நெல் கொள்முதலில் டெல்டா விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? - பிபிசி களஆய்வு
BBC Tamil November 13, 2025 10:48 PM
BBC விவசாயி விஜி ரவி

''வட்டிக்கு கடன் வாங்கி மூன்றரை ஏக்கர் குத்தகை நிலத்தில் நெல் விதைத்தேன். நான்கு மாதங்களாக குழந்தையைப் பார்ப்பதைப் போல் இரவு பகலாகப் பாதுகாத்தோம். அறுவடை நேரத்தில் மழை வந்து மொத்தப் பயிர்களையும் அழித்துவிட்டது. ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவழித்தேன். அறுவடை செய்த நெல்லை விற்று இருந்தால் இரண்டரை லட்சம் கிடைத்திருக்கும். எல்லாம் போய்விட்டது.''

மழையில் மண்ணில் சாய்ந்து முளைத்த நெற்கதிர்களைக் கையில் வைத்துக் கொண்டு அழுதார் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பணந்துருத்தியைச் சேர்ந்த பெண் விவசாயி விஜி ரவி.

வயலிலேயே இவரது நெற்கதிர்கள் முளைத்ததைப் போலவே, டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதல் தாமதம் ஆனதால் அறுவடை செய்த நெற்கதிர்களிலும் நாற்று முளைத்துவிட்டதாக விவசாயிகள் பலரும் குமுறுகின்றனர்.

நெல் கொள்முதலில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்ட, முதல்வரும், அமைச்சர்களும் எல்லாவற்றையும் மறுத்துள்ளனர்.

BBC நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர் அரசியல் மோதலாக உருவெடுத்த நெல் கொள்முதல் விவகாரம்

கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்தது.

இதில் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில், அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்கதிர்கள் நீரில் மூழ்கின. அதையொட்டி அக்டோபர் 22ஆம் தேதியன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்குச் சென்ற தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காட்டூர் என்ற பகுதியிலுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை நேரில் பார்வையிட்டு, அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது அங்கிருந்த விவசாயிகள், நெல் கொள்முதல் தாமதமானதால் பல நாட்களாக நெல் தேங்கிக் கிடப்பதாகவும், மழையால் ஈரப்பதம் அதிகரித்து நெற்கதிர்களில் நாற்றுகள் முளைத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''நெல் கொள்முதலில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது'' என்றார்.

''நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளுக்கு 2 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படுவதாக சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் கூறினார். ஆனால் இங்கே ஒரு நாளுக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மூட்டைகளை வைக்க இடமின்றி, சாலையில் கொட்டியுள்ள நெற்கதிர்கள் முளைத்து வருகின்றன'' என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

அதன் பிறகு தஞ்சாவூருக்கு வந்த தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, ''விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில் கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசியை (Fortified Rice) வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதமே நெல் மூட்டைகள் தேங்குவதற்குக் காரணம்'' என்று பதிலளித்தார். மேலும், தமிழகத்தில் குறுவை சாகுபடி பரப்பு அதிகமாகி, நெல் கொள்முதல் கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாகி விட்டதாகவும் தெரிவித்தார்.

கூடுதலாக துணை முதல்வர் உதயநிதியும் தஞ்சைக்கு வந்து, எதிர்க்கட்சியினர் பொய்ப் பரப்புரை செய்வதாகக் கூறினார். பல்வேறு புள்ளி விவரங்களைத் தெரிவித்து, முதல்வர் ஸ்டாலினும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

ஆனால் தமிழக அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்காததே நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்குவதற்கு காரணமென்று விவசாய அமைப்பினர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு பிபிசி தமிழ் மேற்கொண்ட கள ஆய்வில் தெரியவந்தது என்ன?

BBC நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகமூட்டைகள் குளறுபடி நடப்பதாகக் குற்றம் சாட்டும் விவசாயிகள்

தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகள், காவிரி டெல்டா பகுதிகளாக அறியப்படுகின்றன. இவற்றில் தஞ்சாவூர் மாவட்டமே நெல் விளைச்சலில் பிரதானப் பங்கு வகிப்பதால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகப் பெயர் பெற்றுள்ளது. அதிலும் குறுவை பருவ கொள்முதலில் டெல்டா பகுதிகள் மட்டுமே பெரும் பங்களிப்பைச் செய்கின்றன.

குறுவை பருவம் என்பது ஜூன், ஜூலை மாதங்களில் நெல் பயிரிடப்பட்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய காலத்தைக் குறிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 16 சதவிகிதமாக இருந்த குறுவை பங்களிப்பு, கடந்த கொள்முதல் ஆண்டில் (செப்டெம்பர் 2024 – ஆகஸ்ட் 2025) 40 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் உணவு தானிய கொள்முதல் கழக இணையதள தகவல் தெரிவிக்கிறது.

