பிக் பாஸ் 9: திவாகர் ஆசையை நிறைவேற்றிய விஜய் சேதுபதி!
Seithipunal Tamil November 18, 2025 02:48 AM

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது ஆறாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஐந்தாவது வார இறுதியில் இருந்து போட்டியாளரான மருத்துவர் திவாகர் அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளார். இவரை ரசிகர்கள் 'வாட்டர் மெலன் ஸ்டார்' என்றும் அழைத்துவந்தனர்.

கடந்த வார நாமினேஷன் பட்டியலில் சுபிக்‌ஷா, வியானா, விக்ரம், ரம்யா, திவாகர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், குறைந்த வாக்குகளைப் பெற்ற காரணத்தால் மருத்துவர் திவாகர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

வழக்கமாக வெளியேறும் போட்டியாளர் யார் என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் வரை சஸ்பென்ஸாக வைக்கப்படும் நிலையில், திவாகரின் வெளியேற்றம் முன்னோட்ட வீடியோவிலேயே அறிவிக்கப்பட்டது. அவருக்கு இருந்த மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கருத்தில் கொண்டு, டிஆர்பி குறையாமல் இருக்க இந்த அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முக்கியமாக, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபோது திவாகரின் நீண்ட நாள் ஆசையை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி நிறைவேற்றினார். பிக் பாஸ் தொடக்கத்தில் திவாகர், விஜய் சேதுபதியிடம் முத்தம் கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த சேதுபதி, "உங்கள் ஆட்டம் பாராட்டப்படும்போது தருவேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி, திவாகர் வெளியேறியபோது மேடையில் அவருக்கு முத்தம் கொடுத்து அரவணைத்து, வெளி உலக வாழ்க்கைக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.