Think Music India
தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக பரிமாணங்களைக் கொண்டவர் கமல்ஹாசன். அவருடைய பிறந்த நாள் இன்று. இந்தத் தருணத்தில் அவர் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல்களில் குறிப்பிடத்தக்க 10 பாடல்களின் பட்டியல் இது.
1. ஞாயிறு ஒளி மழையில் (1975)கமல்ஹாசன் பாடிய முதல் பாடல். 1975ஆம் ஆண்டில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்துக் குவித்தார் கமல்ஹாசன். அதில் ஒன்றுதான் அந்தரங்கம் திரைப்படம்.
முக்தா ஸ்ரீநிவாஸன் இயக்கிய இந்தப் படத்திற்கு ஜி. தேவராஜன் இசையமைத்திருந்தார். அந்தரங்கம் படத்தில் நான்கு பாடல்களில் ஒன்று தான் 'ஞாயிறு ஒளி மழையில்' என்ற இந்தப் பாடல். சிறுவயதிலேயே நடிக்க வந்த கமல்ஹாசனுக்கு, சிறு வயதிலேயே பாடல்களுக்கு திரையில் தோன்றும் வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால், எல்லாமே பின்னணி பாடகரால் பாடப்பட்ட பாடல்கள்.
அவர் நடிக்க வந்து 16வது வருடத்தில் சொந்தக் குரலில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பாடலை எழுதியவர் நேதாஜி. "ஞாயிறு ஒளி மழையில், திங்கள் குளிக்க வந்தாள், நான் அவள் பூ உடலில், புது அழகினைப் படைக்க வந்தேன்" என கவித்துவமாக எழுதப்பட்ட பாடலை மிகச் சிறப்பாகவே பாடியிருப்பார் கமல்ஹாசன்.
அந்த காலகட்டத்தில் பெரிதாக பாராட்டப்படாத அந்தப் பாடல், பிற்காலத்தில் கவனத்திற்கு உரிய பாடலாக உருவெடுத்தது.
2. நினைவோ ஒரு பறவை (1978)1978 - இந்த ஆண்டு கமல்ஹாசனின் திரைவாழ்வில் ஒரு வெற்றிகரமான ஆண்டு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கௌரவத் தோற்றம் என 20 படங்கள் அவர் நடித்து வெளியாயின.
தீபாவளியை ஒட்டி மட்டும் நான்கு படங்கள் வெளியாகின. அதில் ஒரு படம்தான் பாரதிராஜா இயக்கிய சிவப்பு ரோஜாக்கள். இந்தப் படத்திற்கு இசை இளையராஜா. த்ரில்லர் திரைப்படம் என்பதாலோ என்னவோ, இந்தப் படத்தில் இரண்டே பாடல்கள்தான்.
ஒன்று, மலேசியா வாசுதேவனும் எஸ். ஜானகியும் பாடிய "மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது" பாடல். மற்றொன்று, கமல்ஹாசனும் எஸ். ஜானகியும் பாடிய "நினைவோ ஒரு பறவை" பாடல்.
உச்ச ஸ்தாயியில் கமல்ஹாசனால் எளிதாகப் பாட முடிவதைப் பார்த்த இளையராஜா இந்தப் பாடலைப் பாடும் வாய்ப்பை தனக்கு அளித்ததாக கமல் பேட்டிகளில் குறிப்பிடுகிறார். கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் நடித்திருந்த இந்தப் பாடல் இப்போதுவரை, கேட்பவர்களை உருக வைக்கிறது.
3. பன்னீர் புஷ்பங்களே (1978)சி. ருத்ரய்யா இயக்கிய அவள் அப்படித்தான் படத்தில் இடம்பெற்ற பாடல் 'பன்னீர் புஷ்பங்களே' . இந்தப் படத்திற்கும் இளையராஜாதான் இசை. பாடலை கங்கை அமரன் எழுதியிருந்தார். இந்தப் படமும் 1978ஆம் ஆண்டின் தீபாவளியை ஒட்டியே வெளியானது.
சிவப்பு ரோஜாக்கள் படத்தின் பாடல்கள் தயாராகிக் கொண்டிருந்தபோதே, இந்தப் படத்தின் பாடல்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தார் இளையராஜா. நினைவோ ஒரு பறவை பாடலை கமல்ஹாசனின் குரலில் பதிவுசெய்த பிறகு, அதில் மிகவும் மகிழ்ச்சியடைந்த இளையராஜா, இந்தப் பாடலையும் தன்னையே பாடச் சொன்னதாகச் சொல்கிறார் கமல்ஹாசன்.
