சிஏஜி எனப்படும் இந்திய தணிக்கை மற்றும் பொது கணக்கு ஆய்வாளர் நிறுவனத்தின் 166-வது தொடக்க தினம் டெல்லியில் நடைபெற்றது. இதனைமுன்னிட்டு, குறித்த தணிக்கை தினக் கொண்டாட்டத்தை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிஷ்ணன் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது கூறியதாவது: நல்ல ஆட்சிக்கு ஒரு வழிகாட்டியாகவும், நிர்வாகக் கணக்காய்வை வலுப்படுத்தும் கருவியாகவும் செயல்படுவதற்காக தணிக்கை செயல்முறைகளை மாற்றியமைக்க, சிஏஜி குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. தணிக்கை என்பது ஒரு பின்நோக்கிய செயல்பாடு அல்ல, மாறாக முன்னோக்கிய சீர்திருத்தம், புத்தாக்கம் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொருளாதார, சமூக, தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் மற்றும் நிறுவனத் துறைகள் அனைத்திலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடையும் அரசின் பயணத்தில், சிஏஜி. ஒரு நம்பகமான கூட்டாளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், விக்சித் பாரத் 2047 நோக்கி நாட்டின் முன்னேற்றத்தை கொண்டு செல்கிறதாகவும் துணை ஜனாதிபதி பேசியுள்ளார்.