முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் அஜித்குமார் உட்படப் பல முக்கியப் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் இன்று (நவ. 17) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மிரட்டல் பட்டியலில், நடிகை குஷ்பூ, இயக்குநர் மற்றும் நடிகர்களான அரவிந்த்சாமி, கங்கை அமரன், ஏ.ஆர். முருகதாஸ், இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா ஆகியோரின் வீடுகளும் அடங்கும் என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் மிரட்டலைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பிரபலங்களின் வீடுகளில் உடனடியாகப் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரச் சோதனைகளை மேற்கொண்டனர். எனினும், சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் விடுத்த நபர் யார், எதற்காக மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.