TATA நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைக்க அடுத்த மூவ் - டிரஸ்டில் மகனை உறுப்பினராக்கிய நோயல் டாடா!
Vikatan November 13, 2025 08:48 AM

நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் `டாடா’ குழுமம் 180 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்டதாக இருக்கிறது. டாடா நிறுவனங்களை டாடா குடும்ப டிரஸ்ட்கள் கட்டுப்படுத்தி வருகின்றன. இந்த குடும்ப டிரஸ்ட்கள் டாடா குழும நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கின்றன. ரத்தன் டாடா மரணத்திற்கு பிறகு டாடா டிரஸ்ட் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகத்தில் அறங்காவலர்கள் தலையிட ஆரம்பித்தனர். அதுவும் டிரஸ்டில் அறங்காவலராக இருந்த மெஹ்லி மிஸ்திரி, டாடா டிரஸ்டில் மேலும் 3 அறங்காவலர்களை தனது பக்கம் இழுத்துக்கொண்டு, டாடா நிறுவனங்களில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடையாக இருந்தார்.

அதோடு டாடா டிரஸ்ட்டை தனது கட்டுப்பாட்டில் எடுத்துவிடுவாரோ என்ற அச்சமும் ஏற்பட்டது. அவருக்கு 4 அறங்காவலர்கள் ஆதரவு கொடுத்தனர்.

நெவ்லி டாடா

இதையடுத்து நோயல் டாடா இப்பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தார். இதைத் தொடர்ந்து மெஹ்லி மிஸ்திரியைத் டாடா டிரஸ்டில் மீண்டும் அறங்காவலராக நீட்டிக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

மெஹ்லி மிஸ்திரியும் டாடா டிரஸ்டில் இருந்து விலகுவதாக பின்னர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்தே டாடா டிரஸ்ட் நோயல் டாடாவின் கட்டுப்பாட்டில் வந்தது. டாடா நிறுவனங்கள் மற்றும் டாடா டிரஸ்டுகளில் தனது செல்வாக்கை தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ள நோயல் டாடா தனது 33 வயதாகும் மகன் நெவ்லி டாடாவை டாடாவின் பிரதான டிரஸ்ட்டான சர் தொராப்ஜி டாடா டிரஸ்டில் உறுப்பினராக்கியிருக்கிறார். தற்போது டாடாவின் ட்ரெண்ட் ஹைப்பர் மார்க்கெட் பிசினஸ் பிரிவில் தலைவராக இருக்கும் நெவ்லி டாடா, இந்த டிரஸ்டில் இணைந்ததன் மூலம் டாடா குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இப்போது இந்த டிரஸ்டில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

ஏற்கனவே ரத்தன் டாடாவின் சகோதரர் ஜிம்மி டாடா கடந்த 30 ஆண்டுகளாக இந்த டிரஸ்டில் அறங்காவலராக இருந்து வருகிறார்.

நீண்ட கால திட்டத்தை கருத்தில் கொண்டு இப்போதே நோயல் டாடா தனது மகனை டிரஸ்ட்டில் அறங்காவலராக கொண்டுவந்திருக்கிறார் வந்திருக்கிறார். ரத்தன் டாடா உயிரோடு இருந்தபோது டாடா டிரஸ்ட்டுகளின் தலைவராக நோயல் டாடாவை கொண்டு வரவில்லை. இதனால் அவர் இறந்த பிறகுதான் சிக்கல்களை சந்திக்கநேரிட்டது நேரிட்டது. ரத்தன் டாடா சந்தித்த அதே சவால்களை நோயல் டாடாவும் சந்தித்து, இப்போது இப்போது டாடா டிரஸ்ட் தலைவராகி இருக்கிறார்.

ரத்தன் டாடா டாடா நிறுவனங்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது இது போன்ற சவால்களை சந்தித்தார். டாடா நிறுவனங்களில் எம்.டி.யாக இருந்த சிலர் சொந்த நிறுவனத்தை போன்று நடத்தி வந்தனர். அவர்கள் தொழிலாளர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இது போன்று செய்தனர். அதன் பிறகுதான் போராடித்தான் ரத்தன் டாடா டாடா நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

ரத்தன் டாடா - நோயல் டாடா

இதே போன்று நோயல் டாடாவும் டாடா குழும தலைவர் பதவிக்கு வர மூன்று முறை முயன்றிருக்கிறார். முதலில் சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பு ஏற்பதற்கு முன்பு அந்த இடத்தில் நோயல் டாடா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகுதான் சைரஸ் மிஸ்திரி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டபோதும், இதே போன்று நோயல் டாடா அப்பதவிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு முறையும் அப்பதவி நோயல் டாடாவிற்கு கிடைக்கவில்லை.. ஆனாலும் நோயல் டாடா தனக்கு கொடுத்த வேலையை செய்து கொண்டிருந்தார். படிப்படியாக அவரை டாடா குழும நிறுவனங்களில் உயர்ந்த இடத்திற்கு ரத்தன் டாடா கொண்டு வந்து கொண்டிருந்தார். இறுதியாக இப்போதுதான் டாடா குழுமம் நோயல் டாடா கைக்கு வந்திருக்கிறது எனலாம்.

Tata: நீட்டிக்கப்படாத மெஹ்லி மிஸ்திரியின் பதவிக்காலம்; டாடா அறக்கட்டளையில் புது பிரச்னை
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.