டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!
Seithipunal Tamil November 17, 2025 09:48 PM

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) சோதனை நடத்தியது. இதில் ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தப் பறிமுதலை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டதுடன், இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவில் திருத்தம் கோரி, அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனு இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

மேலும், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து சோதனை மூலம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை உடனடியாக திரும்பி அளிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம், அமலாக்கத்துறைக்கு இந்த வழக்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.