Getty Images முத்து அழகாத்ரி நாயக்கருக்கு சங்கிலியுடன் கூடிய கடிகாரம் கிடைத்ததா என்பது தெரியவில்லை (சித்தரிப்புப் படம்)
பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி தமிழகப் பகுதிகளில் வணிகத்தை மேற்கொள்ள ஆரம்பித்தது. அந்தத் தருணத்தில் மதுரையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களுடன் உறவை மேம்படுத்திக்கொள்ள பல வகைகளில் முயற்சி செய்தது. அதற்காக பல பரிசுகளையும் அளித்தது. அதைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசும்போது பெரும்பாலும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தைப் பற்றியும் சில தருணங்களில் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தையும் பற்றியே விரிவாகப் பேசப்படுகிறது.
ஆனால், காலனியாதிக்க காலத்தின் ஆரம்ப நாட்களில் போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய நிறுவனங்களும் டச்சுக் கிழக்கிந்திய நிறுவனங்களும்கூட தமிழ்நாட்டின் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன.
இதில் டச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் தென் தமிழகப் பகுதிகளில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்தபோது உள்ளூர் ஆட்சியாளர்களான மதுரை நாயக்க மன்னர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த உறவு மிக சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது.
காயல்பட்டினத்தில் டச்சு வர்த்தக மையம்
Brill Academic Pub டச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் மதுரை நாயக்க மன்னர்களுக்கும் இடையிலான உறவை மார்கஸ் பி.எம். விங்க் எழுதிய புத்தகம் விரிவாகவே விவரிக்கிறது.
டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி 1602ஆம் ஆண்டிலேயே துவக்கப்பட்டுவிட்டாலும் 1645ஆம் ஆண்டில்தான் காயல்பட்டினத்தில் டச்சுக்காரர்கள் தங்கள் வர்த்தக மையத்தை துவங்கினர்.
1658-இல் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடியை இந்த நிறுவனம் கைப்பற்றியது. இதையடுத்து மதுரைப் பகுதியின் தலைமையகமாக தூத்துக்குடி உருவெடுத்தது.
இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மதுரை, செஞ்சி, தஞ்சாவூர் பகுதிகளை வெவ்வேறு நாயக்க மன்னர்கள் ஆட்சிசெய்துவந்தனர். இந்த மூன்று அரசுகளில் மதுரை நாயக்க அரசே பொருளாதார ரீதியிலும் ராணுவ ரீதியிலும் வலிமையானதாக இருந்தது. இதனைத் தொடர்ந்து மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுக்கும் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் இடையிலான கலாசாரப் பரிவர்த்தனைகள் துவங்கின. இந்தப் பரிவர்த்தனை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டிற்கு நீடித்தது.
இந்தக் காலகட்டத்தில் டச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் மதுரை நாயக்க மன்னர்களுக்கும் இடையிலான உறவை மார்கஸ் பி.எம். விங்க் எழுதிய Encounters on the Opposite Coast: The Dutch East India Company and the Nayaka State of Madurai in the Seventeenth Century புத்தகம் விரிவாகவே விவரிக்கிறது.
டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி Verenigde Oostindische Compagnie என்று குறிப்பிடப்பட்டது. சுருக்கமாக VOC. இந்தக் கம்பனி பல உள்ளூர் நிறுவனங்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட நிறுவனமாக இருந்தது. உள்ளூரில் போட்டியைக் குறைப்பதற்காகவும் மிகச் சக்தி வாய்ந்த அரசியல் வர்த்தக நிறுவனமாக இருப்பதற்காகவும் இப்படி பல நிறுவனங்கள் 1602ல் ஒன்றாக இணைக்கப்பட்டன. டச்சு நாட்டுக்குக் கிழக்கே வர்த்தகம் செய்ய இந்த நிறுவனத்திற்கு முற்றுரிமை கொடுக்கப்பட்டது.
மேலும், கோட்டைகளைக் கட்டவும் தொழிற்சாலைகளை நிறுவவும் ஆளுநர்களை நியமிக்கவும் படை வீரர்களைச் சேர்க்கவும் நீதி வழங்கவும் ஒப்பந்தங்களை முடிவுசெய்யவும் டச்சு ஆட்சியாளர்களின் சார்பில் அந்தந்த உள்ளூர் ஆட்சியாளர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் இந்த நிறுவனத்திற்கு உரிமை வழங்கப்பட்டிருந்தது.
1630களுக்குப் பிறகு போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கம் செலுத்திய ஆசியப் பகுதிகளில் குறிப்பாக, இந்தியா மற்றும் இலங்கையின் மேற்குக் கரைகளின் மீது இந்த நிறுவனங்களின் கவனம் திரும்பியது. விரைவிலேயே செஞ்சி, மதுரை, தஞ்சாவூர் நாயக்க அரசுகளின் கீழிருந்த பகுதிகளில் தன் வர்த்தகத்தை இந்த நிறுவனம் துவங்கியது. 1658ல் தூத்துக்குடியை போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து டச்சுக் கம்பனி கைப்பற்றியது. இதையடுத்து அந்தப் பகுதியின் டச்சு தலைமையகமாக தூத்துக்குடி உருவெடுத்தது.
