உலகின் சில பகுதிகளில் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு விகிதங்கள் அதிகரித்து வருகின்றன - மற்ற வகை புற்றுநோய்களை விட இது வேகமாக அதிகரிக்கிறதே, ஏன்?
தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் அமெரிக்காவில் வேறு எந்தப் புற்றுநோயை விடவும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த மர்மமான உயர்வுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?
தைராய்டு சுரப்பி கழுத்தின் அடிப்பகுதியில், ஆடம்ஸ் ஆப்பிளுக்குக் சற்று கீழே அமைந்துள்ளது. இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை மற்றும் எடை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடுவது இதன் வேலை. தைராய்டு சுரப்பியின் உள்ளே உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரவும் பிரியவும் தொடங்கி, ஒரு கட்டியை உருவாக்கும்போது தைராய்டு புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தச் சிதைந்த செல்கள் சுற்றியுள்ள திசுக்களை ஆக்கிரமித்து, உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.
பெரும்பாலான தைராய்டு புற்றுநோய்கள் குணப்படுத்தக் கூடியவை என்றாலும், இந்த நோயின் விகிதங்கள் வேகமாக அதிகரித்து வருவது குறித்துச் சுகாதார நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள். அமெரிக்காவின் புற்றுநோய் பற்றி தெரிவிக்கும் அமைப்பான 'கண்காணிப்பு, தொற்றுநோயியல் மற்றும் இறுதி முடிவுகள்' (Surveillance, Epidemiology, and End Results - Seer) தரவுத்தளத்தின்படி, அமெரிக்காவில் தைராய்டு புற்றுநோயின் நிகழ்வு விகிதம் 1980 மற்றும் 2016 க்கு இடையில் மூன்று மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது ஆண்களில் 100,000 பேரில் 2.39 லிருந்து 7.54 ஆகவும், பெண்களில் 100,000 பேரில் 6.15 லிருந்து 21.28 ஆகவும் உயர்ந்துள்ளது.
"மருத்துவத் துறையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், காலப்போக்கில் அதிகரித்து வரும் சில புற்றுநோய்களில் தைராய்டு புற்றுநோயும் ஒன்றாகும்," என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (UCSF) உட்சுரப்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சான்சியானா ரோமன் கூறுகிறார்.
அப்படியானால், இந்த பாதிப்பு அதிகரிப்பதன் பின்னணியில் என்ன இருக்கிறது?
குழந்தைப் பருவத்தில் அதிக அளவில் கதிர்வீச்சுக்கு (ionising radiation) ஆளாவது தைராய்டு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று நீண்ட காலமாக அறியப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் செர்னோபில் அணு விபத்துக்குப் பிந்தைய ஆண்டுகளில், பெலாரஸ், யுக்ரேன் மற்றும் ரஷ்யாவில் குழந்தைகளிடையே இந்த நோயின் விகிதங்கள் வேகமாக உயர்ந்தன. ஜப்பானிய அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்களில், 1958 முதல் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 36% பேருக்கு குழந்தைப் பருவத்தில் கதிர்வீச்சுக்கு உள்ளானதால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
Getty Images மருத்துவ முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், தைராய்டு புற்றுநோய் எண்கள் அதிகரித்து வருகின்றன.
இருப்பினும் இத்தகைய உயர்வை விளக்கக்கூடிய வகையில் 80கள் அல்லது 90களில் அமெரிக்காவிலோ அல்லது வேறு இடங்களிலோ அணுசக்திப் பேரழிவுகள் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் நிபுணர்கள் குழப்பமடைந்தனர், இருப்பினும் இறுதியில் ஒரு விளக்கம் முன்வைக்கப்பட்டது - நோயறிதல் மேம்பட்டதுதான் இதற்குக் காரணமா?
1980களில், மருத்துவர்கள் முதன்முறையாக தைராய்டு அல்ட்ராசோனோகிராபியைப் (thyroid ultrasonography) பயன்படுத்தத் தொடங்கினர். இது ஒலி அலைகளைப் பயன்படுத்தி தைராய்டு சுரப்பியின் படங்களை உருவாக்கும் ஒரு இமேஜிங் நுட்பமாகும். முன்பு கண்டறிய முடியாத மிகச் சிறிய தைராய்டு புற்றுநோய்களை மருத்துவர்கள் கண்டறிய இந்த முறை உதவியது.
