Bumple App இளம்பெண்களை வசியப்படுத்திய போலீஸ் மகன்! நகை, பணத்தை சுருட்டி மோசடி
Top Tamil News November 13, 2025 08:48 AM

கோவையில் Bumple App மூலம் பழகி, இளம் பெண்ணிடம் 3 பவுண் தங்க நகைகள் மற்றும் ரூ.90 ஆயிரம் பணத்தை பறித்து  போலீஸ் டி.எஸ்.பியின் மகன் தனூஷ்  என்பவரை பந்தய சாலை போலீசார் கைது செய்தனர்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், கடந்த ஆறு மாதங்களாக கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள  பெண்கள் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, Bumple App மற்றும் Snapchat மூலம் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த தனூஷ் (28) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் டி.எஸ்.பி தங்கபாண்டியன் என்பவரது மகன். ஆன்லைன் செயலி இளம் பெண்ணிடம் பேசிய தனூஷ், தனது பெயரை தருண் எனக்கூறி பழகி வந்தார். இந்நிலையில் நேரில் பார்த்து பேசலாம் எனக் கூறி கடந்த நவ.2 -ம் தேதி ஞாயிற்றுகிழமை 
மாலை 6 மணிக்கு  தனது சொகுசு காரை எடுத்துக்கொண்டு பாப்பநாயக்கன் பாளையம் மகளிர் விடுதிக்கு சென்று இளம் பெண்ணை விடுதியிலிருந்து அழைத்து சென்றுள்ளார். பின்னர் லாங் டிரைவ் மற்றும்  காபி குடிக்கலாம் எனக் கூறி கோவை - கேரளா எல்லையான வாளையாறு தனியார் கல்லூரி அருகே அழைத்துச் சென்றார். காரை நிறுத்திய தனூஷ், அங்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு தனூஷின் நண்பர் ஒருவர் வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி அவர் அணிந்து இருந்த செயின், மோதிரம், ஆகிய 3 பவுண் நகைகளை பறித்துள்ளனர். பின்னர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து இளம் பெண் தனது நண்பர் மூலம் upi மூலம் பணம் பெற்று, ரூ.90 ஆயிரம்  பணத்தையும் பறித்துள்ளனர்.

பின்னர் மீண்டும் இளம்பெண்ணை கோவை அழைத்து வந்து ,கோவை திருச்சி சாலையில் இறக்கி விட்டுள்ளனர். இரவு  நேரத்தில் ஹாஸ்டலில் அனுமதிக்க மாட்டார்கள் என அந்த இளம் பெண் கூறியதால் தனூஷ், மீண்டும் இளம்பெண்ணின் மொபைலை வாங்கி அதன் மூலம் நட்சத்திர ஹோட்டலில் அறையை பதிவு செய்து கொடுத்து அனுப்பியுள்ளார்.
நட்சத்திர விடுதியில் அறைக்கு சென்ற இளம் பெண் இது குறித்து தனது வீட்டில் தெரிவித்த நிலையில், 3 ம் தேதி  காலை இளம்பெண்ணின் சகோதரி மற்றும்  உறவினர்கள் கோவை  பந்தய சாலை காவல் நிலையத்தில் தனூஷ் மீது புகார் அளித்தனர். தனூஷ் குறித்து போலீசார் விசாரித்த போது காவல் துறை அதிகாரியின் மகன் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து 
கோவை பந்தய சாலை போலீசார் இளம் பெண் கொடுத்த  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தனூஷை நேற்று கைது செய்தனர். மேலும் இவர் தருண் என கூறி டேட்டிங் செயலியில் பழகி வந்ததும்  தெரியவந்தது.  கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட அவர் , ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கோவை கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடத்த அதே நாளில் இந்த சம்பவமும் நடத்த நிலையில், ஒரு வார காலத்திற்கு பின்பு தருணை கோவை பந்தயசாலை போலீசார் கைது செய்து சட்டநடவடிக்கை எடுத்து இருப்பது குறிப்பிடதக்கது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.