ரேவதி ராகத்தில் அமைந்த இந்தப் பாடல், தொழில்முறை பாடகராக இல்லாத ஒருவரால் பாடுவதற்கு கடினமான பாடல்தான். ஆனால், மிகச் சிறப்பாகவே பாடியிருந்தார் கமல்ஹாசன்.
X/@ikamalhaasan 4. விக்ரம்.. விக்ரம் (1986)
ராஜசேகர் இயக்கத்தில் கமல், லிஸ்ஸி, டிம்பிள் கபாடியா நடித்து வெளியான விக்ரம் திரைப்படத்தின் டைட்டில் பாடல் இது. சுஜாதாவின் கதையில் 1980களின் மத்தியில் வெளியான விக்ரம் திரைப்படம், அந்தக் காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்தால் ஒரு அதிநவீன கதையம்சமும் படமாக்கமும் கொண்ட திரைப்படம்.
டைட்டில் பாடலைக் கேட்கும்போதே, இந்த உணர்வு படம் பார்ப்பவர்களுக்கு ஏற்பட்டுவிடும். 'விக்ரம்.. விக்ரம்' என்ற வார்த்தைகள் முதலில் கமல்ஹாசனின் குரலிலும் பிறகு கணிணியில் மாற்றப்பட்ட குரலிலும் ஒலிக்கும்போது, முதல் முறையாகக் கேட்கும் ரசிகர்களுக்கு ஆச்சர்யம், திகைப்பு, மகிழ்ச்சி என எல்லாம் கலந்த உணர்வு ஏற்பட்டது.
வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை, கமல்ஹாசனின் குரலில் இப்போது கேட்டாலும் ஆச்சர்யமும் ஆனந்தமும் ஏற்படும் என்பதுதான் இதன் சிறப்பு.
5. சுந்தரி நீயும் சுந்தரன் நானும் (1990)சிங்கிதம் ஸ்ரீநிவாஸராவ் இயக்கத்தில் கமல் நான்கு வேடங்களில் நடித்து வெளியான மைக்கல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பாடல் இது.
அதில் காமேஸ்வரன் வேடத்தில் வரும் கமலும் ஊர்வசியும் பாடுவதுபோல வரும் பாடல் இது. பஞ்சு அருணாச்சலம் எழுதிய இந்தப் பாடலின் வரிகள் தமிழும் மலையாளமும் கலந்ததுபோல எழுதப்பட்டிருக்கும்.
பாடலின் பெரும் பகுதி, 'ஸ்லோமோஷனில்' இருப்பதைப் போல எடுக்கப்பட்டிருக்கும். இதிலும் சில இடங்களில், தொழில்நுட்ப ரீதியாக அதைச் செய்யாமல், பாடலில் நடிப்பவர்கள் ஸ்லோமோஷன் காட்சியைப் போல நடித்திருப்பார்கள்.
இந்தப் பாடலின் ஒளிப்பதிவு, படமாக்கப்பட்ட முறை, பாடலின் இசை, கமல்ஹாசனின் குரல் எல்லாம் சேர்ந்து, இதற்கு ஒரு செவ்வியல் தன்மையைக் கொடுத்தது.
P. A. Art Productions 6. கண்மணி அன்போடு காதலன் (1991)
சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடித்து வெளியான குணா திரைப்படத்தில் நான்கு பாடல்கள். நான்குமே வெவ்வேறு காரணங்களுக்காக வெகுவாகக் கவனிக்கப்பட்ட பாடல்கள்.
அதில் "கண்மணி அன்போடு காதலன்" பாடலைக் கமல் பாடியிருந்தார். அந்தப் பாடலின் முக்கியத்துவம் அதுமட்டுமல்ல. இந்தப் பாடல், வசனங்களும் பாடல் வரிகளும் இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு பாடலாக இருந்தது.
