந்தக் குரங்கு, அப்பெண்ணின் ஆடையிலிருந்த முட்களை ஒவ்வொன்றாக நீக்கி எறிந்து உதவி செய்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பெண், அதற்கு வேர்க்கடலை கொடுத்து மகிழ்வித்தார். இந்தக் காட்சிகள் அரிதானவை என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
‘@AMAZlNGNATURE’ என்ற பயனர் பெயருடன் ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த 30 விநாடி காணொளி 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 15,000க்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது. “மனிதர்களை விட விலங்குகளுக்கு அறிவு அதிகம்” என்றும், “கருணையும் உதவியும் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திலும் உள்ளார்ந்தவை என்பதை இந்தக் காணொளி நிரூபிக்கிறது” என்றும் பயனர்கள் ஆச்சரியத்துடன் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.