2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் அரசியல் சூழல் வேகமாக மாறி வருகிறது.இந்நிலையில், தளபதி விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) உடன் கூட்டணி அமைக்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தரப்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நம்பகமான அரசியல் வட்டாரங்களின் தகவலின்படி,காங்கிரஸ் கட்சியின் ஒரு முக்கிய நிர்வாகி சமீபத்தில் தவெக தலைவர் விஜய் மற்றும் சில நிர்வாகிகளுடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார்.
அந்த சந்திப்பில், இரு கட்சிகளும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் இணைந்து பணியாற்றும் சாத்தியம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கமைய, நவம்பர் மாத கடைசி வாரத்தில் தவெக நிர்வாகிகள் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தனது கட்சி தொடங்கிய நாளிலிருந்தே கூட்டணிக்கான கதவுகளை மூடவில்லை.குறிப்பாக, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதில் அவர் தனிப்பட்ட விருப்பம் கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.
கரூர் சம்பவத்தின் போது ராகுல் காந்தி நேரடியாக விஜய்யுடன் தொலைபேசியில் பேசிச் ஆறுதல் கூறியதும்,இருவருக்கும் இடையே ஒரு அரசியல் நெருக்கம் உருவானது என்று வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
2011-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ்,2021 தேர்தலில் வெறும் 25 தொகுதிகளில்தான் போட்டியிட்டது.
இதனால், 2026 தேர்தலில் அதிக தொகுதிகளைப் பெற வேண்டும் என்ற அழுத்தம் காங்கிரஸ் தலைமையினரிடையே அதிகரித்துள்ளது. திமுக தரப்பில் அதற்கான இட ஒதுக்கீடு குறைவாக இருந்தால்,தவெக உடன் இணையும் வாய்ப்பு இருக்கலாம் என்று சில காங்கிரஸ் தலைவர்கள் உள்மட்டத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தென் இந்திய பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்,தமிழகத்தில் கட்சியின் வலிமையை உயர்த்துவதற்காக புதிய கூட்டணிக் கணக்கை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.
இந்த முயற்சிகளை திமுக தலைமையும் கவனத்துடன் கண்காணித்து வருகிறது.முதல்வர் எம்.கே. ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இடையிலான நெருக்கமான உறவின் காரணமாக,காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என மதிப்பிடப்படுகிறது.
அதே நேரத்தில், திமுகவின் “மாற்று கூட்டணி” திட்டமும் தயாராகவுள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்த மக்கள் நீதி மய்யம், கருணாஸ், தமீமுன் அன்சாரி உள்ளிட்ட கட்சிகளை மீண்டும் சேர்த்துக்கொள்வதற்கான ஆலோசனைகள் நடைபெறுகின்றன.அதேபோல், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் – தவெக கூட்டணி தொடர்பான இறுதி முடிவு,பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. அதன்பின், காங்கிரஸ் தேசிய அளவில் தங்கள் கூட்டணி வலையமைப்பை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், பீகார் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் பெரிய புயல் வீசும் வாய்ப்பு இருப்பதாகஅரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்துள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு,திமுக – காங்கிரஸ் – தவெக இடையேயான கூட்டணி அரசியல் சூழல்தமிழகத்தின் அடுத்த ஆட்சிக் கட்டமைப்பை தீர்மானிக்கக் கூடிய முக்கியமான அம்சமாக மாறியுள்ளது.
நவம்பர் இறுதியில் நடைபெறவுள்ள ராகுல் காந்தி – விஜய் சந்திப்பு,தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்துக்கு துவக்கமாக அமையுமா என்பதைஅனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.