Varanasi: எனக்கு ராமரை பிடிக்காது!.. அப்ப சொல்லி இப்ப மாட்டிக்கிட்டாரே ராஜமவுலி!..
CineReporters Tamil November 17, 2025 07:48 PM

தெலுங்கில் ஏற்கனவே சில படங்களை இயக்கியிருந்தாலும் மகதீரா, நான் ஈ போன்ற படங்களால் கவனிக்கப்பட்டவர் ராஜமவுலி. தமிழில் ஷங்கரைப் போல தெலுங்கில் பேண்டஸி கலந்த பிரம்மாண்ட படங்களை இவர் இயக்கி வருகிறார்.அதிலும் இவர் இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் பல மொழிகளிலும் வெளியாகி வசூலை அள்ளியதோடு ராஜமவுலியை இந்திய அளவில் பிரபலமாக்கியது.

அடுத்து ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் வைத்து இவர் இயக்கிய RRR படமும் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. தற்போது மகேஷ்பாபு வைத்து வாரணாசி என்கிற பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ராவும், வில்லனாக பிரித்திவிராஜும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது.

வானத்திலிருந்து ஒரு எரிகல் பூமியில் விழுவது போலவும் கதாநாயகன மகேஷ்பாபு தென் ஆப்பிரிக்கா, அண்டார்டிகா கடல், ராமாயண யுத்தம் நடந்த இலங்கை போன்ற இடங்களில் இருப்பது போலவும் ராமர் அம்பை விட அதிலிருந்து வரும் வெளிச்சம் வாரணாசியில் கங்கை நதியில் விழுவது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த டைட்டில் டீசர் வீடியோக்காகவே கிராபிக்ஸ் டீம் பல மாதங்கள் பணியாற்றியதாக சொல்லப்படுகிறது.

RRR படத்தின் இறுதிக் காட்சியில் ராம்சரணை ராமர் போலவே காட்டி இருந்தார் ராஜமவுலி. டைட்டில் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய ராஜமவுலி ‘வாரணாசியில் இராமயணத்தின் ஒரு பகுதியை படம் பிடித்திருக்கிறேன். முதலில் எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் மகேஷ் பாபுவை வைத்து போட்டோஷூட் நடத்தினேன். அவரை ராமருடைய ராமர் வேடத்தில் பார்த்ததும் எனக்கு புல்லரித்துவிட்டது. அதன்பின் எனக்கு நம்பிக்கை வந்தது’ என பேசி இருந்தார்.

கதாநாயகனை ராமர் போல ராஜமவுலி சித்தரித்ததை அடுத்து தமிழ்நாட்டில் பகுத்தறிவுவாதிகளும், திமுக ஆதரவாளர்களும் ‘ராஜமவுலி தொடர்ந்து சங்கி படமெடுக்கிறார். வட இந்தியாவில் வசூலை பெறுவதற்காகவே இராமாயணத்தை கையில் எடுத்திருக்கிறார். RRR படத்திலும் இதேதான். ஆனால் அது பெரிய நடிகர்கள் என்பதால் தப்பித்து விட்டது’ என்றெல்லாம் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஆனால் ‘ராமர் எனக்கு பிடிக்காது’ என ராஜமவுலியே சொன்ன சம்பவம் 15 வருடங்களுக்கு முன்பு நடந்தது. 2011 ஆம் வருடம் டிவிட்டரில் ஒரு ரசிகர் ராஜமவுலிக்கு ‘ராம நவமி’ வாழ்த்து சொன்னார். அதற்கு ரிப்ளை செய்த ராஜமவுலி ‘நன்றி.. ஆனால் எனக்கு ராமரை பிடிக்காது.. கடவுள் அவதாரங்களில் எனக்கு கிருஷ்ணரை மட்டுமே பிடிக்கும்’ என பதில் அளித்திருந்தார். அந்த ஸ்கிரீன்ஷாட்டை தேடி எடுத்து ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.