பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் அரசியல் கணிப்புகளை தலைகீழ் புரட்டும் வகையில் அமிந்துள்ளன. பா.ஜ.க–ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, இமாலயத்தை மிஞ்சும் பெருவெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இதற்கு நேர்மாறாக, ராஷ்டீரிய ஜனதாதளம்–காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மூழ்கிய கப்பல் போல் முழுமையான தோல்வியை சந்தித்தது. குறிப்பாக, பாரம்பரிய தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிட்ட 61 தொகுதிகளில் மாத்திரம் 6 தொகுதிகள் தான் கிடைத்தது, இது அந்தக் கட்சிக்கு ஆறுதல் அளிக்காத ஒரு “ஒற்றை இலக்க உயிர்ப் பிழைப்பு” மட்டுமே.இந்த அவமானகரமான தோல்வி, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணிக்குள் கூட இது பெரிய பிளவை உருவாக்கத் தொடங்கி விட்டது.மேலும் அதிர்ச்சி என்னவென்றால், பீகாரில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் மனநிலையும் குழப்பத்தால் ஆட்கொள்கிறது. “இன்னும் காங்கிரசில்தான் இருக்க வேண்டுமா? அல்லது எதிர்காலத்திற்காக வேறு பாதை தேட வேண்டுமா?” என்ற யோசனை அவர்களில் பலரிடம்மூட்டியுள்ளது.
இந்நிலையில், சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளத்தில் இணைவதற்கான ரகசிய ஆலோசனைகள் நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு ஜோராக இருக்கிறது.ஒரு எம்.எல்.ஏ. கூட ஏற்கனவே யு.ஜே.டி முக்கியத் தலைவருடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது காங்கிரஸ் மேலிடத்திற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.பீகாரில் வெறும் 6 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளது. அவர்களும் ஏதேனும் நேரத்தில் கட்சி தாவினால், காங்கிரஸ் பீகாரில் முழுமையாக அழியும் அபாயம் உள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைமையகம் அவர்களை சமாதானப்படுத்த தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது.
அதே சமயம், ஐக்கிய ஜனதாதளமும் காங்கிரஸை பீகாரில் முழுமையாக முறியடிக்க வேண்டும் என்பதில் அரசியல் வேலைத்திட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தக் கட்சியும் செயல்பாடுகளை ரகசியமாக முன்னெடுத்து வருவதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காததால், பீகார் அரசியலில் “எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய சஸ்பென்ஸ்” தொடர்ந்து நிலவுகிறது.