'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்
WEBDUNIA TAMIL November 15, 2025 07:48 PM

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து கூட்டங்களுக்கும் தமது கட்சிக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்று அதில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, தற்போது தமிழகத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் தொடர்பான கூட்டங்களுக்குத் தவெக அழைக்கப்படாதது குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எஸ்.ஐ.ஆர். தொடர்பான மற்றும் பிற அரசியல் கட்சி கூட்டங்களுக்கு தமிழக வெற்றி கழகத்தையும் அழைக்க வேண்டும் என்று விஜய் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். எஸ்.ஐ.ஆர். பணியில் உள்ள நடைமுறை சிக்கல்களையும், குழப்பங்களையும் அவர் விரிவாக பட்டியலிட்டுள்ளார்:

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கான கால அளவு மிகவும் குறைவாக உள்ளது. பண்டிகை காலம் என்பதால், பணியில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் (SSR) நடைபெற்ற நிலையில், மீண்டும் மக்களை வாக்குரிமைக்காக சோதிப்பதாக தேர்தல் ஆணையத்தின் மீது அவர் விமர்சனம் வைத்துள்ளார்.

பெரும்பாலான வாக்குச்சாவடி அலுவலர்கள் போதுமான தயாரிப்புடன் இல்லை. மேலும், பலரிடம் 2002/2005 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் இல்லை. இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், தங்களின் பள்ளி/அங்கன்வாடி வேலைகளையும் பார்த்துக்கொண்டே தேர்தல் பணிகளைச் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லை.

முதலில் ஆவணங்கள் கொடுக்கத் தேவையில்லை என்றும், பின்னர் அதிகாரி கேட்டால் ஆவணம் கொடுக்க வேண்டும் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் குழப்பங்கள் நிலவுவதாகவும் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார். "மக்களின் வாக்களிக்கும் உரிமையே ஜனநாயகத்தின் வெற்றி. எந்தவொரு தமிழரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்படக்கூடாது" என்று கடிதத்தில் விஜய் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்பதன் மூலம், இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யத் தவெக உதவ முடியும் என்றும் அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.