20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை.. போட்டிகளுக்காக 5 மைதானங்கள் தேர்வு..
TV9 Tamil News November 10, 2025 06:48 AM

நவம்பர் 9, 2025: அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ள ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026க்கான இடங்கள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளன. நம்பகமான வட்டாரங்களின்படி, மெகா போட்டியில் முக்கிய போட்டிகளுக்கான இடங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக இறுதி போட்டி மற்றும் பிற போட்டிகள் நடைபெறவுள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதி போட்டியை பொருத்தவரையில், கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் எனவும், போட்டியின் தொடக்க ஆட்டமும் அதே மைதானத்தில் நடைபெற வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை போட்டி

அதே சமயத்தில், மும்பையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வான்கடே மைதானத்தில் அரையிறுதி போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறினால், அந்த போட்டி கொழும்புவில் நடைபெற வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: வீட்டில் துக்கம்.. சோகம் மறைத்து சதம் அடித்த கிரிக்கெட் வீரர்.. நெகிழ்ச்சி சம்பவம்!

இது ஒரு பக்கம் இருக்க, அகமதாபாத் மற்றும் மும்பையுடன் டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகியவை இந்தியாவில் போட்டிகளை நடத்துவதற்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு மைதானத்திலும் குறைந்தது ஆறு போட்டிகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் ஹைதராபாத், அதாவது ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம் அல்லது விசாகப்பட்டினம் போன்ற தெலுங்கு மாநிலங்களில் உள்ள மைதானங்கள் பட்டியலில் இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் அரசியல் பதட்டம் – இலங்கையில் நடக்கும் போட்டிகள்:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் பதட்டங்கள் காரணமாக, பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுவதற்கு பதிலாக கொழும்புவில் நடைபெறும்.

20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை:

இந்த முறை உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் — இது இதுவரை இல்லாத எண்ணிக்கை ஆகும். 20 அணிகள் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்படும்.

ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறும். அதைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெறும். இதற்கான முழுமையான அதிகாரப்பூர்வ அட்டவணையை ICC விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.