சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை முன் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் தங்க கவசம் மற்றும் திருநடையில் தங்கம் பதிக்கப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக சிறப்பு விசாரணை குழு கண்டறிந்துள்ளது. இது சம்பந்தமாக 2 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இரு வழக்குகளிலும் உபயதாரரான உன்னிகிருஷ்ணன் போற்றியின் பெயர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் முதலில் கைது செய்யப்பட்டிருந்தார்.
தொடர்ந்து சபரிமலை முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு கைதுசெய்யப்பட்டார். மூன்றாவதாக சபரிமலை முன்னாள் செயல் அதிகாரி சுதீஸ் கைதுசெய்யப்பட்டார். நான்காவதாக திருவாபரணம் கமிஷனர் கே.எஸ்.பைஜூ கைதுசெய்யப்பட்டார்.
அந்த வழக்கின் தொடர்ச்சியாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் ஆணையரும், தேவசம்போர்டு முன்னாள் தலைவருமான என்.வாசு சிறப்பு புலனாய்வு குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இத்துடன் கைது எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
வாசு இரண்டுமுறை தேவசம்போர்டு கமிஷனராகவும், 2 முறை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவராகவும் இருந்துள்ளார். அவர் பதவியில் இருந்த காலத்தில் கருவறை திருநடையில் தங்கமுலாம் பூசும்பணி உபயதாரரான உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருநடையில் தங்கம் பதிக்கப்பட்ட பின்னர் மீதமுள்ள தங்கம் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் இருப்பது தெரிந்ததும் அன்றைய வாசு அதுபற்றி எதுவும் கூறாமல் இருந்துள்ளார்.
சபரிமலையில் தங்கம் மோசடி செய்யப்பட்ட 2019-ம் ஆண்டு பதவியில் இருந்தார் வாசு. ஏற்கனவே தங்கம் பதிக்கப்பட்ட கருவறை வாசல் கட்டளைகளை செம்பு என பதிவுசெய்ததாகவும் வாசு மீது குற்றச்சாட்டு உள்ளது.
அதுமட்டும் அல்லாது வாசல் கட்டளையில் தங்கம் பதிக்கப்பட்ட பின்னர் அதில் மீதமுள்ள தங்கம் தன்னிடம் இருப்பதாகவும், அதை ஒரு பெண்ணின் திருமணத்துக்காக பயன்படுத்திக்கொள்ளலாமா எனவும் உன்னிகிருஷ்ணன் போற்றி மெயில் அனுப்பியுள்ளார்.
அந்த மெயிலின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் வாசு முறையான பதில் கூறவில்லை எனத் தெரிகிறது. உபயதாரரிடம் மீதம் தங்கம் இருப்பது தெரிந்தும் அதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக முன்னாள் தேவசம்போர்டு கமிஷனர் வாசு மீது புகார் எழுந்ததை தொடர்ந்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வரும் 24-ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Sabarimala: உண்ணிகிருஷ்ணன் போற்றி வாக்குமூலம்; பெல்லாரி நகைக்கடையில் மீட்கப்பட்ட சபரிமலை தங்கம்!