தமிழகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், புதிய குடியிருப்புகள் ஒதுக்கீட்டு ஆணைகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாநிலம் முழுவதும் ஆறு முக்கிய திருக்கோயில்களில் ரூ.10.65 கோடி செலவில் கட்டப்பட்ட அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 16 அர்ச்சகர்களும், 31 கோவில் பணியாளர்களும் வீடு பெறுகின்றனர்.

இந்திய குடியிருப்புகள் சென்னை தங்கசாலை ஏகாம்பரேசுவரர் கோவில், மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில், சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவில், கன்னியாகுமரி கிருஷ்ணசாமி கோவில், செங்கல்பட்டு திருநீர்மலை ரெங்கநாதப் பெருமாள் கோவில், தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கும் அடையாளமாக 10 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முதல்வர் காசோலை மற்றும் ஆணைகளை வழங்கினார். நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநில அரசு பொறுப்பேற்ற பின், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்காக மொத்தம் 632 குடியிருப்புகளை கட்டுவதற்கான பணிகள் ரூ.225 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது 95 குடியிருப்புகள் முடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

அரசு, அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்களின் நலனை முன்னிறுத்தி புத்தாடை வழங்குதல், ஊக்கத்தொகை, உயர்கல்விக்கான உதவித் தொகை, மருத்துவ பரிசோதனை, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
கோவில்களின் பராமரிப்பு, சொத்துப் பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் வசதிக்கான பணிகளுக்கு இணையாக, கோவில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இந்த குடியிருப்பு திட்டம் முக்கிய பங்காற்றுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!