நெல்லை கவின் கொலை வழக்கு விவகாரத்தில் சுர்ஜித்தின் தாயை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லை கேடிசி நகர் பகுதியில் ஜூலை 27ல் தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த ஐ டி ஊழியர் கவின் வயது 25. என்பவரை நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், என்ற வாலிபர் தனது அக்காவுடன் ஆன காதலை கைவிட வலியுறுத்தி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி ஆணவ கொலை செய்தார். இதைத் தொடர்ந்து சுர்ஜித் சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். காவல்துறையினர் நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சுர்ஜித்தை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் தந்தையான உதவி சார்பு காவல் ஆய்வாளர் சரவணனையும் காவல்துறையினர் கைது செய்தனர். சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரணை செய்த நிலையில் 3வதாக இந்த வழக்கில் சுர்ஜித்தின் பெரியம்மா மகன் ஜெயபாலனை கைது செய்தனர்.

தற்போது இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித், அவரது தந்தை உதவி சார்பு ஆய்வாளர் சரவணன், சுர்ஜித்தின் உறவினரான சகோதரர் ஜெயபாலன் ஆகிய மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளனர். இந்த நிலையில் தனித்தனியாக சுர்ஜித்தை தவிர மற்ற இருவரும் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்தனர். நீதிபதி இந்த மனுக்களை தள்ளுபடி செய்தார். அதனைத் தொடர்ந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித்தின் தந்தை சரவணன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கில் சுர்ஜித்தின் தாயான உதவி சார்பு ஆய்வாளர் கிருஷ்ண குமாரிக்கும் சம்பந்தம் இருப்பதாக நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வாதம் செய்தனர். அதனைத் தொடர்ந்து 800 பக்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதிலும் சுர்ஜித்தின் தாயை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்யவில்லை. இதனால் இந்த வழக்கை விசாரணை செய்த நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஹேமா சுர்ஜித்தின் தாயான உதவி சார்பு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தார்.