Kitchen Tips: சமைத்த உணவுகளை மீண்டும் சூடாக்கி சாப்பிடலாமா? இது ஆரோக்கியத்தை சீர்குலைக்குமா?
TV9 Tamil News November 11, 2025 10:48 PM

இன்றைய பரபரப்பான வாழ்க்கை மற்றும் சூழலுக்கு மத்தியில் உழைக்க வேண்டும் என்று கடினமாக முடிவுகளை எடுக்கிறோம். இந்த வேகமான வாழ்க்கையில் அவசர அவசரமாக உணவுகளை சமைத்து சாப்பிட்டுவிட்டு பணிக்கு செல்ல தொடங்குவோம். வேலைக்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் வெகு நேரத்திற்கு முன்பு சமைத்த உணவு குளிர்ச்சியடைந்துவிடும். ​​இதை பலரும் சூடாக்காமல் அப்படியே சாப்பிடுகிறார்கள். நீங்கள் சமைத்த உணவு (Cooking) வீணாகி விடக்கூடாது என்று குளிர்சாதன பெட்டியில் (Refrigerator) இருந்து வெளியே எடுத்த பிறகு உணவை சூடாக்கி சாப்பிடுக்கிறார்கள். சில உணவுகளை சூடாக்கி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், சில உணவுகள் மற்றும் பானங்களை சூடாக்கி சாப்பிடுவது உடலில் வேறுபட்ட விளைவை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அந்தவகையில், உணவுகளை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது நல்லதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வோம்.

எந்த உணவுகளை மீண்டும் எப்படி சூடாக்கி சாப்பிடலாம்..?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுபடி, நீங்கள் சமைத்த உணவை நீண்ட நேரத்திற்கு பிறகு சாப்பிடுகிறீர்கள் என்றால், அதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது சிறந்த முறை. இருப்பினும், இத்தகைய உணவு சரியாக மீண்டும் சூடுபடுத்தப்பட்டால் மட்டுமே பாதுகாப்பானது. உணவை மீண்டும் சூடுபடுத்தும் பழக்கமும் உங்களிடம் இருந்தால், சரியான முறையில் சூடுபடுத்தினால் மட்டுமே உணவைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

உணவை ஒன்றுக்கு மேற்பட்ட முறை மீண்டும் சூடுபடுத்தினால், அது சரியாக ஜீரணிக்க உதவாது. உதாரணத்திற்கு சிக்கன் மற்றும் முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்துவது, புரதத்தின் தன்மையை குறைக்கும். இதை புரத டிநேச்சுரேஷன் எனப்படும் செயல்முறையாகும். இந்த செயல்முறை, அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவையும் குறைக்கிறது. சமைத்த சில மணி நேரங்களுக்கு பிறகு, சாதம் மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளில் பாக்டீரியாக்கள் வளரத் தொடங்குகின்றன. இது போன்ற உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினாலும் இந்த பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதில்லை. இதனால் ஃபுட் பாய்சன் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

உருளைக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருளையும் மீண்டும் சூடுபடுத்துவது அக்ரிலாமைடை உருவாக்குகிறது. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது. பக்கோடாக்கள் அல்லது பூரிகள் போன்ற எண்ணெயில் வறுத்த உணவுப் பொருட்கள், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தப்பட்டால், அவற்றின் அமைப்பு, சுவை மற்றும் மிருதுவான தன்மையை இழக்கின்றன.

எந்தவொரு உணவையும் குறைந்தபட்சம் 70 டிகிரி செல்சியஸுக்கு மீண்டும் சூடாக்க WHO பரிந்துரைக்கிறது. இது செழித்து வளரக்கூடிய எந்த பாக்டீரியாக்களையும் கொல்ல உதவுகிறது. இருப்பினும், இந்த செயல்முறையை ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும். ஏனெனில் மீண்டும் மீண்டும் மீண்டும் சூடாக்குவது உணவின் தரம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்யலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.