பின்னர் 1990களில், சந்தேகத்திற்கிடமான கட்டிகள் புற்றுநோயா என கண்டறிய மருத்துவர்கள் அந்த கட்டியிலிர்ந்து செல்களைச் சேகரிக்க தொடங்கினர். இது நுண் ஊசி ஆஸ்பிரேஷன் பயாப்ஸி (fine needle aspiration biopsy) என்று அழைக்கப்படும் நுட்பமாகும்.
"முன்பு, மருத்துவர்கள் கட்டிகளைத் கண்டறிய தைராய்டு சுரப்பியைத் தொட்டுப் பார்ப்பார்கள்," என்று அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் தொற்றுநோயியல் நிபுணர் காரி கிடாஹாரா கூறுகிறார்.
"ஆனால் அல்ட்ராசோனோகிராபி போன்ற நுட்பங்கள் மூலம், மருத்துவர்களால் சிறிய அளவிலான முடிச்சுகளைக் கண்டறிந்து, பின்னர் அவற்றிலிருந்து பயாப்ஸி எடுக்க முடிந்தது. இது சிறிய அளவிலான பாப்பிலரி தைராய்டு புற்றுநோய்களை அதிகமாகக் கண்டறிய வழிவகுத்தது, அவை முன்பு (உடலைத் தொட்டுச் சோதிக்கும் முறையால்) உணரப்படாது."
மற்ற ஆதாரங்களும் இந்த அதிகப்படியான நோயறிதல் (over-diagnosis) கோட்பாட்டிற்கு ஆதரவாக உள்ளன உதாரணமாக, தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் அதிகமானாலும், தைராய்டு புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் நிலையாக இருப்பது போல் தோன்றியது. இதற்கிடையில், தென் கொரியாவில் தேசிய தைராய்டு புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது பாதிப்பு அதிகமாக இருந்தது. திட்டம் குறைக்கப்பட்டபோது விகிதங்களும் மீண்டும் சரிந்தன.
கிடாஹாரா, "ஒட்டுமொத்தமாக இந்த வடிவங்கள் அதிகப்படியான நோயறிதலுடன் ஒத்துப்போகின்றன. அதாவது, கண்டறியப்படாமல் விடப்பட்டிருந்தால், அந்த நபர்களுக்கு அறிகுறிகளையோ அல்லது மரணத்தையோ ஒருபோதும் ஏற்படுத்தாத நோயை அதிகமாகக் கண்டறிதல் ஆகும்," என்று கூறுகிறார்.
Getty Images 1986 ஆம் ஆண்டு செர்னோபில் அணுசக்திப் பேரழிவுக்குப் பிறகு யுக்ரேன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகளிடையே தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் கடுமையாக அதிகரித்தன.
சிறிய பாப்பிலரி தைராய்டு புற்றுநோய்கள் பொதுவாக மெதுவாக வளரும் மற்றும் சிகிச்சைக்கு நன்றாக குணமாகும் என்று இப்போது நமக்குத் தெரியும். இவை அரிதாகவே அபாயகரமானவை மற்றும் நல்ல முன்கணிப்பைக் கொண்டுள்ளன. ஆனால் அந்தக் காலத்தில், இந்தப் புற்றுநோய்களை அதிகமாகக் கண்டறிவது பலருக்குத் தேவையற்ற மருத்துவச் சிகிச்சைகளுக்கு வழிவகுத்தது. இதில் தைராய்டு சுரப்பியை முழுவதுமாக அகற்றுவது, அதைத் தொடர்ந்து எஞ்சிய செல்களை அகற்ற கதிரியக்க அயோடின் சிகிச்சை ஆகியவை அடங்கும். அறுவைசிகிச்சை சில சமயங்களில் குரல் நாண் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும், அதே நேரத்தில் கதிரியக்க அயோடின் சிகிச்சையும் இரண்டாம் நிலை புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
இதன் விளைவாக, அமெரிக்காவில் இப்போது வெகு தீவிர புற்றுநோய்களுக்கு மட்டுமே கதிரியக்க அயோடின் பயன்படுத்தப்படுவதுடன், பக்க விளைவுகளின் அபாயத்தைக் குறைக்க மருந்தளவுகள் குறைக்கப்படுகின்றன. தைராய்டு சுரப்பியை முழுவதுமாக அகற்றுவதற்குப் பதிலாக, மருத்துவர்கள் பெரும்பாலும் அதை பகுதியளவு அகற்றுகிறார்கள் அல்லது 'கண்காணிப்பு' அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.
