நாடு முழுவதும் பெண்கள் மற்றும் முதியவர்களை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. கைது செய்ய வீட்டிற்கு போலீஸாரை அனுப்புவோம் என்று பெண்களை மிரட்டியே இக்கும்பல் காரியத்தைச் சாதித்து வருகிறது.
பெங்களூரைச் சேர்ந்த 57 வயது பெண் 6 மாதத்தில் இக்கும்பலிடம் ரூ.31.83 கோடி அளவுக்கு இழந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி அப்பெண்ணிற்கு முதல் முறையாக ஒருவர் போன் செய்து, தான் டி.எச்.எல் கூரியரில் இருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் மும்பை அந்தேரியில் இருந்து ஒரு பார்சல் புக்கிங் செய்யப்பட்டுள்ளது என்றும், அதில் 4 பாஸ்போர்ட், 3 கிரெடிட் கார்டு, எம்.டி போதைப்பொருள் போன்றவை இருப்பதாகத் தெரிவித்தார்.
அதற்கு அப்பெண் தான் மும்பைக்கு வந்ததில்லை என்று தெரிவித்தார். உடனே அந்த நபர் உங்களது பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதோடு இது குறித்து சைபர் பிரிவு போலீஸார் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் போன் காலை வேறு ஒருவருக்கு டிரான்ஸ்பர் செய்தார். அந்த நபர் தன்னை சி.பி.ஐ அதிகாரி என்று கூறிக்கொண்டு, "உங்களது பெயரை கிரிமினல்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். உங்களது வீடு கண்காணிக்கப்படுகிறது. உங்களைக் கைது செய்ய உள்ளூர் போலீஸாரை அனுப்புவோம்" என்று மிரட்டினார்.
அவரிடம் இரண்டு ஸ்கைப் ஐடிகளைத் தொடங்குமாறு கூறினர். அதன் மூலம் வீடியோ காலில் வந்த நபர் தன்னை மோஹித் ஹண்டா என்று கூறிக்கொண்டு உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து கண்காணிப்பதாகத் தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு மற்றொருவர் வீடியோ காலில் வந்து தன்னை சிபிஐ அதிகாரி பிரதீப் சிங் என்று அறிமுகம் செய்து கொண்டு அப்பெண்ணைக் கைது செய்யப்போவதாக மிரட்டினார்.
கோவை டாக்டரை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.2.9 கோடி பறிப்பு; தனியறையில் இருந்தவரை மீட்ட போலீஸார்மேலும் இப்பிரச்னையிலிருந்து விடுபடவேண்டுமானால் அனைத்து சொத்து விபரங்களையும் பரிசீலனைக்காகத் தாக்கல் செய்யும்படி கூறியுள்ளார். செப்டம்பர் 24ம் தேதியிலிருந்து அக்டோபர் 22ம் தேதி வரை அனைத்து வங்கி தகவல்களையும் அவர்களிடம் அப்பெண் தெரிவித்தார்.
அதில் 90 சதவீத சொத்துக்களைத் தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும்படியும் விசாரணைக்குப் பிறகு திரும்பக் கொடுத்துவிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். அவர்கள் கேட்டுக்கொண்ட படி தனது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கில் அப்பெண் டெபாசிட் செய்தார்.
இது குறித்து அப்பெண் கூறுகையில், ''அவர்கள் சொன்ன படி பணத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்திய பிறகு கிளியரன்ஸ் லட்டர் ஒன்றை அனுப்பினர். அதன் பிறகுதான் எனது மகனின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்றேன். அவர்களின் மிரட்டலால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி ஒரு மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டேன்.
டிஜிட்டல் குற்றவாளிகள்
அப்படி இருந்தும் தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருந்தனர். அதோடு ஏற்கனவே நான் அனுப்பிய பணத்தைத் திரும்ப அனுப்புவதாகத் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பணத்தை அனுப்பாமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தனர்.
கடந்த மார்ச் 26ம் தேதியோடு அவர்களுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. மொத்தம் 187 பரிவர்த்தனையில் ரூ.31.83 கோடியை அனுப்பினேன். எனது மகனின் திருமணம் எந்தவித பிரச்னையும் இன்றி நடக்க வேண்டும் என்பதற்காக நான் காத்திருந்தேன்'' என்று தெரிவித்தார்.
அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அப்பெண் மிகவும் தாமதமாகப் புகார் செய்து இருப்பதால் பணத்தை மீட்பது மிகவும் சவாலான காரியம் என்று சைபர் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
Cyber Crime: மும்பையை அச்சுறுத்தும் டிஜிட்டல் கைது; 218 பேரிடம் ரூ. 112 கோடி பறிப்பு; திணறும் போலீஸ்