டச்சுக்காரர்கள் காயல்பட்டினத்தில் தங்கள் வர்த்தக மையத்தைத் துவங்கிய அதே 1645ஆம் ஆண்டுவாக்கில், செஞ்சி, மதுரை, தஞ்சை நாயக்க அரசர்கள் தங்களுடைய பேரரசரான மூன்றாம் ஸ்ரீ ரங்க ராயரிடமிருந்து விடுபட்டு (கி.பி. 1642 - 1652) தனித்துச் செயல்பட ஆரம்பித்திருந்தனர்.
முத்து வீரப்ப நாயக்கருடனான வர்த்தக ஒப்பந்தம்
Getty Images 1690வாக்கில் மதுரைப் பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான தறிகள் டச்சுக்காரர்களுக்காக இயங்கிவந்தன. (சித்தரிப்புப் படம்)
1690ல் மதுரையை ஆண்டுகொண்டிருந்த மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கருடன் (கி.பி. 1682 – கி.பி. 1691) டச்சுக்காரர்கள் வர்த்தகத்திற்காக ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டனர். டச்சுக்காரர்களின் முக்கிய வர்த்தகமாக ஜவுளி வர்த்தகமே அந்த காலகட்டத்தில் இருந்தது.
1690வாக்கில் மதுரைப் பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான தறிகள் டச்சுக்காரர்களுக்காக மதுரை நாட்டில் இயங்கிவந்தன. இதனால், ஏற்றுமதி - இறக்குமதி மூலம் மதுரை நாட்டுக்கு ஏகப்பட்ட வரி வருவாய் குவிய ஆரம்பித்தது.
இந்த காலகட்டத்தில் மதுரையிலிருந்து முத்து, சங்கு, உணவு தானியங்கள், சுண்ணாம்புக்கல், உப்பு, பவளப் பாறைகள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. அதேபோல, சாக்குப் பைகள், கயிறு, கூடை ஆகியவையும் இங்கிருந்து ஏற்றுமதியாகின.
டச்சுக்காரர்கள் மதுரை நாட்டில் தீவிரமாக வர்த்தகத்தை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில், மன்னரைச் சந்திக்கும்போது வழங்கும் பரிசுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்தது என்பதை மார்க்கஸ் விங்கின் புத்தகம் விரிவாக விவரிக்கிறது. பரிசுப் பொருட்களைப் பொருத்தவரை, நாயக்கர் அரண்மனையில் இரண்டு விதங்களில் முக்கியமாக கருதப்பட்டன.
முதலாவதாக, அவற்றின் மதிப்புக்காக, நூதனமான பொருட்களை வைத்திருப்பது அந்தஸ்தாக கருதப்பட்டது. இதனால், பரிசுப் பொருட்கள் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டன.
திருமலை நாயக்கரின் பேரனான சொக்கநாத நாயக்கர் ஆட்சியிலிருந்தபோது அரசு மிக பலவீனமாக இருந்ததால், அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவரது ஒன்று விட்ட சகோதரரான முத்து அழகாத்ரி நாயக்கரை மன்னராக்கினர். இது நடந்தது கி.பி. 1678ல்.
முத்து அழகாத்ரி நாயக்கரும் (முத்துலிங்க நாயக்கர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார்) இந்தப் பரிசுகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். கடிகாரங்கள் போன்ற சிக்கலான எந்திரங்களுக்கு அந்தக் காலகட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது.
Getty Images மதுரை, திருமலை நாயக்கர் அரண்மனை
இந்த காலகட்டத்தில் திருநெல்வேலியின் ஆளுநராக இருந்த சொக்கநாத பிள்ளை 1678 டிசம்பரில் தூத்துக்குடியில் இருந்த டச்சுக் கம்பனியின் பிரதிநிதிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதாவது, கம்பனியின் தூதுவர் திருச்சியில் வைத்து மன்னருக்கு அளித்த கடிகாரம் அரசருக்கு திருப்தி அளிக்கவில்லை என அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
"நாயக்கர் விரும்பியது இது போன்ற கடிகாரத்தை அல்ல" என்றார். ஆகவே, அரசருக்கு வேறு ஒரு கடிகாரத்தை அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. அதாவது, தஞ்சையின் மன்னராக இருந்த எக்கோஜிக்கு அளித்ததைப் போன்ற, சங்கிலியால் இணைக்கப்பட்டு, கழுத்தில் தொங்கவிடக்கூடிய கடிகாரத்தையே நாயக்கர் விரும்புகிறார் எனக் சொக்கநாத பிள்ளை குறிப்பிட்டார்.