இதன் விளைவாக, கண்காணிப்பு, தொற்றுநோயியல் மற்றும் இறுதி முடிவுகளின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் அமெரிக்காவில் தைராய்டு புற்றுநோய் பாதிப்புகள் இப்போது நிலையானதாகிவிட்டன என்று கூறுகின்றன. உதாரணமாக, 2010 இல் 100,000 பேருக்குச் சராசரியாக 13.9 புதிய பாதிப்புகள் இருந்தன, அதே நேரத்தில் புள்ளிவிவரங்கள் கிடைக்கும் கடைசி ஆண்டான 2022 இல் 100,000 பேரில் 14.1 பாதிப்புகள் இருந்தன.
இருப்பினும், அதிகப்படியான நோயறிதல் மட்டுமே பாதிப்பு விகிதம் அதிகரிப்புக்கு முழுமையாக விளக்கமாக இருக்கமுடியாது என்று சில விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளாக வாதிடுகின்றனர்.
இத்தாலியில் உள்ள கட்டானியா பல்கலைக்கழகத்தின் உட்சுரப்பியல் துறைப் பேராசிரியரான ரிக்கார்டோ விக்னேரி ஒரு ஆய்வில், அதிகப்படியான நோயறிதல் மட்டுமே இந்த உயர்வுக்குக் காரணமாக இருந்தால், சிறந்த நோயறிதல் நடைமுறைகளைக் கொண்ட உயர் வருமான நாடுகளில் மட்டுமே தைராய்டு புற்றுநோய் பாதிப்புகள் அதிகமாக கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கலாம் என்று வாதிடுகிறார். இருப்பினும், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளதால், அது உண்மையல்ல என்கிறார் அவர்.
"வலுவான பரிசோதனை இல்லாத இடங்களிலும் கூட தைராய்டு புற்றுநோய் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன," என்று ரோமன் கூறுகிறார்.
"பெரிய மற்றும் மிகவும் முற்றிய கட்டிகளும் அடிக்கடி கண்டறியப்படுகின்றன. இது நோயறிதல் சார்பு மற்றும் நோய் பாதிப்பின் உண்மையான அதிகரிப்பு இரண்டின் கலவையையும் நாம் பார்க்கிறோம் என்பதைக் குறிக்கிறது."
தைராய்டு புற்றுநோய்கள் ஆரம்ப கட்டங்களில் அதிகமாகக் கண்டறியப்படுவதாலும் சிகிச்சையின் விளைவுகள் மேம்பட்டுள்ளதாலும், தைராய்டு புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கலாம் என்று விக்னேரி கூறுகிறார். இருப்பினும், இறப்பு விகிதம் 100,000 பேருக்கு சுமார் 0.5 ஆக நிலையானதாகவே உள்ளது, சில நாடுகளில் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் உள்ளன.
Getty Images சி.டி. ஸ்கேன்கள் போன்ற அதிக அளவிலான அயனியாக்கும் கதிர்வீச்சுடன் கூடிய நடைமுறைகளின் அதிகரிப்பு, பதிப்பு விகித உயர்வுக்குப் பங்களிக்கக்கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
உதாரணமாக, ஒரு ஆய்வு கலிபோர்னியாவில் 2000 முதல் 2017 வரை கண்டறியப்பட்ட 69,000 க்கும் மேற்பட்ட தைராய்டு புற்றுநோயாளிகளை ஆய்வு செய்தது. ஆராய்ச்சியாளர்கள், கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் இரண்டும் காலப்போக்கில் அதிகரித்துள்ளதைக் கண்டறிந்தனர். அந்த அதிகரிப்பு கட்டியின் அளவு மற்றும் புற்றுநோயின் நிலையோடு தொடர்பில்லாமல் இருந்தது, இது மிகச் சிறிய கட்டிகளின் மேம்பட்ட நோயறிதலைத் தவிர வேறு ஏதோ ஒன்று நடந்திருக்க வேண்டும் என்று காட்டுகிறது.
2017 இல், கிடாஹாராவும் அவரது குழுவும் 1974-2013 க்கும் இடையில் கண்டறியப்பட்ட 77,000 க்கும் மேற்பட்ட தைராய்டு புற்றுநோயாளிகளின் மருத்துவப் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். பெரும்பாலான பாதிப்புகள் தைராய்டு சுரப்பியில் சிறிய பாப்பிலரி கட்டிகளால் ஏற்பட்டாலும், உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருந்த பரவும் (metastatic) பாப்பிலரி புற்றுநோய்களும் அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தனர். தைராய்டு புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் அரிதானவை என்றாலும், இவை ஆண்டுக்கு 1.1% என்ற விகிதத்தில் அதிகரித்து வருவதையும் ஆய்வு காட்டியது.
கிடாஹாரா, "இது இந்த மிகவும் தீவிரமான கட்டிகளின் அதிகரிப்பைத் தூண்டக்கூடிய வேறு ஏதோ ஒன்று இருக்கலாம் என்று காட்டியது," என்கிறார்.
முக்கிய காரணம் என சந்தேகிக்கப்படுபவனவற்றில் உடல் பருமனும் ஒன்று, இது 1980 களில் இருந்து, குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் அதிகரித்து வருகிறது. அதிக எடைக்கும் தைராய்டு புற்றுநோய் அபாயத்திற்கும் இடையே ஒரு இணைப்பு இருப்பதாக ஆரோக்கியமான மக்களுடன் தொடங்கி ஒரு நீண்ட கால அடிப்படையில் நடத்தப்படும் குழு ஆய்வுகள் காட்டுகின்றன. அதிக பிஎம்ஐ (BMI) கொண்ட நபர்கள் ஆரோக்கியமான பிஎம்ஐ கொண்ட நபர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களின் வாழ்நாளில் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு 50% க்கும் அதிகமாக வாய்ப்புள்ளது.
அதிக பிஎம்ஐ தீவிரமான புற்றுநோய் கட்டி அம்சங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. உதாரணமாக, பாதிப்பு கண்டறியப்படும்போது பெரிய அளவில் இருப்பது அல்லது புற்றுநோய் எளிதில் பரவக்கூடிய ஒரு பிறழ்வைக் கொண்டிருப்பது.
"எங்கள் ஆராய்ச்சியில், அதிக பிஎம்ஐ, தைராய்டு புற்றுநோய் தொடர்பான மரணத்தின் அதிக அபாயத்துடன் தொடர்பு இருப்பதையும் கண்டோம்," என்று கிடாஹாரா கூறுகிறார். "எனவே இது வெறும் பாதிப்பு கண்டறிதல் சார்பு அல்ல என்பதற்கு இது ஒரு வலுவான ஆதாரமாக இருந்தது. அதிக பிஎம்ஐ கொண்டவர்கள் மருத்துவரிடம் சென்று தைராய்டைச் சோதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அதிக தைராய்டு புற்றுநோய் அவர்களுக்கு இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதிக பிஎம்ஐ இருப்பது தைராய்டு புற்றுநோய் உருவாவது மற்றும் வளர்ச்சியுடன் அதிக தொடர்பு கொண்டிருப்பதற்கான ஆதாரம் இது."
இருப்பினும், உடல் பருமன் எப்படித் தைராய்டு புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. உடல் பருமன் கொண்டவர்களுக்குத் தைராய்டு செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அறியப்படுகிறது. உதாரணமாக, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தைராய்டு தூண்டுதல் ஹார்மோனின் (TSH) அதிக அளவு கொண்ட நபர்கள் அதிக பிஎம்ஐயையும் கொண்டிருக்கிறார்கள்.
"சாத்தியமான அடிப்படை வழிமுறைகளைப் பற்றி நாங்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை, ஏனெனில் இது இன்னும் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட ஒரு பகுதி, ஆனால் இது பல காரணிகளால் இருக்கலாம்," என்று கிடாஹாரா கூறுகிறார்.
"உடல் பருமன் பல உடலியல் விளைவுகளைக் கொண்டுள்ளது, எனவே வீக்கம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் தைராய்டு செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் தைராய்டு புற்றுநோயின் வளர்ச்சியைத் தூண்டுவதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம்."
Getty Images தீயணைப்பு நுரை போன்ற பொதுவான பொருட்களில் காணப்படும் உட்சுரப்பிச் சீர்குலைக்கும் ரசாயனங்களும் (Endocrine-disrupting chemicals) தைராய்டு புற்றுநோய் அபாயத்தில் ஒரு விளைவைக் கொண்டிருக்கலாம்
பிற விஞ்ஞானிகள், சாதாரண வீட்டுப் பொருட்கள் மற்றும் கரிமப் பூச்சிக்கொல்லிகளில் காணப்படும் "உட்சுரப்பிச் சீர்குலைக்கும் ரசாயனங்கள்" (endocrine disrupting chemicals - EDCs) காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இந்த ரசாயனங்கள் உடலின் ஹார்மோன்களைப் பிரதிபலிக்கவோ, தடுக்கவோ அல்லது அவற்றில் குறுக்கிடும் தன்மையுடையவையாகவோ இருக்கும். உதாரணமாக, பெர்ஃப்ளூரோஆக்டனோயிக் அமிலம் (PFOA) மற்றும் பெர்ஃப்ளூரோஆக்டேன்சல்பானிக் அமிலம் (PFOS) ஆகியவை இதில் அடங்கும். இவை சமையல் பாத்திரங்கள் மற்றும் காகித உணவுப் பொதிவு முதல் தனிநபர் பராமரிப்புப் பொருட்கள், தரைவிரிப்புகள் மற்றும் தீயணைக்கும் நுரை வரை பல பொருட்களில் காணப்படுகின்றன. இருப்பினும், இத்தகைய ரசாயனங்களைத் தைராய்டு புற்றுநோயுடன் இணைக்கும் சான்றுகள் கலவையாகவே உள்ளன.
