நியூயார்க்கில் ஸோஹ்ரான் மம்தானி வெற்றிக்கு பிறகு நேருவின் உரை ஒலித்தது ஏன்?
BBC Tamil November 06, 2025 07:48 PM
Getty Images

"வரலாற்றில் அரிதாகவே ஒரு தருணம் வரும் - அப்போது நாம் பழையதிலிருந்து புதியதுக்குள் ஒரு அடியை எடுத்து வைக்கிறோம்," என புதன்கிழமையன்று நியூயார்க்கில் உற்சாகமாக கூடிய மக்கள் மத்தியில் ஸோஹ்ரான் மம்தானி கூறினார்.

1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த நள்ளிரவில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய புகழ்பெற்ற உரையை மேற்கோள் காட்டி, மம்தானி பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மம்தானி, "ஒரு யுகம் முடிவடையும் போது, ஒரு தேசத்தின் ஆன்மா தனது குரலை வெளிப்படுத்துகிறது. இன்று நாம் பழையதை விட்டு புதியதை நோக்கி செல்கிறோம்," என்றார்.

மம்தானி வெற்றி உரையை முடிந்தவுடன், 2004-ல் வெளியான பாலிவுட் திரைப்படமான தூம் படத்தின் பாடல் அரங்கில் ஒலித்தது.

பின்னர், ஜே-ஸி மற்றும் அலிசியா கீஸின் எம்பயர் ஸ்டேட் ஆஃப் மைண்ட் பாடல் ஒலித்தது. நியூயார்க்கின் முதல் இந்திய வம்சாவளி மேயராக, மம்தானி வரலாறு படைத்த தருணத்தில், இந்தப் பாடல் புதிய அர்த்தத்தைப் பெற்றது.

முன்னதாக, தேர்தல் பிரசாரத்தில் மம்தானி பாலிவுட் பாணியைப் பயன்படுத்தியிருந்தார். இது அவரது தெற்காசிய வேர்களைப் பிரதிபலித்தது.

அவரது தாய், பிரபல திரைப்பட இயக்குநரான மீரா நாயர். தந்தை உகாண்டாவில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அறிஞர் மஹ்மூத் மம்தானி.

இன்ஸ்டாகிராமில், மம்தானி இந்தியில் பதிவிட்ட செய்திகளில், பிரபல பாலிவுட் படங்களின் வசனங்களையும் காட்சிகளையும் பயன்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், புதன்கிழமையன்று அவர் ஆற்றிய உரையில் நேருவை மேற்கோள் காட்டியது, மம்தானியுடைய பிரசாரத்தின் உச்சகட்டமாக இருந்தது.

Getty Images நேருவின் 1,600 வார்த்தைகள் கொண்ட உரை

சுமார் 77 ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியில் அரசியலமைப்பு சபை அரங்கத்தில் மிகுந்த பரபரப்பான சூழலில் பேசினார் நேரு. அந்த உரையின் ஒரு பகுதியைத் தான் மம்தானி மேற்கோள் காட்டியிருந்தார்.

"நீண்ட காலத்துக்கு முன்பு நாம் லட்சியத்தை நோக்கிய பயணத்தை முடிவு செய்தோம். முழுமையாக இல்லாவிட்டாலும் அந்த லட்சியத்தை கணிசமான அளவில் செயல்படுத்தும் காலம் இப்போது வந்திருக்கிறது. இந்த நள்ளிரவில், ஒட்டுமொத்த உலகமும் உறங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், தன் விடுதலைக்காகவும் வாழ்வுக்காகவும் இந்தியா விழித்துக்கொண்டிருக்கிறது"என்றார் நேரு.

1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவுக்கு முந்தைய தருணம் அது.

இரு நூற்றாண்டு நீடித்த பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பின் இந்தியா சுதந்திரம் அடைந்தது. நேருவின் சொற்கள், மகிழ்ச்சியையும் பொறுப்பையும் தாங்கியிருந்தன. ஒரு நாட்டின் குரல் உருவாகும் தருணத்தையும், அதனுடன் வரும் கடமை உணர்வையும் பிரதிபலித்தன.

Reuters

இந்நிலையில், நேருவின் உரையில் இருந்து மம்தானி பயன்படுத்திய மேற்கோள், நியூயார்க்கில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் தொடக்கத்தை உறுதியளித்ததாக பலரும் நம்புகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு தருணத்தில், நேரு ஒரு மிகப் பெரிய விஷயத்தை நினைவூட்டினார். அது, ஒரு தேசத்தின் மறுபிறப்பைப் பற்றி இருந்தது.

சுதந்திரம் என்பது ஒரு முடிவல்ல, தொடக்கம் என்றார் நேரு. "இது ஓய்வு அல்ல, இடையறாத முயற்சியின் தொடக்கம்" என்றார்.

