மகாராஷ்டிராவின் நாசிக், புனே, சோலாப்பூர், சாங்கிலி மாவட்டங்களில் திராட்சை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அதிக அளவில் இருக்கின்றன.
ஆனால் இந்த ஆண்டு பருவ மழை முடிந்த பிறகும் தொடர்ந்து பெய்த பருவம் தவறிய மழையால் திராட்சை கொடிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 70 சதவீதம் அளவுக்கு திராட்சை விளைச்சல் குறைந்துள்ளது.
திராட்சை விளைச்சல்
இந்தியாவின் திராட்சை தலைநகரமான நாசிக் மாவட்டத்தில் மே 9ம் தேதியிலிருந்து போதிய அளவு சூரிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் திராட்சை செடிகளில் பூப்பதும் காய் பிடிப்பதும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் இருந்து ஏப்ரல் வரை நாசிக் மாவட்டத்தில் மட்டும் 15 லட்சம் டன் திராட்சை விளைவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பாதி செடிகள் பூக்கவில்லை.
இது குறித்து நாசிக் விவசாயிகள் சங்க தலைவர் கைலாஷ் போஸ்லே கூறுகையில்,'' மே மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை அளவுக்கு அதிகமாக மழை பெய்ததால் 70 சதவீத திராட்சை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது'' என்றார். மாநிலம் முழுவதும், உற்பத்தி 50 சதவீதம் குறைந்துள்ளது.
சூரிய ஒளி கிடைக்கவில்லைசாங்லியில் 50 சதவீதம், புனேவில் 40 சதவீதம், சோலாப்பூர் மற்றும் லாத்தூரில் சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளது. பூக்கள் பூக்கவும், பழங்களின் வளர்ச்சிக்கும் ஏப்ரல் மாதத்தில் செடிகளை வெட்டிவிட்ட பிறகு திராட்சைக் கொடிகளுக்கு சூரிய ஒளி தேவைப்படுகிறது.
தொடர்ச்சியான மழையால் பயிர்களுக்கு சூரிய ஒளி கிடைக்கவில்லை, ஒளிச்சேர்க்கை பலவீனமடைந்தது. மேலும் ஈரப்பதம் மற்றும் பூஞ்சை தொற்று காரணமாக உருவான பல கொத்துக்கள் அழுகிவிட்டன.
வழக்கறிஞர் ராம்நாத்
நாசிக்கில் உள்ள நிபாட் தாலுகாவின் ஷிவாடி என்ற கிராமத்தை சேர்ந்த திராட்சை விவசாயியும், வழக்கறிஞருமான ராம்நாத் ஷிண்டே தனது முழு திராட்சை செடிகளையும் அழித்துவிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நேரத்தையும் பணத்தையும் வீணாக்குவதில் அர்த்தமில்லை. மீதமுள்ள பயிர்களை நோய் தாக்கி இருக்கிறது. மருந்து தெளிக்கும் செலவுகள் அதிகமாக இருக்கிறது. தெளிப்பதற்கு ஏக்கருக்கு சுமார் ரூ.3000 செலவிடுகிறோம்.
Grapes: செல்களின் வீக்கத்தைத் தடுக்கும்; புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திராட்சை!ஆனால் அரசு ரூ. 2000 மட்டுமே வழங்குகிறது. இதற்கு முன்பு எப்போதும் திராட்சை விவசாயிகள் தற்கொலை செய்ததாக கேள்விப்பட்டதில்லை.
ஆனால் இந்த ஆண்டு திராட்சை விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர், ”என்று அவர் கூறினார். இவரைப்போன்று மேலும் பல விவசாயிகள் செலவு செய்ய விரும்பாமல் செடிகளை வெட்டி இருக்கிறார்கள்.
நாசிக் மாவட்டத்தில் சுமார் 1.75 லட்சம் ஏக்கர் பரப்பளவில் திராட்சை பயிரிடப்பட்டுள்ளது, இதில் நிபாட்டில் 60,000 ஏக்கரும், திண்டோரியில் 45,000 ஏக்கரும், நாசிக் தாலுகாவில் 32,000 ஏக்கரும், சந்த்வாட்டில் 18,000 ஏக்கரும் அடங்கும். சதானாவில் ஆரம்பத்தில் அறுவடைக்கு வரும் வகையில் 3000 ஏக்கர் பயிரிடப்பட்டுள்ளது.
திராட்சை விளைச்சல்
திராட்சை விளைச்சல் பாதிப்பால் கடன் வாங்கி விவசாயம் செய்த 9 திராட்சை விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாட்டில் திராட்சை உற்பத்தியில் 80 சதவீதம் மகாராஷ்டிராவில் விளைகிறது.
அதில் நாசிக் மற்றும் சாங்கிலியில் விளையக்கூடிய 90 சதவீத திராட்சை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.3000 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. ஆனால் இந்த ஆண்டு அதிகப்படியான மழையால் வெளிநாட்டு ஏற்றுமதியும், உள்ளூர் சப்ளையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த விவசாயி ஒருவர், ''எப்போதும் இல்லாத அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கம் சேறாக மாறியது போன்று உணர்கிறோம். எங்களுக்கு உணவளிக்க வேண்டிய மழை எங்களது பயிரை நாசம் செய்துவிட்டது'' என்று தெரிவித்தார்.
இழப்பு அதிகமாக இருப்பதால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!