முத்து அழகாத்ரி நாயக்கருக்கு சங்கிலியுடன் கூடிய கடிகாரம் கிடைத்ததா என்பது தெரியவில்லை. கொந்தளிப்பு மிக்க சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சொக்கநாத நாயக்கர் அரசரானார். ஆனால், அவரும் மறைந்துவிடவே ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் என்ற மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கரைப் பொறுத்தவரை, நூதனப் பொருட்களின் மீது தீராத ஆவல் இருந்தது.
மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சிக்கு வந்து சில ஆண்டுகளில், அவருக்குத் தேவைப்படும் நூதன பொருட்களின் பட்டியலோடு 1685வாக்கில் அவரது தூதர்கள் தூத்துக்குடியில் இருந்த டச்சு தூதரைச் சந்தித்தார்கள். அந்தப் பட்டியலில் கடிகாரங்கள், திசைகாட்டிகள், கண்ணாடிகள், பிஸ்டல்கள், இரட்டைக் குழல் துப்பாக்கிகள், நல்ல தரமான ஓபியம் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
கம்பனியின் தூதராக இருந்த நிக்கோலஸ் வால்டர், மன்னரைச் சந்தித்தபோது, அவருடைய வாள், அலங்கார கயிறு, தொப்பி போன்ற பல பொருட்களை அவர் மன்னருக்கு பரிசாகக் கொடுக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் மன்னருக்குத் திருப்தி இல்லை. "என்னைப் போன்ற மன்னருக்குத் தகுந்தபொருட்கள் தூத்துக்குடியிலோ, கொழும்பு நகரிலோ இருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியதாக புத்தகம் பதிவுசெய்கிறது.
வெளிநாட்டுத் தூதர்கள் கொண்டுவரும் பொருட்களின் முக்கியத்துவம்
Getty Images காலனியாதிக்க காலத்தின் ஆரம்ப நாட்களில் போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய நிறுவனங்களும் டச்சுக் கிழக்கிந்திய நிறுவனங்களும்கூட தமிழ்நாட்டின் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன.
பொது இடங்களில் இது போன்ற பொருட்களை காண்பிப்பது அல்லது அந்தப் பொருட்களோடு வலம் வருவதற்குப் பின்னால், அரசியல் - கலாசாரக் காரணங்கள் இருந்ததாக இந்த நூல் குறிப்பிடுகிறது. அதாவது, நாட்டிற்குள்ளும் வெளியிலும் முத்து வீரப்ப நாயக்கரின் ஆளுமை சற்று பலவீனமாக காட்சியளித்ததால், இது போன்ற நூதனமான, அரிய பொருட்களை பொதுவெளியில் காண்பிப்பதன் மூலம் தான் வலிமையான அரசனாக இருப்பதை மன்னர்கள் உறுதிப்படுத்தினார்கள் என்கிறது நூல்.
வெளிநாட்டுத் தூதர்கள் கொண்டுவரும் பொருட்கள் மட்டுமல்ல, வெளிநாட்டவர் வருவதுகூட மிக முக்கியமான அம்சமாக அந்த காலகட்டத்தில் கருதப்பட்டது என்கிறது இந்த நூல்.
உதாரணமாக, 1685ல் மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் பதவியேற்று சில ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில், மன்னரை வாழ்த்த டச்சுக் கம்பனியின் பிரதிநிதியான மூக்கப்ப நாயக்கர் என்பவர் திருச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால், மன்னரின் தளவாயான திருவேங்கடநாத அய்யா, மூக்கப்ப நாயக்கரைப் பார்த்து 'ஏன் வெள்ளையர் வாழ்த்த வரவில்லை?' எனக் கேள்வியெழுப்பினார். தங்களுடைய அவைக்கு வெளிநாட்டவர், குறிப்பாக ஐரோப்பியர் வருவதை மன்னர் கௌரவமாகக் கருதுவதை டச்சுக் கம்பனி புரிந்துகொண்டது. 1689ல் சென்ற தூதுக்குழுவில் வெள்ளையர்கள் இருப்பதை உறுதிசெய்தது.
மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் - டச்சுக்கார்கள் உறவில் இது போன்ற ஒரு கோணம் இருந்தாலும், மதுரை நாட்டை மீட்டெடுத்ததில் அவரது பங்கு முக்கியமானதாக இருந்தது என்கிறது ஜே.எச். நெல்சனின் The Madura Country - A Manual நூல். மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் அரசராகும்போது மதுரை நாட்டின் பல பகுதிகள் ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருந்தன. அவற்றின் பெரும் பகுதியை மீட்டு, அரசை நிலைப்படுத்தினார் அவர். இளம் மன்னராக இருந்தாலும் அமைச்சர்களின் ஆலோசனையை மட்டும் கேட்காமல், சுயமாகவும் முடிவெடுக்கும் திறனைக் கொண்டிருந்தார் என்கிறார் ஜே.எச். நெல்சன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு