அப்போ விஜய்.. இப்போ ரஜினி!.. பெரிய நடிகர்களிடம் மொக்கை வாங்கும் சுந்தர்.சி...
CineReporters Tamil November 15, 2025 01:48 PM

இயக்குனர் மணிவண்ணனிடம் சினிமா கற்றவர் சுந்தர்.சி. முறை மாமன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறினார். அதன்பின் முறை மாப்பிள்ளை, மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், ஜானகிராமன் உள்ளிட்ட பல திரைப்படங்களையும் இயக்கி கோலிவுட்டின் முக்கியமான இயக்குனராக மாறினார்
. குறைந்த நாட்களில் சொன்ன பட்ஜெட்டில் படமெடுத்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கும் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி.

இவர் இயக்கிய 99 சதவீத திரைப்படங்கள் வெற்றி படங்கள்தான். ‘எனது படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் இரண்டரை மணி நேரம் ஜாலியாக சிரித்து விட்டு போக வேண்டும் என்பது மட்டும்தான் என் நோக்கம்’ என சொன்னவர் சுந்தர்.சி.துவக்கத்தில் கார்த்திக், சரத்குமார் போன்ற நடிகர்களை வைத்து படங்களை இயக்கிய சுந்தர்.சி பெரிய நடிகர்கள் பக்கம் போகவே இல்லை. மினிமம் பட்ஜெட், இரண்டாம் கட்ட நடிகர்கள் ஆகியோர்களுடன் மட்டுமே தொடர்ந்து பயணித்து வருகிறார். இப்போதும் அது தொடர்கிறது.

கமலை வைத்து அன்பே சிவம். ரஜினியை வைத்து அருணாச்சலம் ஆகிய படங்களை சுந்தர் இயக்கியிருந்தாலும் அந்த இரண்டு படங்களின் கதையையும் எழுதியது அவர் இல்லை. அந்த இரண்டு படங்களிலும் அவர் வெறும் இயக்குனர் மட்டுமே.அஜித்தை வைத்து ‘உன்னை தேடி’ என்கிற படத்தை இயக்கினார். அதுகூட அஜித்தே சுந்தர்.சி-யை தேடிச்சென்று ‘உங்கள் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என கேட்டதால் அது நடந்தது.

விஜயை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என பல வருடங்களாக முயற்சி செய்தார். சிலமுறை விஜயை சந்தித்து கதையும் சொன்னார். ஆனால் சுந்தர்.சி சொன்ன கதை விஜய்க்கு பிடிக்கவில்லை. இதை பல பேட்டிகளும் சுந்தர்.சி சொல்லி இருக்கிறார். ‘விஜயை வைத்து படமெடுக்க முடியவில்லை என்கிற வருத்தம் இருக்கிறது. இனிமேல் அது நடக்க வாய்ப்பே இல்லை’ என்று சொல்லி இருக்கிறார்.

தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருந்த புதிய படத்திலிருந்து சுந்தர்.சி விலகியிருக்கிறார். ஒரு ஹாரர் காமெடி கதையை உருவாக்கி அவர் அதை ரஜினியிடம் சொன்னதாகவும் ரஜினிக்கு அந்த கதை பிடிக்கவில்லை எனவும் சொல்கிறார்கள். அது என்னவோ பெரிய நடிகர்களுக்கும், சுந்தர்.சிக்கும் செட்டாகவே இல்லை.

சின்ன பட்ஜெட், சின்ன நடிகர்கள் என்றே பயணிப்போம் என சுந்தர்.சி நினைத்துவிட்டார் போல!..

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.