அமேசானில் ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு குழந்தைகளுக்கான பாடிவாஷ் வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்தார். அமேசான் நிறுவனத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என வாடிக்கையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயபேட்டை, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேந்தர்(33), இவர் கடந்த மாதம் 25ம் தேதி அமேசான் ஆப் மூலம் ஆன்லைனில் 53,100 ரூபாய் பணம் செலுத்தி, ஐபோன் ஆர்டர் செய்துள்ளார். அடுத்த நாள் டெலிவரி ஆகும் என தெரிவித்திருந்த நிலையில் ஒரு நாள் கழித்து தாமதமாக பார்சல் வீடு தேடி வந்துள்ளது.
பார்சலை பார்த்த உடன் இது ஐபோன் தானா என வாடிக்கையாளருக்கு சந்தேகம் எழ டெலிவரி எடுத்து வந்தவரிடம் கேட்டுள்ளார் அவரும் இது ஐபோன் பார்சல் மாதிரி தெரியவில்லை என கூறியதாக சுரேந்தர் கூறுகிறார். டெலிவரி கொண்டு வந்தவர் முன்னிலையில் பார்சலை பிரித்து பார்த்த போது அதில் ஐபோனிற்கு பதிலாக Sebamed wash இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் டெலிவரி கொண்டு வந்தவரிடம் கேட்டதற்கு அமேசான் கஸ்டமர் கேரில் பேசுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். சுரேந்தர் கஸ்டமர் கேரில் பேசிய போது பொருளை திருப்பி அனுப்புங்கள் பணம் திருப்பி தருவதாக கூறியவர்கள் பின்னர் பணத்தை திருப்பி தர மறுத்ததாக கூறுகிறார். இது குறித்து கடந்த 6ம் தேதி சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து சி.எஸ்.ஆர். மனு வாங்கியுள்ளார். அதே போல் 11ம் தேதி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்து நியாயம் கிடைக்க காத்திருக்கின்றார் வாடிக்கையாளர் சுரேந்தர்.
ஆசை ஆசையாய் ஆன்லைனில் ஐபோன் வாங்க எண்ணி தற்போது பணமும் கிடைக்காமல், ஐபோனும் கிடைக்காமல் கடந்த 15 நாட்களாக காவல் நிலைய படிகளை ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். அமேசான் தனக்கு மாற்றி அனுப்பிய பொருளை மாற்றித் தரவும் அல்லது ரீஃபண்ட் தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்.