ஜவ்வாது மலையில் தங்க புதையல் - கட்டுமானத்திற்காக தோண்டிய போது கிடைத்தது
BBC Tamil November 06, 2025 09:48 PM
BBC தங்க காசுகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள சிவன் கோயிலில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டிய போது தங்க புதையல் கிடைத்துள்ளது.

திருவண்ணாமலை கலசப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலையில் அமைந்துள்ளது கோவிலூர் கிராமம்.

இங்கு பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவில் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கோவில் வளாகத்தை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்த நிலையில், தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக பள்ளம் தோன்றிய போது அதிலிருந்து 100-க்கும் மேற்பட்ட தங்க காசுகள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

BBC சிறிய அளவிலான தங்க காசுகள்

கோவில் கட்டுமான பணியின் போது கிடைத்த தங்க காசுகளின் புதையல் தொடர்பாக அறநிலையத் துறை செயல் அலுவலர் சிலம்பரசன் பிபிசி தமிழிடம் தொலைபேசியில் விவரித்தார்.

"கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திங்கட்கிழமை (நவம்பர் 3) காலை ஊழியர்கள் திருமூலநாதர் கருவறையில் கட்டுமானப் பணிகளுக்காகப் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தரைக்குக் கீழே ஒரு சிறிய பானை புதைந்திருப்பதைக் கண்டனர்."

BBC புரனமைப்பு பணிகள் செய்யப்படுவதற்கு முன் கோவிலின் தோற்றம்

"சந்தேகத்துடன் அந்தப் பானையை வெளியே எடுத்துத் திறந்து பார்த்தபோது, அதனுள் தங்க காசுகள் இருந்துள்ளன. உடனடியாக நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டோம். அந்தப் பானையில் மொத்தம் 103 தங்க காசுகளும் இருந்தது உறுதி செய்யப்பட்டது." என்றார்.

கண்டெடுக்கப்பட்ட 103 தங்க காசுகளும் கைப்பற்றப்பட்டு, வருவாய்த்துறை மூலம் பாதுகாப்பாக அரசுக் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

BBC தங்க காசுகள் சோழர் காலத்து கோவில்

திருவண்ணாமலை வட்டாட்சியரும் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலருமான பாலமுருகன் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள சிவன் கோவில் வரலாற்று தகவல்கள் குறித்து பிபிசி தமிழிடம் விவரித்தார்.

"சோழர் காலத்து கோவிலான இது தற்போது ஆதிஅருணாச்சலேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டாலும் கோவிலில் உள்ள கல்வெட்டுச் சான்றுகளின்படி திருமூலநாதர் கோவில் என்று அழைக்கப்பட்டுள்ளது." என்கிறார் பாலமுருகன்.

கோவிலின் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்து விட்டதாகக் கூறிய அவர் அறநிலையத் துறை மூலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

"இந்த தங்க காசுகள் மிக சிறிய அளவிலானவை. இந்த தங்க காசுகள் கோவில் மற்றும் வீடு கட்டும்போது கருவறை மற்றும் நில வாயில்படி பகுதியில் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன," என்றும் குறிப்பிட்டார்.

BBC தங்க புதையல் கிடைத்த இடம்

தங்க காசுகள் தவிர்த்து இந்தக் கோவிலின் அருகே பல வரலாற்றுச் சின்னங்கள் இருப்பதாகவும் பாலமுருகன் தெரிவித்தார்.

"கோவில் அருகிலேயே பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு கல்வெட்டும் காணப்படுகிறது. அதே போல் கோவிலின் சுவர் பகுதியில் சோழர் கால கல்வெட்டுகளும் வேறு சில கல்வெட்டுகளும் உள்ளன.

சமநிலப் பகுதிகளில் சோழர்கள் மிக சிறப்பான வேலைப்பாடுகளுடன் கோவிலை கட்டியுள்ளார்கள். அதே போல் சிற்பங்களுடன் மிக கலைநயத்துடனே இந்தக் கோவிலை பல்லாயிரம் அடி உயரத்தில் ஜவ்வாது மலையில் கட்டியுள்ளது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது." என்றார் பாலமுருகன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.