இந்தப் பருவங்களில் விளையும் நெல்லை, நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து, பொது விநியோகத் திட்டத்திற்கு அனுப்பி வைக்கிறது.

விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் நெல்லை இடைத் தரகர்கள் இல்லாமல், அரசிடம் நேரடியாகக் குறைந்தபட்ச ஆதார விலைக்கு விற்பனை செய்வதற்கு உதவவே இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அரசால் நிரந்தரமாக மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன.

விளைநில ஆவணங்கள், ஆதார், வங்கிக் கணக்கு விவரங்களை, நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

BBC

கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் (அனுமதிக்கப்பட்ட அளவு – 17 சதவிகிதம்), தரம் பரிசோதிக்கப்பட்டு, எடை போடப்படும். அதற்குரிய தொகை சம்பந்தப்பட்ட விவசாயியினுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். கடந்த அக்டோபர் 30 வரையிலும் 38 ஆயிரம் விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.425 கோடி வரவு வைக்கப்பட்டதாக பிபிசி தமிழிடம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டில் 299 கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல், கடந்த 2 மாதங்களாக அறுவடை செய்யப்படுகின்றன. பல பகுதிகளில் அறுவடை நடந்து வருகின்றன. ஆனால் கொள்முதலில் நிறைய குளறுபடி நடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமலநாதன், ''விவசாயிகள் யாரும் நெற்கதிர்களை குளத்தில் வைத்து நாற்று முளைக்க வைக்கவில்லை, மழையில் முளைத்துள்ளன. தொடர்மழையால் நெல் காயவில்லை. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் மத்திய அரசின் நபார்டு வங்கி உதவியுடன் உலர் இயந்திரங்களை நிறுவ வேண்டுமென்ற கோரிக்கையையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்கவில்லை. அதன் விளைவே இது'' என்றார்.

இந்த அமைப்பு உள்படப் பல்வேறு விவசாய அமைப்புகளும் ஒருங்கிணைந்து, நெல் கொள்முதல் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை பிபிசியிடம் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக நெல்லின் ஈரப்பதம் 17 சதவிகிதம் என்பதை 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்பது மத்திய அரசிடம் விவசாயிகள் வைக்கும் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

BBC தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமலநாதன் 'இடப் பற்றாக்குறை, சாக்கு இல்லை, லாரிகள் வரவில்லை'

வட மாநிலங்களில் தானியக் கொள்முதல் நிலையங்கள் மிகப்பெரிய அளவில் கட்டப்படும் நிலையில், இங்கு சிறிய சிறிய கொள்முதல் நிலையங்களாக இருப்பதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். நெல் காய வைப்பதற்கான களங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்ட நிலையில், கொள்முதல் நிலையங்களிலும் இடப் பற்றாக்குறை இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஆண்டில் மழையும் நன்றாகப் பெய்து, அணைகளில் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் பரப்பும் நெல் விளைச்சலும் அதிகரித்ததாக விவசாயிகள் கூறுகின்றனர். குறுவை விளைச்சலை சரியாகக் கணித்து முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்திருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள பல பிரச்னைகளைத் தவிர்த்திருக்கலாம் என்பது விவசாய அமைப்புகளின் கருத்தாக உள்ளது.

''குறுவை பருவத்திற்கு முன் ஆண்டுதோறும் முத்தரப்புக் கூட்டம் கூட்டப்படும். கடந்த 3 ஆண்டுகளாக அந்த நடைமுறையை தமிழக அரசு கைவிட்டுவிட்டது. இதனால்தான் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் தேவைப்படும் அளவிலான சாக்குகளைக்கூட தமிழக அரசு ஏற்பாடு செய்யவில்லை என்பது இதற்கு ஓர் உதாரணம்'' என்கிறார் விமலநாதன்.

இதேபோல சரியான நேரத்திற்கு கொள்முதல் செய்வதற்கான லாரிகள் வராததாலும், கொள்முதல் நிலையங்களில் வெளியில் குவிக்கப்பட்டிருந்த நெற்கதிர்கள் முளைத்து விட்டதாகச் சொல்கிறார் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ரவிச்சந்தர். மாவட்ட வாரியாக லாரிகளை ஒப்பந்தம் செய்யாமல் மாநில அளவில் ஒரே நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ததே இதற்குக் காரணம் என்கிறார் அவர்.