பிற ஆய்வுகள், சுவடு கூறுகள் (trace elements) ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன. சுவடு கூறுகள் என்பவை உயிரினங்களுக்கு மிகச் சிறிய அளவில் மட்டுமே தேவைப்படும் ரசாயனத் தனிமங்கள் ஆகும். இருப்பினும், அவை தைராய்டு செயல்பாட்டிற்கு முக்கியமானவை.
"தீவு நாடுகளில் தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதைக் காண்கிறோம்," என்று கிடாஹாரா கூறுகிறார்.
"எரிமலை வெடிப்புகள் தொடர்பான சுவடு கூறுகளைப் பற்றிய கருதுகோள்கள் உள்ளன. அதனால் துத்தநாகம் (zinc), காட்மியம் (cadmium), வனேடியம் (vanadium) போன்ற வேறு சில ரசாயனங்கள் இந்தச் சூழல்களில் அதிக தைராய்டு புற்றுநோய் விகிதங்களுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் நேரடித் தொடர்பை காட்டுவதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட அதிக தொற்றுநோயியல் ஆய்வுகள் எதுவும் இல்லை."
இருப்பினும், நோயறிதலுக்கான மருத்துவ ஸ்கேன்களிலிருந்து வரும் கதிர்வீச்சும் மற்றொரு காரணமாக இருக்கலாம் என்று கிடாஹாரா நம்புகிறார். குறிப்பாக அமெரிக்காவில் 80களிலிருந்து சி.டி. (CT) மற்றும் எக்ஸ்ரே ஸ்கேன்கள் பயன்படுத்தப்படும் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது, இதில் குழந்தைகளுக்கு எடுக்கப்படும் சி.டி. ஸ்கேன்களும் அடங்கும். இந்த சி.டி. ஸ்கேன்கள் தைராய்டு சுரப்பிக்கு ஒப்பீட்டளவில் அதிக அளவிலான கதிர்வீச்சை அளிக்கின்றன.
ஜப்பானிய அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் மீதான ஆய்வுகள் போன்ற பிற ஆய்வுகளிலிருந்து கதிர்வீச்சுக்கும் தைராய்டு புற்றுநோய்க்கும் இடையிலான உறவைப் பற்றி நாம் அறிந்திருப்பதன் மூலம், அத்தகைய கதிர்வீச்சின் விளைவுகளை நாம் மாதிரிப்படுத்தலாம். உதாரணமாக, ஒரு சமீபத்திய ஆய்வு, இனிவரும் காலங்களில், ஆண்டுக்கு அமெரிக்காவில் சுமார் 3,500 தைராய்டு புற்றுநோய்கள் சி.டி. ஸ்கேன் விகிதங்களால் நேரடியாக ஏற்படக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது.
"இளம் தைராய்டு சுரப்பி, வயதானவர்களின் தைராய்டு சுரப்பியை விடக் கதிர்வீச்சு வெளிப்பாட்டின் விளைவுகளுக்கு அதிக பாதிக்கும் தன்மை கொண்டது," என்று கிடாஹாரா கூறுகிறார். "எனவே சி.டி. ஸ்கேன்களின் அதிகரித்து வரும் பயன்பாடு அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் உயர்வுக்குப் பகுதி பங்களிக்கக்கூடும் என்பது சாத்தியமே."
இந்த அனைத்துக் காரணிகளும் ஒன்றிணைந்த பங்கைக் கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது.
"நாம் சுற்றுச்சூழல், வளர்சிதை மாற்றம், உணவு மற்றும் ஹார்மோன் தாக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, அத்துடன் அடிப்படை மரபணு ஏற்புத்திறனுடன் தொடர்பு கொள்ளக்கூடிய பல காரணி நிகழ்வைப் பார்க்கிறோம்," என்று ரோமன் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு