பீகார் தேர்தல்: 2020 தேர்தலை விட NOTA-க்கு அதிக வாக்குகள் விழுந்ததால் அதிர்ச்சி!
TV9 Tamil News November 15, 2025 01:48 PM

பீகார், நவம்பர் 15: கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த முறை பீகார் சட்டமன்றத் தேர்தலில் NOTA-வை தேர்வு செய்தவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. ஆனால், இது 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தால் பகிரப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 என 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்து, நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்துள்ளது. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) இத்தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 243 இடங்களில், பெரும்பான்மைக்கு 122 இடங்களே தேவை என்ற நிலையில், NDA கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், மகாபந்தன் கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் :

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதாவது, மொத்தம் 61 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், 2020 தேர்தலில் அக்கட்சி 70 இடங்களில் போட்டியிட்டு, 27 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை, அக்கட்சி யாரும் எதிர்பாராத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. அதோடு, போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது.

Also read: வெற்றிக்கு காரணம் இதுதான்…. பீகார் தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி கருத்து

வீணான ராகுலின் பிரச்சாரம்:

அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நடந்தும், சைக்கிள் ஓட்டியும், மீன்பிடித்தும் அந்த மக்களுடன் மக்களாக அவர்களின் நிலப்பரப்பில், அவர்கள் கலாச்சாரத்துடன் இணைந்து வாக்கு சேகரித்தபோதும், வாக்காளர்கள் மாற்று பாதையை தேர்வு செய்துள்ளனர். பீகாரில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் பல தசாப்தங்களாக இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு சென்றுவிட்டது.

ராகுல் காந்தி அம்மாநிலத்தில் 25 மாவட்டங்களில், சுமார் 1500 கி.மீக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்த நிலையில், குறைந்தபட்ச வாக்குகளை கூட மக்கள் செலுத்தவில்லை என்பது வியப்பான ஒன்றாக உள்ளது. குறிப்பாக ராகுலின் செல்வாக்கு இளைஞர்களிடம் கூட எடுபடாமல் சென்றுள்ளதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நோட்டாவுக்கு 1.81% வாக்கு:

இந்நிலையில், இந்த சட்டசபை தேர்தலில் ‘நோட்டா’ எனப்படும் மேற்கண்ட யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என 1.81 சதவீதம் பேர் வாக்களித்து இருப்பதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் பகிர்ந்த தரவில் கூறியுள்ளதாவது, பீகார் சட்டசபை தேர்தலில் 6,65,870 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 1.81% ஆகும்.

Also read: பீகார் தேர்தல்: மாநிலத்தையே வியந்து பார்க்க வைத்த சிராக் பஸ்வானின் வெற்றி!!

2020-விட அதிகம், 2015-ஐ விட குறைவு:

முன்னதாக, 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில், 7,06,252 பேர் நோட்டாவுக்கு வாக்களித்திருந்தனர். இது அப்போது பதிவான வாக்குகளில், 1.68% ஆகும். சதவீத அடிப்படையில் பார்த்தால் முந்தைய தேர்தலை விட, 0.13 சதவீதம் அதிகம். அதே நேரத்தில், 2015 சட்டசபை தேர்தலுடன் ஒப்பிட்டால் அப்போது 3.8 கோடி பேர் வாக்களித்த நிலையில் 9.4 லட்சம் பேர் நோட்டாவை தேர்வு செய்திருந்தனர். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 2.48% ஆகும். 2015 சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில், தற்போதைய நோட்டா வாக்குகள் மிக குறைவு என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.