பிபிசி தமிழிடம் பேசிய ரவிச்சந்தர், ''ஆண்டுதோறும் மத்தியக்குழு இங்கு ஆய்வுக்கு வருகிறது. ஆனால் ஈரப்பதத்தை 22 சதவிகிதமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க மறுக்கிறது. தமிழக அரசும் விளைச்சலை முன்கூட்டியே கணித்து கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கவில்லை. கடந்த ஆட்சியில் இருந்த திறந்தவெளி குடோன்களையும் முளைப்பதாகக் கூறி மூடிவிட்டனர்'' என்று குற்றம் சாட்டினார்.

மூடப்பட்ட திறந்தவெளி குடோன்களில் ஷெட் அமைத்திருந்தால் தற்போது கொள்முதல் நிலையங்களில் நெற்கதிர்கள் முளைத்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் விவசாயிகள். ஆனால் இந்தக் கருத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா உள்படப் பல அதிகாரிகளும் மறுக்கின்றனர். சில இடங்களில் ஓரத்தில் இருந்த நெற்கதிர்கள் மட்டுமே முளைத்ததாக அவர்கள் கூறுகின்றனர்

BBC விளைச்சல் அதிகமாகியுள்ள நிலையில் அதற்கேற்ப முன்னேற்பாடு செய்யாதது தமிழக அரசின் தவறு என்று விவசாயிகள் கூறுகின்றனர் குற்றச்சாட்டுகளை மறுக்கும் அதிகாரிகள்

இந்த ஆண்டில் குறுவை சாகுபடி இரட்டிப்பானதால்தான் கொள்முதலில் சற்று தாமதம் ஏற்பட்டதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பல்வேறு புள்ளி விவரங்களைப் பகிர்ந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், இந்த ஆண்டில் குறுவை சாகுபடியை அமோக விளைச்சல் என்று வர்ணிக்கின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், ''குறுவை சாகுபடியில் அதிகப் பங்களிப்பு தருவது தஞ்சை மாவட்டம்தான். கடந்த ஆண்டில் குறுவை பருவத்தில் ஒன்றே-கால் லட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் செப்டெம்பர் 1ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 30க்குள் 2.3 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ''தற்போது வரை 90 சதவிகிதம் அறுவடை முடிவடைந்துள்ளது. இனியும் 50 ஆயிரம் டன் நெல் வர வேண்டியுள்ளது. அப்படிக் கணக்கிடும்போது, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் குறுவை விளைச்சல் அப்படியே இரட்டிப்பாகியுள்ளது. இருந்தும் நாங்கள் 3 மாதங்களில் செய்ய வேண்டிய பணிகளை 20 நாட்களுக்குள் செய்து முடித்துள்ளோம்'' என்றார்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் லாரிகள் காத்திருந்து, சரக்கு ரயில்கள் மூலமாக வெவ்வேறு மாவட்டங்களுக்கும், பல மாவட்டங்களுக்கு நேரடியாக லாரிகளிலும் நெல் மூட்டைகள் அனுப்பப்படுவதை பிபிசி தமிழ் நேரில் கண்டறிந்தது.

அதே நேரத்தில் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள், தங்கள் நெல்லை எடுப்பதற்கான வாய்ப்புக்காகக் காத்திருப்பதையும் நேரில் காண முடிந்தது. இந்த ஆண்டில் விளைச்சல் அதிகமாகி இருப்பதை ஒப்புக்கொள்ளும் விவசாயிகள், "அதற்கேற்ப முன்னேற்பாட்டைச் செய்யாதது தமிழக அரசின் தவறுதான்" என்கின்றனர்.

''குறுவை சாகுபடிக்கு வழக்கமாக தண்ணீர் இருக்காது. இந்த ஆண்டில் மழை நன்றாகப் பெய்தது. மேட்டூர் அணையிலும் தண்ணீர் இருந்தது. தண்ணீர் நன்றாகக் கிடைத்ததால் 3–4 லட்சம் ஏக்கரில் நடக்கும் குறுவை சாகுபடி, ஆறரை லட்சம் ஏக்கராக அதிகரித்துவிட்டது. அனைத்தும் ஒரே நேரத்தில் அறுவடைக்கு வந்துவிட்டது. ஆனால் இதை யூகித்து கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறந்திருக்க வேண்டும். ஆனால் இருக்கும் நிலையங்களிலேயே பழைய நெல்லை காலி செய்யவில்லை'' என்றார் ரவிச்சந்தர்.

BBC மழையால் சாய்ந்த நெற்கதிர்கள்; கடனில் மூழ்கிய விவசாயிகள்

நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தவுடன், ஒவ்வொரு மூட்டையிலும் (ஒரு குவிண்டால்) ஊட்டச்சத்துக்காக கலக்க வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசியை (Fortified rice) வழங்க மத்திய அரசு அனுமதி தராததே கொள்முதலில் ஏற்பட்ட தாமதத்திற்குக் காரணம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார்.

