சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்கு ஒரு வினோதமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர். தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருந்தினர்கள் தங்களது அறையில் சிங்கக்குட்டியுடன் விளையாடலாம் என அறிவிக்கப்பட்ட இந்த சேவைக்கு, விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
சீனாவின் ஜிமு நியூஸ் வெளியிட்ட செய்தியின்படி, சீனாவில் உள்ள ஒரு ரிசார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு 'லயன் கப் வேக்-அப் சர்வீஸ்' (Lion Cub Wake-Up Service) என்ற பெயரில் சேவையை வழங்கி வருகிறது.
இதற்காக ஒரு இரவு தங்குவதற்கு 628 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,804) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
lion cub
இந்த சேவையின் கீழ், தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை, சுமார் ஏழு நிமிடங்கள் சிங்கக்குட்டி விருந்தினர்களின் அறைக்குக் கொண்டுவரப்படும். இந்த நேரத்தில் அவர்கள் அதனுடன் விளையாடலாம்.
இந்த அனுபவத்தைப் பெற விரும்பும் விருந்தினர்கள் சேவை ஒப்பந்ததில் கையெழுத்திட வேண்டுமாம். அதில் சிங்கக்குட்டி அறைக்குள் இருக்கும்போது, ஹோட்டல் ஊழியர் ஒருவர் தொடர்ந்து கண்காணிப்பார் என்றும், விருந்தினர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஹோட்டல் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வினோத சேவை குறித்த செய்தி பரவியதும், இதற்கு எதிரான விமர்சனங்கள் வலுத்துள்ளன.
சிங்கக்குட்டியை அதன் இருப்பிடத்திலிருந்து பிரித்து, ஒரு அறைக்குள் அனுப்புவது விலங்குகள் காட்சிப்படுத்தல் சட்டத்தின் கீழ் வருமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
சீனாவில் இது போன்று நடப்பது முதல்முறையல்ல. கடந்த ஜூன் மாதம், சோங்கிங் நகரில் உள்ள ஒரு ஹோட்டல் 'ரெட் பாண்டா வேக்-அப் சர்வீஸ்' என்ற சேவையை அறிமுகப்படுத்தியது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவியதும், உள்ளூர் வனத்துறை உடனடியாகத் தலையிட்டு அந்தச் சேவையை நிறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.