@abikinger/Instagram
'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் அபினய், சென்னையில் இன்று காலமானார். கல்லீரல் நோயால் அவதிப்பட்டுவந்த அவர், திங்கட்கிழமையன்று அதிகாலை காலமானார்.
செல்வராகவன் திரைக்கதையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'துள்ளுவதோ இளமை'.
2002-ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம்தான் அவருக்கு முதல் படம். அந்தத் திரைப்படம் சில விமர்சனங்களைச் சந்தித்தாலும், மிகவும் கவனிக்கப்பட்ட படமாக அமைந்தது. தனுஷ் உட்பட அதில் நடித்திருந்த பலரும் வெகுவாக கவனிக்கப்பட்டார்கள்.
நாயகி ஷெரினுக்கு அதுதான் முதல் தமிழ் படம். தனுஷைப்போல, அபினய்-க்கும் அதுதான் முதல் படம். விஷ்ணு என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் அவர். துள்ளுவதோ இளமை படத்திற்குக் கிடைத்த வெற்றி, செல்வராகவன், தனுஷ், ஷெரின், அபினய் ஆகியோருக்கு தமிழ்த் திரையுலகின் வாசலைத் திறந்துவிட்டது.
பல மலையாளத் திரைப்படங்களில் நடித்திருந்த டி.பி. ராதாமணியின் மகன்தான் அபினய். 'துள்ளுவதோ இளமை' இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்றாலும் இவர் நடித்து அடுத்தடுத்து வெளியான 'ஜங்க்ஷன்', 'சிங்காரச் சென்னை', 'பொன்மேகலை' ஆகிய திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை.
இதற்குப் பிறகு 'சொல்லச் சொல்ல இனிக்கும்', 'பாலைவனச் சோலை' போன்ற படங்களில் சிறிய சிறிய பாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார் அபினய். 'கையெட்டும் தூரத்', 'சித்ரகூடம்', 'வைரஸ்' போன்ற மலையாளத் திரைப்படங்களிலும் நடித்தார்.
ஆனால், தொடர்ந்து குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இதற்கிடையில் துபையில் சில ஆண்டுகள் பணியாற்றினார். இதற்குப் பின் சில விளம்பரப் படங்களில் நடித்தார் அபினய். குறிப்பாக, ஒரு தேநீர் விளம்பரத்தில் அவருக்கு நல்ல கவனம் கிடைத்தது.
இதற்கிடையில் பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞராக, பையா, துப்பாக்கி, காக்கா முட்டை போன்ற படங்களிலும் பணியாற்றினார். 'துப்பாக்கி'யில் வில்லனாக நடித்த 'வித்யூத் ஜம்வாலுக்கு குரல் கொடுத்திருந்தார்.
அதில் "I dont know who you are, where you are, Once I get to you, I will kill you" வசனமும் அதற்கு விஜய் சொல்லும் பதிலான, 'I'm waiting' என்ற வசனமும் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், அவரது தாயாருக்கு ஏற்பட்ட புற்றுநோய், அதற்கான சிகிச்சைகள் ஆகியவை தன்னை கடுமையாக பாதித்ததாக பேட்டிகளில் தெரிவித்தார் அபினய். கோவிட் பரவலுக்கு சில நாட்களுக்கு முன்பாக அவரது தாயார் மறைந்தார்.
இந்த நிலையில், அவரது கல்லீரல் செயலிழந்தது. இதனால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறிய நிலையில், கல்லீரலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் கேபிஒய் பாலா உள்ளிட்டோர் அவருக்கு நிதி உதவி செய்தனர். ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துவந்த நிலையில், திங்கட்கிழமையன்று அவர் உயிரிழந்தார். இதற்குப் பிறகு அவரது உறவினர்கள் யாரும் வரவில்லையென அவரது வீட்டிற்கு வந்த திரையுலகினர் கூறினர்.
ஆனால், விரைவிலேயே அவரது தந்தை வழி உறவினர் ஒருவரும் தாய் வழி உறவினர் ஒருவரும் வந்திருந்து அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
அபினய் சமீபத்தில் 'கேம் ஆஃப் லோன்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியான பிறகு தனக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார் அவர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு