புதுக்கோட்டையில் திடீரென சாலையில் தரையிறங்கிய விமானம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி – என்ன நடந்தது?
TV9 Tamil News November 13, 2025 10:48 PM

புதுக்கோட்டை, நவம்பர் 13: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நவம்பர் 13, 2025 காலை அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு சிறிய பயிற்சி விமானம் (Flight) திடீரென சாலையில் தரையிறங்கியதால், அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.  புதுக்கோட்டைக்கு  (Pudukottai) அருகிலுள்ள கீரனூர் பகுதியில் வானத்தில் பறந்துகொண்டிருந்த சிறிய பயிற்சி விமானத்தில் திடீரென தொழில்நுட்ப பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, விமானி உடனடி முடிவு எடுத்து, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சாலையின் மேல் அவசரமாக தரையிறக்கியுள்ளார். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

திடீரென சாலையில் தரையிறங்கிய விமானம்

புதுக்கோட்டை அருகே கீரனூர் பகுதியில் வானில் பறந்த சிறிய ரக பயிற்சி விமானத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. விபத்தை தவிர்க்க விமானிகள் துரிமாக செயல்பட்டு சாலையில் தரையிறக்கியுள்ளனர். இந்த நிலையில் விமானம் தரையிறங்கிய சமயம் அதிர்ஷ்டவசமாக அந்த சாலையில் வேறு எந்த வாகனங்களும் செல்லாததால் பெரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், அவசரமாக தரையிறங்கிய நிலையில் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. தற்போது விமானம் சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சென்னை ஒன் செயலி.. ஒரு ரூபாய் செலுத்தி டிக்கெட் பெரும் புதிய சலுகை.. இன்று முதல் அறிமுகம்..

இந்த அபூர்வ சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள்  கூட்டமாக வந்து, சாலையில் தரையிறங்கிய விமானத்தை நேரில் காண வந்தனர். குறிப்பாக பள்ளி மாணவர்களும் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

ஹிந்தியில் பேசிய பைலட்கள்

விமானத்தில் இருந்த பைலட் மற்றும் பயிற்சியாளர் என இருவரும் சிறிதளவு காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இருவரையும் அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பைலட்டுகள் ஹிந்தியில் பேசியதால், அவர்களுடன் பேசுவதில் சற்று சிரமம் ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இதனால் ஆரம்பத்தில் என்ன நடந்தது என அவர்களால் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையும் படிக்க : மினி பஸ்ஸை முந்த முயன்ற பள்ளி வேன்… படியில் தொங்கியபடி பயணித்த மாணவன் மரணம்… சிவகங்கையில் பரபரப்பு

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை காவல்துறையினரும், திருச்சி விமான நிலைய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். தொழில்நுட்ப கோளாறு எவ்வாறு ஏற்பட்டது, பயிற்சி விமானம் எங்கிருந்து புறப்பட்டது போன்ற தகவல்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பயிற்சி விமானம் சாலையில் தரையிறங்கிய இந்த அரிய சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காரணம் இதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்காததால் பலரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.