`கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்' - ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி
Vikatan November 13, 2025 08:48 PM

ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ரஜினியின் 'அருணாச்சலம்' படத்தை இயக்கி பெரிய ஹிட் கொடுத்த சுந்தர் சி, இப்போது மீண்டும் ரஜினியை இயக்குவது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்திருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் கமல் - ரஜினி - சுந்தர் சி மூவரும் இணைந்து எடுத்தப் புகைப்படம் வெளியாகி டாக் ஆஃப் தி டவுனாக மாறி இருந்தது. கோலிவுட் வாட்டாரம் முழுவதும் இதுதான் பேச்சாக இருந்தது.

இந்நிலையில் சுந்தர் சி 'தலைவர் 173' படத்திலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து சுந்தர் சி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "தவிர்க்க முடியாத காரணங்களால் ரஜினியின் 'தலைவர் 173' படத்திலிருந்து விலகுகிறேன். கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். கமல் தயாரிப்பில் ரஜினி சாரை வைத்து இயக்குவது என்பது என் சினிமா வாழ்வின் மிகப்பெரிய கனவு.

ஆனால், சில நேரங்களில் நம் வாழ்வில் துரதிஷ்டவசமாக நாம் எதிர்பார்த்த எல்லாமும் நடந்துவிடுவதில்லை. கடந்த சில நாள்களாக இப்படம் குறித்து நாங்கள் மூவரும் பேசிக்கொண்டவை எல்லாம் என் வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவமாகும். அதில் பல பாடங்களை நான் கற்றுக் கொண்டேன். என் சினிமா வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு அவையெல்லாம் உறுதுணையாக இருக்கும்.

இருப்பினும், 'தலைவர் 173' படத்திலிருந்து விலகுவது என மிகவும் கடினமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை அளித்த அவர்களுக்கு எனது அன்பும் நன்றியும். அதோடு எனது மன்னிப்பையும் அனைவரிடமும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியிருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.