இந்தியாவில் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதாலும், பராமரிப்பு செலவு குறைவதாலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரே சார்ஜில் நீண்ட தூரம் செல்லக்கூடிய மாடல்கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் ஓலா எஸ்1 ப்ரோ, பஜாஜ் சேடக், சிம்பிள் ஒன், ஏத்தர் 450X போன்ற முன்னணி ஸ்கூட்டர்களுக்கு பெரிய தேவை உருவாகியுள்ளது.
ஓலாவின் S1 Pro Gen 2 மாடல் தற்போது இந்திய சந்தையில் ஹாட்டாக வாங்கப்படும் மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். 4kWh பேட்டரியுடன் இது 195 கிமீ வரை ரேஞ்ச் வழங்குகிறது. மணிக்கு 120 கிமீ என்கிற அதிகபட்ச வேகத்தை எட்டும் இந்த ஸ்கூட்டர், தனது வகையில் மிக வேகமான மாடல்களில் ஒன்றாகும். ஈக்கோ, நார்மல், ஸ்போர்ட்ஸ் என பல மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. சாலையில் ஸ்டபிலிட்டி மற்றும் பிக்-அப் அதிகம் இருப்பது இதன் பெரிய பலம்.
பஜாஜ் சேடக் 3.2kWh பேட்டரியுடன் 130 கிமீ வரை ரேஞ்ச் தரும் அருமையான மாடல். முழு மெட்டல் பாடி கொண்ட இம்மாதிரி நீடித்த பயணத்திற்கான சிறந்த தேர்வு என கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் சிம்பிள் எனர்ஜி வெளியிட்ட சிம்பிள் ஒன் மாடல் நாட்டின் மிக அதிக ரேஞ்ச் தரும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக திகழ்கிறது. 5kWh பேட்டரியுடன் 212 கிமீ வரை ரேஞ்ச் தரும் இது, 8.5kW சக்திவாய்ந்த மோட்டாருடன் வருகிறது. வேகமான சார்ஜிங், நிலைத்திருக்கும் வடிவமைப்பு மற்றும் நவீன லுக்குகள் இதன் பலத்தைக் கூட்டுகின்றன.
தொழில்நுட்ப ரீதியாக முன்னிலை வகிப்பது ஏத்தர் 450X. 3.7kWh பேட்டரியுடன் சுமார் 150 கிமீ வரை செல்லும் இது, நகரப் போக்குவரத்தில் ஸ்மூத் ரைடிங்கை வழங்கும். 7-இன்ச் டச் ஸ்கிரீன், ஓடிஏ அப்டேட்கள், மேம்படுத்தப்பட்ட நெவிகேஷன் வசதி, சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் காரணமாக இது முழுமையான ஸ்மார்ட் ஸ்கூட்டராக கருதப்படுகிறது.
எரிபொருள் விலை உயர்வு தொடர்ந்து நடக்கும் நிலையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய வாடிக்கையாளர்களின் பிரதான தேர்வாக மாறி வருவது இந்த மாடல்களின் வரவேற்பே நிரூபிக்கிறது.