இந்தியாவுக்கு சேவை செய்வது என்றால், "வேதனையில் வாடும் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை செய்வதையும், வறுமை, அறியாமை, நோய் மற்றும் வாய்ப்புச் சமத்துவமின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதையும்" குறிப்பிடுகிறது என அவர் வலியுறுத்தினார்.

மேலும், "பயனில்லாத விமர்சனங்களைக்" கடந்து, ஒற்றுமையை வலியுறுத்தி, "அனைவரும் வாழக்கூடிய வகையில் சுதந்திர இந்தியாவின் மாளிகையை" கட்டுவோம் என்றும் குறிப்பிட்டார்.

நேருவின் 1,600 வார்த்தைகள் கொண்ட உரை, வரலாற்றின் மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

நியூயார்க் டைம்ஸ், "நேரு தனது உயர்ந்த சொற்பொழிவால் இந்தியர்களை உற்சாகப்படுத்தினார்," என்றது.

வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, "உணர்ச்சி நிறைந்த பேச்சு," என வர்ணித்தார்.

ZohranKMamdani/X மம்தானியின் பிரச்சாரத்தில் பிரபலமான பாலிவுட் படங்களின் படங்கள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றன.

அன்று இரவு மூன்று முக்கிய நபர்கள் பேசினர்: இந்திய இஸ்லாமியர்களுக்காக சௌத்ரி கலீக்குஸ்-சமான், பேச்சாற்றலும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட அறிஞர், முனைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் அன்றைய நாளின் முக்கிய நட்சத்திரமாக ஜவஹர்லால் நேரு ஆகியோர் உரையாற்றினர் .

நேரு உரையாற்றிய தருணம், மின்னல் தாக்கியது போல இருந்தது.

''இந்தியத் தலைவர்கள் நள்ளிரவுக்கு ஒரு மணி நேரம் முன்பு அரசியலமைப்பு சபை அரங்கில் கூடினர். அந்த அரங்கு, இந்தியாவின் புதிய மூவர்ணக் கொடியின் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை வண்ணங்களால் ஒளிர்ந்தது. நேரு அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் உரை ஆற்றினார்'' என டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டது.

அதன் பிறகு நிகழ்ந்தது, வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணம்.

"அன்று நள்ளிரவு பன்னிரண்டாவது மணி ஒலித்து முடித்ததும், விடியலை அறிவிக்கும் பாரம்பரிய சங்கு முழங்கியது. அரங்கில் இருந்த உறுப்பினர்கள் எழுந்து நின்று, இந்த முக்கியத் தருணத்தில் இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்ய உறுதியளித்தனர்."

வெளியே, இந்தியர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.

இந்தியா ஆஃப்டர் காந்தி (India After Gandhi ) என்ற புத்தகத்தில், ராமச்சந்திர குஹா ஒரு அமெரிக்க செய்தியாளரை மேற்கோள் காட்டுகிறார்.

அதில், "இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் ஒன்றாக மகிழ்ந்தனர்... அது புத்தாண்டு இரவில் நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயர் போல இருந்தது. கூட்டத்தில் பலரும் நேருவைப் பார்க்க விரும்பினர்"என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், மகிழ்ச்சிக்கு மறுபுறம், குழப்பமும் வன்முறையும் தொடங்கியிருந்தன.

இந்திய துணைக் கண்டத்தில் மதக் கலவரங்கள் வெடித்தன. இரு நாட்களில் எல்லைகள் வரையப்பட்டன.

இதனால் வரலாற்றில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இடப்பெயர்வு நிகழ்ந்தது. சுமார் 15 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். ஒரு மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.

இந்தக் குழப்பத்திக்கு மத்தியில், நேருவின் சொற்கள் தனித்துவமாக ஒலித்தன. அவை இந்தியாவின் நிறைவேறாத கனவுகளை நினைவூட்டின. அந்த வரலாற்று தருணத்தின் பெருமைக்கு ஏற்ப, நேருவின் பேச்சுத்திறன் மிகச் சரியாக பொருந்தியது என்று பலர் கருதுகிறார்கள்.

அப்போதே, நேரு ஒரு சிறந்த பேச்சாளராகப் புகழ் பெற்றிருந்தார்.

அரசியல், அறிவியல், கலை, அறவியல் என பல்துறை தொடர்பான கருத்துக்களை எளிதாக உள்ளடக்கிய, முன்தயாரிப்பு இல்லாத உரைகளை அவர் வழங்கினார்.

1947 ஆகஸ்டில் தனது புகழ்பெற்ற உரையை முடித்த நேரு, "நமக்கு முன் கடினமான பணிகள் உள்ளன. நமது வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி, இந்திய மக்களை அவர்களின் கனவுகளை நோக்கி கொண்டு செல்லும் வரை யாருக்கும் ஓய்வு இல்லை"என்று கூறினார்.

ஏழு தசாப்தத்துக்கு பின், நியூயார்க்கில் மம்தானிக்கு அவருக்கென ஒரு வேறுபட்ட பணி காத்திருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.