ஆனால் இதை மறுக்கும் விவசாயிகள் பலரும், கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்காதது, சாக்குப் பற்றாக்குறை, லாரிகள் வராதது என தமிழக அரசின் தவறுகளால்தான், தங்கள் வயல்களில் நெல் அறுவடை செய்ய முடியாமல் இருந்த நிலையில், கனமழை பெய்து வயல்களிலேயே நெற்கதிர்கள் சாய்ந்து நாற்றாக முளைத்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

பரவக்கோட்டையைச் சேர்ந்த பூங்கொடி என்ற விவசாயி, தனது வயலில் மழையில் சாய்ந்து நெற்கதிர்களில் நாற்று முளைத்ததைத் காண்பித்தது ஊடகங்களில் வைரலானது. அதுபற்றிப் பேசிய துணை முதல்வர் உதயநிதி, அறுவடையே செய்யாத நிலையில் அதில் எப்படி நாற்று முளைத்தது என்று கேட்டார்.

இது பற்றி பூங்கொடியிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''நான் என் நிலையை எதார்த்தமாகச் சொன்னது அரசியலாகிவிட்டது. அதனால் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. நான் என் வயலில் இருந்ததை எல்லாம் அறுவடை செய்துவிட்டேன்'' என்றார்.

இதேபோன்று திருவையாறு அருகேயுள்ள திருப்பணந்துருத்தியில் விஜி ரவி என்ற பெண் விவசாயி, குத்தகைக்கு எடுத்த மூன்றரை ஏக்கர் நிலத்தில் விதைத்திருந்த நெல்லும் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், திடீர் கனமழையில் முற்றிலும் சாய்ந்துவிட்டது.

நாற்று முளைத்த அந்த வயலை அறுவடை செய்ய முடியாமல் அவரே டிராக்டர் வைத்து முற்றிலும் உழுததும் ஊடகங்களில் வைரலானது.

அந்த வயலை பிபிசி தமிழ் நேரில் கள ஆய்வு செய்தது. அக்டோபர் 31 வரையிலும் அந்த வயலில் மழைநீர் தேங்கி, முற்றிலும் நெற்கதிர்கள் சாய்ந்திருந்தன. டிராக்டரால் உழப்பட்ட அந்த வயலில் இருந்த நெற்கதிர் நாற்றுகளை விஜியும், அவரது கணவர் ரவியும் பிடுங்கிக் கொண்டிருந்தனர். வட்டிக்கு வாங்கி விவசாயம் செய்த நிலையில் இதனால் பெரும் கடனாளியாகிவிட்டதாக இருவரும் கவலை தெரிவித்தனர்.

பிபிசி தமிழிடம் பேசிய விஜி ரவி, ''வட்டிக்கு வாங்கி மூன்றரை ஏக்கரில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவழித்து நெல் விதைத்தேன். அறுவடை செய்திருந்தால் இரண்டரை லட்சம் கிடைத்திருக்கும். ஆனால் மொத்தமாகப் போய்விட்டது. இப்போது குத்தகைத் தொகையையும் தர முடியாமல், குழந்தைகளின் நகையை வைத்துச் செலவழித்ததையும் எடுக்க முடியாமல் கடனாளி ஆகியுள்ளேன். அழிந்த பயிரை கையால் பிடுங்க முடியாமல்தான் டிராக்டர் வைத்து அழிக்க வேண்டியதாயிற்று'' என்றார்.

இவருடைய நெல் வயல் பாதிப்பு பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த பின்னும், அக்டோபர் 31 வரையிலும் அவருடைய நிலத்தைப் பார்வையிட எந்த அதிகாரியும் வரவில்லை, எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும் இருவரும் தெரிவித்தனர்.

இதுபற்றி தஞ்சாவூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் வித்யாவிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''அவருடைய வயல் உள்பட மழை பாதிப்பு குறித்து தகவல்களை ஒருங்கிணைத்து, மாவட்ட ஆட்சியர் மூலமாக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து வந்ததும் நிவாரணம் வழங்கப்படும்'' என்றார்.

இதுபோன்று பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் நஞ்சை நிலங்களை மனையிடங்களுக்கு விற்பதும் சமீப காலமாக அதிகரிப்பதாக விவசாயிகள் வருந்துகின்றனர்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய மருங்குளத்தைச் சேர்ந்த குருநாதன், ''நஞ்சை நிலத்தை மனையிடத்திற்கு விற்பது அதிகரித்து வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு நஞ்சை நிலங்களை நில உபயோக மாற்றம் செய்ய அனுமதிக்காமல் இருந்தால் மட்டுமே தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காக்க முடியும்'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.