பாடலின் நடுநடுவே வசனங்கள் வந்தபோதும்கூட, பாடலின் இனிமை ஒரு துளிகூட குறையவில்லை. பாடல் இறுதியில் 'லாலலா.. லாலா.. லாலலா' என குரல் மெல்ல மங்கும்போது கிறங்காதவர்கள் கிடையாது. கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் புதுமை மாறாத பாடல் இது. இசையமைத்தவர் இளையராஜா.
7. இஞ்சி இடுப்பழகி (1992)கமல்ஹாசன் பாடிய பாடல்கள் என்றவுடன் உடனடியாகத் தோன்றும் பாடல்களில் இதுவும் ஒன்று. பரதன் இயக்கத்தில் கமல், சிவாஜி, ரேவதி, கௌதமி நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் இடம்பெற்ற பாடல் இது.
காதலியான கௌதமியை விட்டுவிட்டு, ரேவதியுடன் திருமணம் முடிந்த பிறகு முதலிரவில் பாடுவதைப் போல அமைந்த பாடல் இது. முதலில் அமைதியான துவக்கம். 'மறக்க மனம் கூடுதில்லையே' என கமல் பாடியதும், 'மறந்துடுவேன்னீகளே' என ரேவதி கேட்பார்.
ஒரு சின்ன இடைவெளி. பிறகு அட்டகாசமான இசையுடன் பாடல் மீண்டும் துவங்கும்.
Youtube/Ilayaraaja official 8. முத்தே முத்தம்மா (1997)
அமிதாப்பச்சன் தயாரிக்க, ஜே.டி. ஜெர்ரியின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் உல்லாசம். இதில் முக்கியப் பாத்திரங்களில் அஜீத்தும் விக்ரமும் நடித்திருந்தார்கள்.
படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். அதில் ஒரு பாடலை பாடித்தந்தார் கமல்ஹாசன்.
அஜீத்தும் மகேஷ்வரியும் நடித்திருந்த 'முத்தே முத்தம்மா' என்ற அந்தப் பாடலைப் பார்க்கும்போது, அஜீத்திற்கு கமலின் குரல் பொருத்தமாகத்தான் இருந்தது. துடிப்பும் துள்ளலும் மிகுந்த இசைக்கு ஏற்ப சிறப்பாகப் பாடியிருந்தார் கமல்.
9. உன்னைக் காணாது நான் (2013)பாடுவதற்கே கடினமான சில பாடல்களை கமல் பாடியிருக்கிறார். அப்படி ஒரு பாடல்தான் இது. அவரது இயக்கத்தில் ஷங்கர் - என்ஷான் - லாய் இசையமைத்து வெளிவந்த படம் விஸ்வரூபம்.
இதில் 'உனைக் காணாது நான்' என்ற பாடலை அவர் எழுதி, ஷங்கர் மகாதேவனுடன் இணைந்து பாடியிருந்தார். இந்தப் பாடலில் கமல் பாடியிருக்கும் பகுதிகளைக் கேட்கும்போது, அதனை வேறு யாராவது பாடியிருக்க முடியுமா என்ற கேள்வியே எழும்.
அந்த அளவுக்கு சிக்கலான இசையுடன் கூடிய தருணங்களை தனது குரலில் கொண்டுவந்திருப்பார் கமல். இந்தியிலும் தெலுங்கிலும்கூட இதே பாடலை ஷங்கருடன் இணைந்து கமலே பாடியிருந்தார்.
10. யாரோ இவன் யாரோ (2024)தனது படங்களில் மட்டுமல்லாமல் பிற கதாநாயகர்களுக்காவும் அவ்வப்போது பாடும் கமல்ஹாசன், அப்படி லேட்டஸ்டாக பாடிய பாடல்தான் "யாரோ இவன் யாரோ". பிரேம்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கார்த்தி நடித்த மெய்யழகன் படத்திற்காக இந்தப் பாடலைப் பாடியிருந்தார் கமல்ஹாசன்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் உமாதேவி இந்தப் பாடலை எழுதியிருந்தார். "ஈரம் வீசும் பெரும் தூய அன்பைத் தொலைச்சேன்" என கமலின் குரல் உச்சத்தை எட்டும்போது, அரவிந்த்சாமி வேகவேகமாக வெளியேறுவார்.
இந்தக் காட்சியோடு, பாடலைக் கேட்பவர்கள் உருகாமல் இருக்க முடியாது. இந்தப் பாடலைப் பாடியபோது கமலுக்கு வயது 70.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு